ஒருபோகு

ஒருபோகு என்பது கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தில் உறுப்பாக வரும் ஒருவகை யாப்பு. தொல்காப்பியம் இதனைக் கொச்சக ஒருபோகு எனக் குறிப்பிடுகிறது. யாப்பருங்கலமும் இதனைக் குறிப்பிடுகிறது. இது கலிப்பாவின் வகைகளில் ஒன்று. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அராகம், அம்போதரங்கம் ஆகியவை இந்தப் பாவில் வரும் உறுப்புக்கள்.

ஒருபோகு என்பது கலிப்பா வகைகளில் ஒன்று. இது கலிப்பா-யாப்பின் உறுப்புகள் குன்றியும் இடம் மாறியும் வரும். அது கொச்சகக் கலிப்பா, [1] அம்போதரங்கக் கலிப்பா என இரண்டு வகைப்படும். [2] [3]

பாடல் எடுத்துக்காட்டு [4]

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
தரவு

1

நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான
கார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க
இடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்
சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்
கண்பதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்
விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய்.

2

நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்
கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே
பழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை
வழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட
உரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை
வரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே.
தாழிசை

1

நீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ
தோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே.

2

என்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்க்களவர்
முன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே.

3

செடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்
றடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே.

4

பற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்
எற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே.

5

நிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை
மணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே.

6

முடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்
கடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே.
அராகம்

1

உளதென விலதென வொருவரொ ரளவையின்
அளவினி லளவிட லரியதொ ருருவினை.

2

இதுவென லருமையி னெழுதரு மொழிகளும்
அதுவல வெனுமெனி னுவருனை யறிபவர்.

3

அவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்
எவவை னிவனென வெதிர்தரு தகைமையை.

4

அறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு
நெறியல தொருவரு மறிவரு நிலைமையை.
நாற்சீரோரடி அம்போதரங்கம்
ஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.
பூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.
எண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.
தொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.
முச்சீரோரடி அம்போதரங்கம்
வடவரை குழைய வளைத்தனை.
மலைமகண் முலைக டளைத்தனை.
விடமமிர் தமர விளைத்தனை.
விசயனொ டமர்செந் திளைத்தனை.
வரிசிலை வதனை யெரித்தனை.
மதகரி யுரிவை தரித்தனை.
அருமறை தெரிய விரித்தனை.
அலகில் பல் கலைக டெரித்தனை.
இருசீரோரடி அம்போதரங்கம்
அழல்வி ழித்தனை.
பவமொ ழித்தனை.
ஆற ணிந்தனை.
மாற ணிந்தனை.
மழுவ லத்தினை.
முழுந லத்தினை.
மாந டத்தினை.
மானி டத்தினை.
அலகி றந்தனை.
தலைசி றந்தனை.
அருள்சு ரந்தனை.
இருடு ரந்தனை.
உலக ளித்தனை.
தமிழ்தெ ளித்தனை.
ஒன்று மாயினை.
பலவு மாயினை.
தாழிசை

1

அலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்
கொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே.

2

பயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க்
கெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே.

3

அடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்
விடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே.

4

இக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்
அக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே.
எனவாங்கு

இது தனிச்சொல்

சுரிதகம்
உலகுசூற் கொண்ட தலைவியு நீயும்
மலைபக வெறிந்த மழவிளங் குழவியை
அமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்
வண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்
கண்களிற் பருகியக் காமரு குழவி
எழுதாக் கிளவி யுன்சுவை பழுத்த
மழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்
செஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்
புன்மொழிக் கடுக்கொளப் புகட்டின்ன்
இன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே.

அடிக்குறிப்பு

  1. தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்
    தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்
    எண் இடையிட்டுச் சின்னம் குன்றியும்
    அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்
    யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
    சொச்சக ஒருபோகு ஆகும் என்ப (தொல்காப்பியம் 3-452)
  2. ஒருபோகு இயற்குயும் இரு வகைத்து ஆகும் (தொல்காப்பியம் 3-450)
  3. கொச்சக ஒருபோகு அம்போதங்கம் என்று
    ஒப்ப நாடி உணர்தல் வேண்டும் (தொல்காப்பியம் 3-451)
  4. காசிக் கலம்பகம் நூலிலுள்ள பாடல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.