உருசியாவின் மூன்றாம் பீட்டர்

உருசியாவின் மூன்றாம் பீட்டர் (21 பெப்ரவரி 1728 – 17 ஜூலை [யூ.நா. 6 ஜூலை] 1762) (உருசியம்: Пётр III Фёдорович, பியோத்தர் III ஃபியோதரவிச்) 1762 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் உருசியாவின் பேரரசராக இருந்தார். இவர் உள முதிர்ச்சி இல்லாதவர் என்றும், அளவுக்கு அதிகமாக பிரசியாவை ஆதரித்தவர் என்றும், இதனால் மக்களால் விரும்பப்படாதவராக இருந்தார் என்றும் பெரும்பாலான வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவரது மனைவி தலைமை ஏற்று நடத்திய சதியொன்றைத் தொடர்ந்து இவர் கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவி இரண்டாம் கத்தரீன் ஆட்சியைக் கைப்பற்றினார்.

மூன்றாம் பீட்டர்
உருசியாவின் பேரரசர்

பேரரசர் மூன்றாம் பீட்டர், 1762
ஆட்சிக்காலம் 5 January 1762 – 9 July 1762
முன்னையவர் Elizabeth
பின்னையவர் Catherine II
வாழ்க்கைத் துணை Catherine II
வாரிசு
Paul
தந்தை Charles Frederick, Duke of Holstein-Gottorp
தாய் Anna Petrovna of Russia
பிறப்பு பெப்ரவரி 21, 1728(1728-02-21)
Kiel
இறப்பு சூலை 17, 1762(1762-07-17) (அகவை 34)
Ropsha
அடக்கம் exhumed and currently buried at Peter and Paul Cathedral

இளமைக் காலமும் இயல்புகளும்

பீட்டர் கீல் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார், ஓல்ச்ட்டீன்-கொட்டோர்ப்பின் டியூக் ஆன கார்ல் ஃபிரீட்ரிக். தாயார் உருசியாவின் முதலாம் பீட்டருக்கும், அவரது இரண்டாவது மனைவி முதலாம் கத்தரீனுக்கும் பிறந்த அன்னா பெட்ரோவ்னா என்பவராவார். இவர் பிறந்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இவரது தாயார் இறந்துவிட்டார். 1739 ஆம் ஆண்டில் இவரது தந்தையும் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பீட்டர், கார்ல் பீட்டர் உல்ரிக் என்னும் பெயருடன், ஓல்ச்ட்டீன் - கொட்டோர்ப்பின் டியூக் ஆனார். இது அவரை உருசியா, சுவீடன் ஆகிய இரண்டு நாடுகளின் அரசுரிமைக்குமான வாரிசு ஆக்கியது.

அன்னாவின் சகோதரியான எலிசபெத் உருசியப் பேரரசியானதும், பீட்டரை செருமனியில் இருந்து உருசியாவுக்கு வரவழைத்து, 1742 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் தனது வாரிசாக அறிவித்தார். இதற்கு முன்னர் 1742 ல், உருசிய-சுவீடியப் போரின்போது உருசியப் படைகள் பின்லாந்தைக் கைப்பற்றி வைத்திருந்த காலத்தில் 14 வயதாயிருந்த பீட்டர் பின்லாந்தின் அரசராக அறிவிக்கப்பட்டார். பிள்ளைகள் இன்றி இறந்துபோன சுவீடனின் பத்தாம் சார்லசின் கீழிருந்த ஆட்சிப் பகுதிகளுக்கான வாரிசு உரிமை அடிப்படையிலேயே இந்த அறிவிப்புச் செய்யப்பட்டது. அக்டோபர் 1742 ஆம் ஆண்டில் ஏறத்தாழ இதே நேரத்தில், சுவீடன் நாடாளுமன்றம் அந்நாட்டின் அரசுரிமைக்கான வாரிசாக பீட்டரைத் தெரிவு செய்தது. பீட்டர் உருசியாவின் அரசுரிமைக்கான வாரிசாகத் தெரிவு செய்யப்பட்டதை சுவீடன் நாடாளுமன்றம் அறிந்திருக்கவில்லை. சுவீடனின் தூதர் செயின்ட் பீட்டர்சுபர்க்குக்கு வந்தபோது, சுவீடனின் தெரிவை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக இளம் வயதினரான பீட்டரின் சார்பில் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பேரரசி எலிசபெத், தனது உறவுப் பெண்ணும், அனோல்ட்-செர்ப்சிட்டின் இளவரசரின் மகளுமான சோஃபியா அகசுத்தா பிரெடெரிக்காவைப் பீட்டருக்கு மணம் முடிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த இளவரசி முறைப்படி உருசிய மரபுவாதக் கிறித்தவ சமயத்துக்கு மாற்றப்பட்டபின், ஏக்காடேரினா அலெக்சியேவ்னா என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இந்தப் பெண்ணே பிற்காலத்தில் இரண்டாவது கத்தரீன் என்னும் பெயருடன் உருசியாவின் பேரரசியாக விளங்கியவர். 1745 ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இவர்களது மண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. எனினும் இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். மகனே பின்னாளில் உருசியாவை ஆண்ட பேரரசர் பால் ஆவார். ஆனால், பால், பீட்டருக்குப் பிறக்கவில்லை என்றும், உண்மையில் தாங்கள் என்றுமே மண உறவில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் கதரீன் பின்னர் கூறியிருந்தார். இவர்கள் பதினாறு ஆண்டுகள் ஒன்றாக இருந்த காலத்திலேயே பீட்டருக்குப் பல காதலிகள் இருந்தனர். அதுபோலவே கத்தரீனுக்கும் பல காதலர்கள் இருந்தனர்.

