காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்

காற்பந்து உலகக் கோப்பைக்கான வெற்றிக் கிண்ணமானது பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பினரிடையே நடைபெறும் உலகளவிலான காற்பந்தாட்டப் போட்டியில் வெற்றியடையும் அணிக்கு வழங்கப்படும் ஒரு தங்கத்தினாலான வெற்றிக் கிண்ணமாகும். 1930 இல் உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் ஆரம்பித்த காலம்தொட்டு 1970 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்டு வந்த வெற்றிக் கிண்ணம் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை (Jules Rimet Trophy) என அழைக்கப்பட்டது. 1970ம் ஆண்டில் பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்தக் கோப்பை பிரேசிலிடம் நிரந்தரமாக தங்கி விட்டது. 1983-ஆம் ஆண்டில் திருடுபோன இக்கோப்பை மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.

1974ம் ஆண்டின் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக இத்தாலிய கலைஞரான 'சில்வியோ கஸ்சானிகா' வடிவமைத்த பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின், காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் (FIFA World Cup Trophy) தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை வெற்றியாளர்களின் பெயர்களை பொறித்து வைக்க இயலும்.

இக்கோப்பையை பன்னாட்டு கால்பந்து குழுமம் (FIFA) தன்னிடமே வைத்துக் கொள்ளும். வெற்றியடைந்த அணி இதே போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பிரதியை (replica) எடுத்துச் செல்லும். தற்போது இக்கோப்பையை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள், 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை வென்ற செருமானிய அணியினர் ஆவர்.

ஜூல்ஸ் ரிமெட் கோப்பை

இந்த உலகக் கோப்பையானது 1929இல் வடிவமைக்கப்பட்டது. கிரேக்கப் புராணத்தில் குறிப்பிடப்படும் வெற்றி தேவதையான நைக், சிறகுகளை விரித்தபடி, தன் இரு கைகளைத் தூக்கியிருப்பதுபோல, வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட சிலையே இக்கோப்பையாகும். இதனைத் தாங்கும் பீடமானது விலை மதிப்புமிக்க நிலப் படிகக் கற் பாறையால் செதுக்கப்பட்டிருந்தது.[1]

1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக உலகக்கோப்பை (அ) கோபா டு முன்டே என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.

1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது.[2] பின்னர் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்டு திரும்பக் கிடைக்காமல் போனது.

உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்

1974 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை முன்னிட்டு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடை கொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.[3]

வெற்றியாளர்கள்

ஜூல்ஸ் ரிமெட் கோப்பை

உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்

நாடுஜூல்ஸ் ரிமெட் கோப்பைபுதிய கோப்பைமொத்தம்
பிரேசில்325
இத்தாலி224
செருமனி134
உருகுவை202
அர்கெந்தீனா022
இங்கிலாந்து101
பிரான்சு011
ஸ்பெயின்011
Total91120

மேற்கோள்கள்

  1. முகில் (2018 திசம்பர் 17). "களவு போன உலகக் கோப்பை!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 21 திசம்பர் 2018.
  2. "Jules Rimet Trophy". FIFA.com. Fédération Internationale de Football Association. பார்த்த நாள் 19 November 2007.
  3. "FIFA World Cup Trophy". FIFA.com. Fédération Internationale de Football Association. பார்த்த நாள் 19 November 2007.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.