காத்தவராய சாமி
காத்தவராய சாமி என்பவர் இந்து சமய காவல் தெய்வங்களில் ஒருவராவார். [1] இவர் குறித்தான காத்தவராயன் கதைப்பாடல், கூத்து வடிவில் கூறப்பட்டு வந்துள்ளது.
பிராமண பெண்ணை காதலித்து உடன்போக்காக சென்றமைக்காக அக்கால தர்மப்படி காத்தவராயன் கழுவேற்றம் எனும் தண்டனைப் பெற்றான். காத்தவராயன் கழுவேற்றப் பட்டதால் கழுமரமே காத்தவராயனாக வழிபடப் படுகிறது.
தொன்மக் கதை
முன்ஜென்ம கதை
சிவபெருமானும், பார்வதியும் கங்கை நதிக் கரையில் தோட்டம் அமைக்கின்றனர். அந்தத் தோட்டத்திற்குப் பாதுகாவலுக்காக ஒருவரை சிவபெருமான் படைக்கிறார். ஒரு நாள் சப்த கன்னியர்கள் தோட்டத்திலுள்ள மலர்களைப் பறித்துச் சென்றதைக் காவலாளி அறிந்து கொண்டான். மறுநாள் அவர்கள் தோட்டத்திற்கு வந்து நீராடுகையில் ஒருத்தியின் ஆடையை மறைத்து வைத்தான்.
ஆடையைக் காணாது தவித்த பெண் நீரிலேயே இருக்க, பிறர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர் காவலாளியை மனிதனாகப் பிறந்து, கழுவேற்றம் தண்டனையைப் பெருமாறு சாபமிட்டார்.
காத்தவராயன் பிறப்பும் வளர்ப்பும்
காத்தவராயன் பிராமராண அனந்த நாராயணார் - மங்காயி ஆகியோருக்கு பிறந்தார்.சோழ அரசின் நாடுகாவல் அதிகாரியான சேப்பிளையான் - சங்கப்பிள்ளை ஆகியோரால் வளர்க்கப்படுகிறான். அவர்கள் பரிமளம் என்று பெயரிடுகின்றனர்.
சப்த கன்னியர் பிறப்பு
ஆடையைத் தொலைத்த பெண் ஆரியமாலாவாக சோமாசி ஐயர் எனும் பிராமணர் வீட்டிலும், பிற ஆறு பேர் வெவ்வேறு இடங்களிலும் பிறக்கின்றார்கள். வைரசெட்டி பாளையத்தில் மயிரழகியிடம் ஓந்தாயி, களத்தூர் சலுப்பர்-சலுப்பச்சியிடம் சவுதாயி, ஆட்பாடி இடையர் குலத்தில் கருப்பாயி, பாச்சூரில் பூவாயி, மாவாடி மங்களத்தில் நல்லதங்காள், புத்தூர் கிராமத்தில் வண்ணார நல்லி ஆகியோர் பிறந்தனர்.
சப்த கன்னியருடன் தொடர்பு
காத்தவராயன் வளர்ந்ததும் சப்த கன்னியர்கள் ஒவ்வொருவருடனும் காதல் கொண்டு தொடர்பு கொள்கிறான். வைரசெட்டி பாளையத்தில் ஓந்தாயியைக் கண்டு அவளை, முதலைப்பாரில் சிறைவக்கிறான். களத்தூர் சவுதாயிடம் கோழி கொல்கிறான். ஆட்பாடி கருப்பாயி வீட்டில் தயிர்மோர் குடித்தான். புத்தூர் வண்ணாரநல்லிக்கு பால் வாங்கி கொடுத்தான். பாச்சூர் பூவாயின் வீட்டில் மதுகுடித்தான். இறுதியாக ஆரியமாலாவுடன் உடன்போக்காக வேறிடம் சென்றான்.
காத்தவராயனை தேடல்
ஆரியமாலாவை காத்தவராயன் கவர்ந்து சென்றானென பிராமணர்கள் அரசனிடம் முறையிட்டனர். அரசன் நாடு காவலதிகாரி சேப்பிளையானை அழைத்து ஒரு வாரத்திற்குள் காத்தவராயனை கொண்டுவர சொல்கிறார். ஒருவாரம் சேப்பிளையான் தேடியும் காத்தவறாயன் இருக்குமிடம் அறியமுடியவில்லை.
தன் தந்தையே தன்னை தேடுவதை அறிந்த காத்தவராயன் ஆரியமாலையிடம் தானே அகப்பட்டு கழுவேறி திரும்புவதாய் உரைக்கிறான். மதுவருந்தி மயங்கி கிடக்கையில் காவலர்கள் பிடிக்கின்றனர்.