இயற்கையாகவே பீட்டர் தோற்றப் பொலிவு அற்றவர். அம்மை நோய் அவரை அழகற்றவர் ஆக்கிவிட்டிருந்தது. இவரது தரமற்ற பழக்க வழக்கங்களினால் இவர் அருவருக்கத்தக்கவர் ஆனார். அக்காலத்தின் மிக மோசமான வகையைச் சேர்ந்த சிறிய செருமன் இளவரசர் என்று கூறத்தக்க எல்லா இயல்புகளும் அவருக்கு இருந்தன. தனது இளவரசுத் தகுதி காரணமாகக் கண்ணியம், மற்றவர்களுடைய உணர்வுகள் ஆகியவற்றைத் துச்சமாக மதிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எண்ணிக்கொண்டார்.

ஆட்சிக்காலம்

1762 ஆம் ஆண்டில் இவர் ஆட்சிக்கு வந்ததும், பிரசியாவுடனான ஏழாண்டுப் போரிலிருந்து உருசியாவை விலக்கிக்கொண்டு அந்நாட்டுடன் சமாதானம் செய்துகொண்டார். பெர்லினைக் கைப்பற்றி உருசியா வெற்றியின் விளிம்பில் இருந்தும் கூட, உருசியாவுக்கு எவ்வித நன்மையும் இன்றிப் போரிலிருந்து விலகிக் கொண்டதினால், பல பிரபுக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார். பிரசியாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு, டென்மார்க் நாட்டுடன் மக்களால் விரும்பப்படாத ஒரு போரையும் தொடங்கினார். அத்துடன் உருசிய மரபுவாதத் திருச்சபையை லூத்தரியச் செயல்முறைகளைக் கைக்கொள்ளுமாறு வற்புறுத்தினார் என்றும் கூறப்படுகின்றது.

அலெக்சி ஆன்ட்ரோப்போவ் என்பவர் வரைந்த மூன்றாம் பீட்டரின் உருவப்படம், 1762

எனினும், பீட்டரின் குறுகிய ஆட்சிக்காலத்தில் சிறியவையானாலும் சில முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இதனால் பிரபுக்களுக்கு முதன்மை இடங்களை வழங்கிக், குடியானவர்களையும் சாதாரண நகர மக்களையும் அடக்கி ஒடுக்கும் பழைய முறையில் இருந்து விலகி, மேற்கு ஐரோப்பாவின் பாணியிலான முதலாளித்துவ, வணிகவாதப் பொருளாதார முறையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்பட்டது. இவர் காலத்தில் தொழிலதிபர்கள் தமது வேலையாட்களாகக் கொத்தடிமைகளை விலை கொடுத்து வாங்கும் முறையை ஒழித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. உள்நாட்டில் சர்க்கரை உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதற்காகச் சர்க்கரை இறக்குமதியையும் இவர் தடை செய்தார். இவரது முக்கியமான நடவடிக்கைகளுள் ஒன்று, முதலாம் பீட்டரினால் பிரபுக்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்த இராணுவ அல்லது குடிசார் சேவையை இல்லாது ஒழித்தமை ஆகும்.

தன்னுடன் மணமுறிவு செய்துகொண்டு, பீட்டர் தனது ஆசைநாயகியான எலிசபெத் வொரொன்ட்சோவாவைத் திருமணம் செய்ய எண்ணுகிறார் என்று ஐயம் கொண்ட கத்தரீன், தனது காதலரான கிரிகோரி ஓர்லோவ் என்பவருடன் சேர்ந்து பீட்டரை ஆட்சியில் இருந்து அகற்றத் திட்டம் தீட்டினார். பீட்டர் தனது மெய்க்காவலர்களுக்குக் கடுமையான ஒழுக்க நெறிகளை அறிமுகப்படுத்த எண்ணியிருந்தார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அம்மெய்க்காவலர்களுடைய கிளர்ச்சிக்குத் திட்டமிடப்பட்டது. இக் கிளர்ச்சியின்போது பீட்டர் கைது செய்யப்பட்டு முடிதுறக்க வைக்கப்பட்டர். பெரும்பாலான பிரபுக்களின் ஆதரவுடன் கத்தரீன் பேரரசியானார். சில காலத்தின் பின் ரோப்சா என்னுமிடத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த பீட்டர் கொல்லப்பட்டார். இதற்குப் பொறுப்பானவர்களைக் கத்தரீன் தண்டிக்காததால், அவரே இதற்கான ஆணையைப் பிறப்பித்திருக்கலாம் என்ற ஐயம் நிலவுகிறது.

பின்நிகழ்வுகள்

தனது தாயை விரும்பாத பீட்டரின் மகன் பால், பேரரசராகப் பதவியேற்றபின், டிசம்பர் 1796ல், பீட்டர் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி, உரிய மரியாதைகளுடன் பீட்டர் மற்றும் பால் தேவாலயத்தில் பிற சார் மன்னர்களின் கல்லறைகளுக்கு அருகில் மீண்டும் அடக்கம் செய்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.