எலிக்கோபேக்டர் பைலோரி
எலிக்கோபேக்டர் பைலோரி (Helicobacter pylori, ஹெலிகோபேக்டர் பைலோரி) ஒரு கிராம் சாயமேற்காத, நகரும் தன்மையுள்ள நீண்ட சுருள் வடிவுள்ள பாக்டீரியா ஆகும். இது மனித இரைப்பைத் திசுவில் மட்டுமே வாழக் கூடியது. தற்போது இது இரைப்பைக் குடற்புண் இரைப்பைப் புற்று நோய் ஆகியவற்றை உண்டாக்குவதாகத் தெரியவந்துள்ளது.
எலிக்கோபேக்டர் பைலோரி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | பாக்டீரியா |
தொகுதி: | புரோட்டோ பாக்டீரியா |
வகுப்பு: | எப்சிலான் புரோட்டோ பாக்டீரியா |
வரிசை: | கேம்பைலோ பாக்டேரேலிஸ் |
குடும்பம்: | ஹெலிகோபேக்டரேசியே |
பேரினம்: | ஹெலிகோபேக்டர் |
இனம்: | H. pylori |
இருசொற் பெயரீடு | |
Helicobacter pylori (Marshall et al. 1985) Goodwin et al., 1989 | |
எச்.பைலோரி நோய்த்தொற்று | |
---|---|
![]() | |
திசுப்பரிசோதனையின் போது தெரியும் எச்.பைலோரியின் நுண்ணோக்கி உருவம் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-9 | 041.86 |
நோய்களின் தரவுத்தளம் | 5702 |
MedlinePlus | 000229 |
ஈமெடிசின் | med/962 |
Patient UK | எலிக்கோபேக்டர் பைலோரி |
MeSH | D016481 |
முதன் முதலில் இது பார்க்க கேம்பைலோபேக்டர் போல இருந்ததால் காம்பைலோபேக்டர் பைலோரி என அழைக்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிகள் மூலம் இது காம்பைலோபேக்டர் அன்று என்று கண்டுபிடிக்கப்பட்டு எலிக்கோபேக்டர் பைலோரி எனப் பெயர் பெற்றது. பரவலாக இது எச்.பைலோரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
பெயர்க்காரணம்
ஹெலிகோ - சுருள் வடிவமுடைய (helical shaped)
பைலோரி - இரைப்பையின் பைலோரசு பகுதி (pylorus of stomach)
பரவல்
உலக மக்களில் பாதிப்பேர் இந்த பாக்டீரியத் தொற்று பெற்று உள்ளனர். இவர்களுள் மிகப்பெரும்பாலானோர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களே.
வரலாறு
1982 ஆம் ஆண்டு மார்ஷெல் மற்றும் வாரென் ஆகிய இருவர் இரைப்பையில் இதன் இருப்பைக் கண்டறிந்து உறுதி செய்த போது மருத்துவ உலகமே அதிர்ந்தது. மருத்துவப் பாடநூல்கள் திருப்பி எழுதப்பட்டன. ஏனெனில் இரைப்பையின் அமிலத்தன்மையில் எந்த ஒரு பாக்டீரியாவும் உயிர்வாழ முடியாது என நம்பப்பட்டு வந்தது. இதனால் 2005 ஆம் ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபெல் பரிசை இவர்கள் பெற்றார்கள்[1]. ஆனால் இவர்களுக்கு முன்னரே நுண்கிருமிகளால் இரைப்பைப்புண் உண்டாகலாம் என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.
நுண்ணுயிரியல்

எச்.பைலோரி, திருகுசுருள் வடிவமுடையது; கிராம் சாயம் ஏற்காதது; 3 மைக்ரான் நீளமும் அரை மைக்ரான் அகலமும் உடையது; நகர உதவும் கசையிழைகள் நான்கு முதல் ஆறு வரை கொண்டது. குறைந்த அளவு உயிர்வளியாவது இது உயிர்வாழ அவசியம். இது பல்வேறு நொதிகளை உற்பத்தி செய்கிறது. அவற்றுள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது யூரியேஸ் எனும் யூரியாவைச் சிதைக்கும் நொதி ஆகும்.
நோய்த்தோற்றவியல்

