கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்

கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல் (Computer Aided Design and Drawing)என்பது கணினி தொடர்பான கருவிகளைப் பயன்படுத்திக், கட்டிடக்கலை, பொறியியல், இயந்திர உற்பத்தி மற்றும் இன்னபிற துறைகளில் வடிவமைப்பு மற்றும் வரைபடம் வரைதலைக் குறிக்கின்றது. இதில் இதற்காக உருவாக்கப்படும் பலவகையான மென்பொருள்களும், சில சமயம், விசேடமாக உருவாக்கப்படும் வன்பொருள்களும் தொடர்பு படுகின்றன. தற்காலத்தில் இருபரிமாண, காவி அடிப்படையில் அமைந்த வரைபு முறைமைகள் (2D vector based drafting systems) தொடக்கம், முப்பரிமாண, மேற்பரப்பு மற்றும் திண்ம வடிவமைப்பு மாதிரியுருவாக்கிகள் (3D surface and solid design modellers) வரை பலவிதமான மென்பொருள்கள் புழக்கத்திலுள்ளன.

இயந்திரப் பாகமொன்றின் இருபரிமாண வரைபடமும், முப்பரிமாணத் தோற்றமும்

அறிமுகம்

கணினித் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மனித வாழ்வின் சகல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று, வடிவமைப்பு மற்றும் அதனோடிணைந்த படவரைதற் துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை, வரைபலகைகளைப் பயன்படுத்திக் கைகளால் படங்களை வரைந்த நிலைக்கு மாற்றாக கணினிகளைப் பயன்படுத்திப் படம் வரையும் முறை அறிமுகமானது. இத் துறையில் கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகப் பல துறைகளில் இது ஒரு இன்றியமையாத அம்சமாக ஆகியுள்ளது.

ராக்கெட் மற்றும் வானூர்திகள் வடிவமைப்பு, உற்பத்தி முதலிய உயர் தொழில்நுட்பத் துறைகள் தொடக்கம், மிகச்சிறிய அன்றாடம் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற் துறைகள் வரை கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல் முறையைப் பயன்படுத்தி வருகின்றன. கட்டிடங்களையும் பிற கட்டுமான அமைப்புக்களையும் வடிவமைத்துக்கட்டுதல், இயந்திர சாதனங்களின் உற்பத்தி நுட்பத்துறைகளில் பயன்படுவது ஒருபுறமிருக்க, திரைப்படத் தயாரிப்பு, விளம்பரத்துறை போன்றவற்றில் கலை சார்ந்த தேவைகளுக்கும் இது பெரிதும் உதவுகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.