குடிமராமத்து

குடிமராமத்து [1] இந்தியாவில் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்துக்கு பின்பு வரைகூட, இருந்து வந்த ஒரு மராமத்துப் பணியாகும். இதில் கோடைகாலங்களில், வேளாண் குடிமக்களில் வீட்டுக்கு ஒருவர் என வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தியும் மற்றும் அகலப்படுத்தியும் பணிகள் மேற்கொண்டனர். மேலும் பழுதடைந்த மடைகளை பழுது நீக்குவர். குடிமக்களின் இப்பணியை குடிமராமத்துப் பணி என்று அழைப்பர். ஏரிகள் போன்றவை சுதந்திர இந்தியாவில் பொதுப்பணித்துறை வசம் சென்றபின் குடிமாரமத்தப்பணிகள் இல்லாமல் போயின.

குடிமராமத்துப் பணிகள்

குடிமராமத்தின்போது ஏரியின் உட்பரப்பில் கரையின் உயரத்தைப் போல இரு மடங்கு தூரம் தள்ளி தூர் வாரத் தொடங்குவார்கள். அதாவது கரையின் உயரம் 10 மீட்டர் எனில் ஏரியின் உள்பகுதியில் 20 மீட்டர் தள்ளி தூர் வாருவார்கள். கரையின் அடிப்பகுதி பலவீனம் ஆகி அதனால் ஏரிக்கரை உடைந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வார்கள். இதன் பெயர் தாக்கு எடுப்பது என்று பெயர். இப்படி எடுக்கப்படும் ஏரியின் மண், மழைக் காலத்தில் ஏரி அறுந்து ஓடியிருக்கும் பள்ளங்களில் முதலில் கொட்டி சமப்படுத்துவார்கள் மேலுமுள்ள மண்ணைக் கொண்டு கரைகளை பலப்படுத்துவர். இந்தப் பணிகளுக்கு போக மீதம் இருக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மண்பாண்டங்கள் செய்வோர், வீடு கட்டுவோர் மற்றும் ஊரின் இதர தேவைகளுக்கும் மண் பயன்படுத்தப்படும். அடுத்ததாக, ஏரியில் வளர்ந்திருக்கும் புதர்கள், முள் செடிகள், மழைக் காலத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மதகுகள், கலுங்குகளில் இருக்கும் அடைப்புகள் நீக்கப்படும். இவைதான் குடி மராமத்தின் அடிப்படைப் பணிகள்.[2]

பயன்கள்

ஆண்டு தோறும் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்படுவதால், நீர் நிலைகளில் கூடுதல் மழை நீரைத் தேக்கி வைப்பதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. தூர் வாருவதற்காக தோண்டப்பட்ட சத்தான வண்டல் மண், வயல்களில் உரமாக இடப்படுகிறது.

இந்திய விடுதலைக்குப் பின்

இந்திய விடுதலைக்குப் பின்னர் குடிமராமத்துப் பணிகள், மாநில அரசுகளின், பொதுப் பணித் துறையின் கீழ் செயல்படும் நீர் பாசானத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு

2017-இல் வேளாண் மக்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளைத் தூர்வாரி, பராமரிக்கும் குடிமராமத்து திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்

  1. குடிமராமத்து
  2. "உள்ளாட்சி: குடிமராமத்து திட்டம்... குடிமக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்!". கட்டுரை. தி இந்து (2017 மார்ச் 21). பார்த்த நாள் 22 மார்ச் 2017.
  3. மக்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை பராமரிக்கும் ‘குடிமராமத்து’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: தமிழக நிதித்துறை கூடுதல் செயலர் தகவல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.