எலிசவேத்தா பெட்ரோவ்னா

யெலிசவேத், எலிசபெத் என்றும் அறியப்படுகின்ற எலிசவேத்தா பெட்ரோவ்னா (உருசியம்: Елизаве́та (Елисаве́т) Петро́вна) (29 December [யூ.நா. 18 December] 17095 January 1762 [யூ.நா. 25 December 1761] ), 1741 தொடக்கம் 1762ஆம் ஆண்டுவரை உருசியாவின் பேரரசியாக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் (1740–1748), ஏழாண்டுப் போர் (1756 – 1763) என்னும் இரண்டு போர்களை நடத்தினார். 1762 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது உருசியப் பேரரசு 4 பில்லியன் ஏக்கர்கள் பரப்பளவுக்கு மேல் பரந்து இருந்தது. இது 16 மில்லியன் சதுர கிலோமீட்டர்களுக்கும் மேற்பட்டது ஆகும்.

எலிசவேத்தா பெட்ரோவ்னா
சார்லசு வான் லூவினால் வரையப்பட்ட உருவப்படம்.
உருசியப் பேரரசின் பேரரசி
ஆட்சிக்காலம் டிசம்பர் 6, 1741சனவரி 5, 1762
முடிசூடல் மார்ச் 6, 1742
முன்னையவர் ஆறாம் இவான்
பின்னையவர் மூன்றாம் பீட்டர்
துணைவர் அலெக்சி ராசுமோவ்சுக்கி
தந்தை உருசியாவின் முதலாம் பீட்டர்
தாய் உருசியாவின் முதலாம் கத்தரீன்
பிறப்பு திசம்பர் 29, 1709(1709-12-29)
கொலொமென்சுக்கோயே
இறப்பு சனவரி 5, 1762(1762-01-05) (அகவை 52)

இவரது உள்நாட்டுக் கொள்கைகளால், பிரபுக்களுக்கு உள்ளூராட்சியில் அதிக முக்கியத்துவம் ஏற்பட்டதுடன், அவர்கள் பேரரசுக்குச் செய்யவேண்டிய சேவைகளும் குறைக்கப்பட்டிருந்தன. இவர், லொமொனோசோவ் என்பவர் மாசுக்கோப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும், சுவாலோவ் என்பவர் செயின்ட் பீட்டர்சுபர்க்கில் நுண்கலை அக்கடமியை உருவாக்குவதற்கும் ஊக்கம் அளித்தார். இவர் தனக்குப் பிடித்த கட்டிடக்கலைஞரான பார்த்தோலோமியோ ராசுட்ரெல்லியின் பரோக் பாணியிலான பாரிய திட்டங்களுக்கும் பெருமளவு பணத்தைச் செலவு செய்தார். இத்திட்டங்கள் குறிப்பாக பீட்டரோஃப், சார்சுக்கோயே செலோ ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. மாரிகால அரண்மனையும், சிமோல்னி தேவாலயமும் இவரது காலத்தில் அமைக்கப்பட்ட முக்கியமான கட்டிடங்களாகும். பொதுவாக, பலராலும் விரும்பப்பட்ட உருசிய ஆட்சியாளர்களுள் இவரும் ஒருவர். செருமனியர்களை அரசில் அனுமதிக்காததும், இவர் காலத்தில் ஒருவருக்குக்கூட உருசியாவில் கொலைத் தண்டனை அளிக்கப்படாததும் இதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.