கழுவேற்றம்
அரசன் முன்பு தன் முன்ஜென்ம கதையையும் சிவபெருமான் சாபத்தையும் எடுத்துரைக்கிறான் காத்தவராயன். அத்துடன் தான் பறையன் இல்லை, பிராமணன் என்கிறான்.
உயர்சாதி பிராமணப் பெண்ணை தாழ்சாதி ஆண் உடன்போக்கு செய்ததை காரணமாக்கிக் காத்தவராயனைக் கழுவில் ஏற்ற எண்ணியவர்கள் மனம் மாறுகிறார்கள். ஆனால் கழுவேறினால்தான் தன்சாபம் நீங்குமென காத்தவராயன் கழுவேறுகிறான்.
சிவபெருமான் அருளால் காத்தவராயன் காக்கப்பட்டு, ஆரியமாலாவுடன் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
மாற்றுக்கதை
நாட்டார் வரலாற்று ஆய்வாளரான நா. வானமாமலை அவர்கள் காத்தவராயன் கதைபாடலின் பிற்சேர்க்கையை களைந்துள்ளார். [2] அவருடைய கூற்றின் படி காத்தவராயன் பறையர் சமூகத்தை சேர்ந்தவன். அவன் ஆரியமாலா என்ற பிராமண பெண்ணை காதலித்தான். இருவரும் உடன்போக்காக சென்றனர். [3] பிராமணர்கள் சோழ அரசனிடம் இச்செய்தியை கூறினர். சோழ அரசன் சேப்பிளையான் என்ற காவல் அதிகாரியிடம் அவனை கண்டுபிடித்து அழைத்துவர செய்கிறான். பின்பு காத்தவராயனை கழுவேற்றம் தண்டனை தந்து கொல்கிறான். [4]
பிராமணர் மற்றும் அரச குலத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரானதாக இக்கதை இருந்தமையால் பிற்சேர்க்கையாக கையிலை வாசம் மற்றும் வரம் குறித்த பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். [4]
விழாக்கள்
- காத்தவராய கழுவேற்று விழா
- காத்தவராய - ஆரியமாலா திருக்கல்யாண விழா
- காத்தவராய சுவாமி விதி உலா
காத்தவராய கழுவேற்ற விழா
சிவபெருமான் சாபத்தின் படி காத்தவராயன் கழுவேறுவதையும், பின்பு சிவபெருமான் கழுமரத்திலிருந்து காத்தவராயனைக் காப்பதையும் சித்தரிக்கும் விதமாக ஆடி மாதத்தில் காத்தவராய கழுவேற்று விழா ஆண்டுதோறும் திருச்சிராப்பள்ளி அம்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.[5]
இந்நாளுக்காக கழுமரமும், அதில் ஏற ஏணியும் தயார் செய்யப்படுகிறது. அதனடியில் பூசாரிகளால் காத்தவராயன் கதை பக்தர்களுக்குக் கூறப்படுகிறது. அன்னகாமாட்சி கோயிலிருந்து காத்தவராயன் வேடமிட்டவரை மருளாளிகள் அழைத்து வந்து, அதிகாலையில் கழுவேற்றம் செய்கிறார்கள்.
சடங்குகள் முடிந்த பின்பு காத்தவராயன் கழுவிலிருந்து இறங்குகிறார். காத்தவராயன், சந்தனக்கருப்பு, ஆரியமாலா, மருளாளிகள் என வேடமிட்டவர்கள் அன்னகாமாட்சி கோவிலுக்கு ஊர்வலமாக செல்கிறார்கள்.
கோயில்கள்
காத்தவராய சாமிக்கென தனித்த கோவில்கள் பெருமளவு இல்லை. சில அம்மன் கோவில்களில் தனி சந்நிதி உள்ளது. குல தெய்வமாக காத்தவராயனை வணங்குபவர்கள் கோயில் வீடுகளை கட்டி வழிபடுகின்றனர்.
- வல்வை முத்துமாரியம்மன் கோயில்
- காளியாங்குப்பம் காசேரியம்மன் கோயில்
ஆதாரங்கள்
- http://temple.dinamalar.com/news_detail.php?id=24164 காத்தவராயன் கதை தினமலர் கோயில்கள்
- http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=235&pno=01
- http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=235&pno=2
- http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=235&pno=5
- http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=466552&cat=504 காத்தவராயன் கழுவேற்ற விழா- தினகரன்