கட்டப்பாவ காணோம்
கட்டப்பாவ காணோம் (Kattappava Kanom) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். மணி செயோன் இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்திருந்தனர். விண்டுசைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ஸ் தயாரிப்பில், சந்தோஷ் தயாநிதி இசையில் 17 மார்ச் 2017 ஆம் தேதி வெளியானது.[1]
நடிகர்கள்
சிபி, ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், திருமுருகன், நலன் குமாரசாமி, சித்ரா லக்ஷ்மணன், தமிழ்ச்செல்வி, திண்டுக்கல் சரவணான், ஜெயக்குமார், டி. ரவி, மிமிகிரி சேது, சாந்தினி தமிழரசன்.
கதைச்சுருக்கம்
ரவுடி வஞ்சரம் (மைம் கோபி) கட்டப்பா என்ற பெயர் கொண்ட மீன் ஒன்றை வளர்த்து வருகிறான். அந்த மீன் அவனுக்கு அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பினான். ஓர் இரவில், அந்த மீன் திருடப்பட்டு, பல நிகழ்வுகளைத் தாண்டி பாண்டியனின் (சிபி) வீட்டை அடைந்தது. பல தொழில்களில் பாண்டியன் தோல்வி அடைந்திருந்ததால், அவன் ஒரு துரதிஷ்டம் என்று அவனது தந்தை கருதினார். இந்த நிலையில், மீனாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதல் செய்து, திருமணமும் செய்கிறான் பாண்டியன். புது வீட்டில் குடி போகும் அந்த ஜோடிக்கு கயல் என்ற சிறுமியுடன் நட்பு ஏற்படுகிறது. தாயை இழந்த சிறுமி கயலின் ஆசைகளை நிறைவேற்ற பாண்டியன் விரும்புகிறான். கட்டப்பா மீன் உண்மையில் அதிர்ஷ்டத்தை தரும் மீன் என்று பாண்டியனும், மீனாவும் கண்டு பிடிக்கிறார்கள். கட்டப்பாவை தேடி அலைகிறான் வஞ்சரம். பின்னர், கட்டப்பாவை யார் வைத்துக் கொண்டனர்? என்பது தான் மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
உமா தேவி, முத்தமிழ் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்திருந்தார். 3 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 21 அக்டோபர் 2016 அன்று வெளியானது.[2]
வரவேற்பு
17 மார்ச் 2017 அன்று வெளியான இந்தத் திரைப்படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3][4][5][6]