கன்னி ஆடு

கன்னி ஆடு (ஒலிப்பு ) (Kanni goat) என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு வெள்ளாட்டினமாகும்.[1] இவை தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மந்தையாகச் செல்லும்போது, அதன் கால் அசைவுகள் ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அமைந்திருக்கும். இதனால் இவை சிப்பாய் நடை ஆடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தவிர‌ இவற்றின் காது, நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இவற்றை வரி ஆடுகள் என்றும் அழைக்கிறார்கள். இவை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் காணப்படுபவை. தென் தமிழகத்தில் உள்ள கன்னி நாய்கள் தோற்றத்தில் இந்த ஆடுகளைப்போல உள்ளதால் அவை கன்னி நாய் என பெயரைப் பெற்றன.[2]

கன்னி ஆடுகள்

விளக்கம்

இவ்வகை ஆடுகள் தமிழகத்தில் காணப்படும் ஆடுகளிலேயே உயரமானவையாகவும், கருமை நிறம் கொண்டும். முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் கொண்டும் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெண்மை நிறத்துடன் காணப்படும் கன்னி ஆடுகளை பால்கன்னி என்றும், வெண்மைக்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளைச் செங்கன்னி என்றும் அழைப்பர்.[3] இவற்றில் ஆண், பெண் ஆடுகள் இரண்டுக்கும் கொம்புகள் இருக்கும். ஆண் ஆடு 35 முதல் 40 கிலோவரையும், பெண் ஆடு 25 முதல் 30 கிலோவரையும் எடை கொண்டவை. இந்த ஆடுகள் முதல் முறை மட்டும் எட்டு முதல் பத்து மாதத்தில் சினை பிடிக்கும். அதன் பிறகு, ஒவ்வொரு ஏழு மாதத்துக்கு ஒரு முறை குட்டி போடும். இவை, ஒரே நேரத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகள்வரை ஈனுகின்ற ஆற்றல் உடையவை. பிறக்கும்போது, கிடா ஆட்டுக் குட்டிகளின் எடை சுமார் 2.1 கிலோவாகவும், பெட்டை ஆட்டுக் குட்டிகளின் எடை சுமார் 2 கிலோ எடையுடனும் இருக்கும். பிறந்த ஒரு வருடத்தில் கிடா ஆடுகள் சுமார் 22 கிலோ எடையையும், பெட்டை ஆடுகள் சுமார் 21 கிலோ எடையையும் கொண்டதாக வளர்ந்துவிடும். அப்போது, கிடா சுமார் 76 செ.மீ. உயரமும், பெட்டை சுமார் 72 செ.மீ. உயரமும் கொண்டிருக்கும்.[4]

மேற்கோள்கள்

  1. "குறைந்த செலவில், அதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர்!". தினமணி (2016 மார்ச் 24). பார்த்த நாள் 20 மே 2016.
  2. இரா. சிவசித்து (2017 செப்டம்பர் 23). "ஆட்டுக்கும் நாய்க்கும் ஒரே பெயர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.
  3. "வெள்ளாட்டு இனங்கள்". தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 14 மே 2016.
  4. ந. வினோத் குமார் (2018 மார்ச் 3). "சிப்பாய் நடைபோடும் ஆடு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 மார்ச் 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.