கிளாரினெட்
கிளாரினெட் (clarinet) துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது ஒரு மேற்கத்திய இசைக்கருவியெனினும் கருநாடக இசைக்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

உலகின் முதல் நாகரிகமான எகிப்திய நாகரிக காலகட்டத்தில் இலையை சுருட்டி குழல் போலாக்கி ஊதினார்கள். பின்னர் அது 12ஆம் நூற்றாண்டில் பிரான்சில் சலூமூ (Chalumeau) எனும் வாத்தியக் கருவியாக வடிவெடுத்தது. 17ஆம் நூற்றாண்டில் அது மேலும் புது வடிவெடுத்தது. பின்னர் அதில் ஒரு பிரிவாக, கிளாரினெட் என்னும் வாத்தியக் கருவி, 18ஆம் நூற்றாண்டில் 13 ஆகஸ்ட் 1655 இல் ஜெர்மனியில் லைப்சிக் என்னுமிடத்தில் பிறந்த யொஹான் கிரிஸ்டோப் டென்னர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிளாரினெட், கிட்டத்தட்ட 66 முதல் 71 செமீ வரை நீளமும், 12,5 மிமீ தொடக்கம் 13 மிமீ வரை அகலமும் கொண்டது. இன்று இக்கருவியின் பயன் விரிவடைந்து தற்போது ஜாஸ் இசையிலும் பயன்படுத்தப்படுகிறது.
அமைப்பு
கிளாரினெட் ஏறக்குறைய நாதசுவரம் இசைக் கருவியின் வடிவத்தை ஒத்தது. ரீட் (Reed) என்று சொல்லப்படும் பகுதி கருவியின் முனையில் வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டிருக்கும். குழல் வெள்ளியினாலோ மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பல துளைகள் போடப்பட்டிருக்கும். அவற்றைத் தேவைக்கேற்ப மூடித் திறப்பதற்கு சாவிகள் துளைகளின் அருகிலேயே இணைக்கப்பட்டிருக்கும்.
கருநாடக இசையில்
19ஆம் நூற்றாண்டில் மகாதேவ நட்டுவனார் இக்கருவியை பரத நாட்டிய அரங்குகளில் சின்னமேளம் என்று சொல்லப்படும் இசைக்கருவிகளோடு முதன் முதலாக பயன்படுத்தினார்.