கீழவளவு

கீழவளவு (Keelavalavu அல்லது Kilavalavu அல்லது Kizhavalavu) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் கீழவளவு ஊராட்சியில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் மதுரையில் இருந்து 43 கிலோமீட்டர்கள் (27 மைல்) தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மலைப்பாறையான பஞ்சபாண்டவர் மலை அல்லது பஞ்சபாண்டவர் படுக்கைக்காக இவ்வூர் அறியப்படுகிறது. இந்தக் கல் படுக்கைகள், சிற்பங்கள் போன்றவை சைனத்துடன் சம்மந்தப்பட்டவை.

விளக்கம்

கீழவளவு சமணச் சிற்பங்கள்
பஞ்சபாண்டவர் படுக்கைகள்

கீழவளவு கிராமம் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும். இது மேலூரில் இருந்து 11 கிலோமீட்டர்கள் (6.8 மைல்) தொலைவில் உள்ளது. 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்த ஊரில் 5686 பேர் வசிக்கின்றனர், இவர்களில் 2847 பேர் ஆண்கள், 2839 பேர் பெண்கள் ஆவர்.[1] இந்த கிராமத்திலுள்ள உயர்தரமான கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.[2][3]

பஞ்சபாண்டவர் மலை

பஞ்சபாண்டவர் மலை இக்கிராமத்தில் மேலூர் திருப்பத்தூர் சாலையில் உள்ளது.[4] பண்டைய தமிழகத்தில் சைனமதம் தழைத்தோங்கிய காலத்தில் இந்த மலையில் உள்ள குகைகளை சமணத் துறவியர் தங்கள் வாழிடமாக மாற்றிக்கொண்டனர்.[5] இந்த மலைப்பாறைகள் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட நினைவிடங்களாக இந்தியத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.[4][6]

குகையில் சமண புடைப்புச் சிற்பங்களாக பாகுபலி, மற்றும் கடைசி தீர்த்தங்கரான மகாவீரர் உள்ளிட்ட ஒன்பது தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[5] மேலும் இங்கு தமிழ்-பிராமி மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகளும் உள்ளன.[7] இந்தத் தமிழ்-பிராமி எழுத்துக்கள் 1903 இல் வெங்கோப ராவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன.[8] இந்தக் கல்வெட்டுகள் வலதிலிருந்து இடதாகவும், மேலிருந்து கீழாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான கல்வெட்டுகள் குன்றக்குடி மலையில் மட்டுமே காணப்படுகிறன.[5][9] சைனத் துறவிகள் பயன்படுத்திக் கொள்வதற்காக, குகைகளில் கல் படுக்கைகள் உள்ளன. குகையில் உள்ள ஒரு கல்வெட்டு இந்த கல் படுக்கைகள் தொண்டியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களால் வடிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.[5]

கல் உடைப்பு

குன்று கிரானைட் கற்களை கொண்டதாக உள்ளது. இந்தக் குன்றில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதால் இங்குள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளில் சில அழிவுற்றன.[7][10] இதனால் 2008 ஆம் ஆண்டு இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்விளைவாக 2011 இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இந்த இடத்தில் 51 ஏக்கர் (21 ஹெக்டேர்), பரப்பளவில் உள்ள கிரானைட் பாறைகளை வெட்டி எடுக்க தமிழ்நாடு கனிம நிறுவனம் (Tamin) மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தடை விதித்து,[11][12] மலையைச் சுற்றியுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சைன நினைவுச்சின்னங்களைக் காப்பதற்காக தடைவிதிப்பதாகக் கூறியது.[13][14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.