கட்டிட அனுமதி

கட்டிட அனுமதி, கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு உரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படுவதாகும். அனுமதியின்றிக் கட்டிடங்களைக் கட்டுவது சட்டவிரோதமானது என்பதுடன், அவ்வாறு சட்ட விரோதமாகக் கட்டப்படும் கட்டிடங்கள் தொடர்பில் தண்டம் அறவிடப்படலாம் அல்லது கட்டிடங்களே இடித்துத் தள்ளப்படலாம்.

அனுமதி வழங்கும் நிறுவனங்கள்

பொதுவாகக் கட்டிடம் அமையவுள்ள பகுதியை நிர்வகிக்கும் உரிமையுள்ள உள்ளூராட்சிச் சபைகளே இவ்வாறான அதிகாரங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கார்ப்பரேசன்கள், மாநகர சபைகள், நகர சபைகள் போன்றவை கட்டிட அனுமதி வழங்கும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. இவை தவிர சில சந்தர்ப்பங்களில், அப்பகுதிகளின் நகர வளர்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களோ, துறைமுகப் பகுதிகள், சுதந்திர வர்த்தக வலயங்கள் போன்ற இடங்களில் அவற்றை நிர்வாகம் செய்கின்ற நிறுவனங்களோ இந்த உரிமையைக் கொண்டிருப்பதும் உண்டு.

கட்டிட விதிமுறைகள்

அளவிற் பெரியவையும், கூடிய அதிகாரங்களைக் கொண்டவையுமான நிறுவனங்கள் கட்டிட அனுமதி பெற விண்ணப்பிப்பவர்கள் கட்டிடத்தின் பயன்பாடு, அதன் உயரம், மொத்தத் தளப் பரப்பு, காற்றோட்டம், தீத்தடுப்பு ஒழுங்குகள் போன்ற பல அம்சங்கள் தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளை உருவாக்கி வைத்துள்ளனர். இவை கட்டிட விதிமுறைகள் எனப்படுகின்றன. இவை தவிர அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விதிகள் உள்ளன. கட்டிட அனுமதிக்கான இறுதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படு முன்னர், நகரத் திட்டமிடல் நிறுவனம், மின் விநியோக நிறுவனம், வடிகால் அமைப்பு நிறுவனம், தொலை பேசிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் போன்றவற்றிடமிருந்து குறித்த கட்டிடம் கட்டுவது தொடர்பான ஆட்சேபனைகள் இல்லை என்பதற்கான சான்றிதழ்களும், அவ்வச் சேவைகள் தொடர்பான வடிவமைப்புக்கான அங்கீகாரமும் பெறப்படவேண்டும்.

நிபுணர்களின் சேவை

பெரும்பாலான பெரிய நகரங்கள் கட்டிடங்களின் வடிவமைப்பு, வரைபடங்கள் தயாரிப்பு, மேற்பார்வைபோன்றவற்றுக்கு உரிய நிபுணர்களின் சேவை பெறப்படவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளன. அது மட்டுமன்றி இவ்வாறான உயர்தொழில் நிபுணர்களையும், அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களையும் பதிவு செய்தும் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.