மனித இரைப்பையில் சுரக்கப்படும் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் பிற ஊறு விளைவிக்கும் பாக்டீரியங்களை அழிக்கும் தன்மை உடையது. ஆனால் இதிலிருந்தும் தப்பும் வழிகளைக் கையாள்வதன் மூலம் எச்.பைலோரி மட்டும் இங்கே வாழ முடிகிறது. தனது கசையிழைகளைக் கொண்டு இது அமிலச்செறிவற்ற கோழைப்படலத்தைத் துளையிட்டு உள்ளே சென்று வசிக்கிறது. ஒட்டும் தன்மையுள்ள பொருட்களைச் சுரந்து இரைப்பையின் புறஅடுக்குச் செல்களோடு நன்கு ஒட்டிக் கொள்கிறது.
எச்.பைலோரி அதிக அளவில் யூரியேஸ் நொதியைச் சுரக்கிறது. இந்நொதி யூரியாவை உடைத்து அம்மோனியாவாகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றுகின்றன. அம்மோனியா நீருடன் இணையும் போது அம்மோனியம் அயனியாக மாறுகிறது. எஞ்சிய ஹைட்ராக்சைல் அயனி கரியமில வாயுவுடன் இணைந்து பைகார்பனேட் அயனி உண்டாகிறது. இது இரைப்பையின் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கி விடுகிறது. ஆகவே எச்.பைலோரி உயிர்வாழ யூரியேஸ் நொதி இன்றியமையாத ஒன்றாகும்.
யூரியேஸ் நொதியால் உருவாகும் அம்மோனியா புறஅடுக்கு செல்களைச் சிதைக்கும் ஒரு நச்சுப் பொருளாகும். அத்தோடு மட்டுமின்றி எச்.பைலோரி புரதத்தைச் சிதைக்கும் நொதி (protease), வெற்றிடத்துளை உண்டாக்கும் செல்நச்சு (vacuolating cytotoxin) மற்றும் பாஸ்ஃபோ லிப்பிடுகளைச் சிதைக்கும் நொதி (phospholipase) ஆகியவற்றைச் சுரப்பதின் மூலமும் செல்களைப் பாதிக்கிறது.
.jpg)
இவ்வாறாக எச்.பைலோரி இரைப்பையில் நாட்பட்ட அழற்சியை (chronic inflammation) உண்டாக்குகிறது. இந்த நாட்பட்ட அழற்சி நீடிக்குமாயின் அது புற்றுநோயை உண்டாக்குகிறது[2].
நோயறிதல்

குருதி முறிபுரதச் சோதனை, மலத்தில் முறிதூண்டி கண்டறியும் சோதனை, கார்பன் யூரியா மூச்சுப் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் உடலைத் துளைக்காமல் செய்யக் கூடிய பரிசோதனைகளாகும். எனினும் அகநோக்கி (endoscope) மூலம் சிறிதளவு திசுவை எடுத்து விரைவு யூரியேஸ் சோதனை மற்றும் திசுப்பரிசோதனை (biopsy) போன்றவை செய்வதே சிறந்த அறுதியிடல் சோதனை ஆகும்.
கார்பன் யூரியா மூச்சுப் பரிசோதனை
நோயருக்கு கார்பன்-14 அல்லது கார்பன்-13 அடையாளமிட்ட (labelled) யூரியா குடிக்கத் தரப்படும். இரைப்பையில் எச்.பைலோரி இருந்தால் யூரியாவை உடைத்து கரியமில வாயுவாக மாற்றும். இந்த அடையாளமிட்ட கரியமில வாயுவை மூச்சுக் காற்றில் கண்டறியலாம்.
விரைவு யூரியேஸ் சோதனை
யூரியா உள்ள திரவத்தில் அகநோக்கி மூலம் எடுக்கப்பட்ட இரைப்பைத் திசு இடப்பட்டு அமில காரத்தன்மை காட்டிகள் (indicators) மூலம் யூரியேஸ் நொதி இருப்பதை உறுதி செய்யலாம்.
எச்.பைலோரி பரவுதல்
இது வாய்-வாய் மூலமும் (oro-oral) வாய்-மலம் (faeco-oral) மூலமும் பரவுகிறது. மக்கள் அடர்த்தி மிகுந்த வளரும் நாடுகளில் இது சாதாரணமாகக் காணப்படுகிறது. இந்நாடுகளில் சிறுவயதிலேயே நோய்த் தொற்று ஏற்பட்டு விடுகிறது.
மருத்துவம்
எச்.பைலோரி தொற்று உள்ள எல்லோருக்கும் மருத்துவம் தேவைப்படாது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதை அழிக்கும் மருந்து சாப்பிட்டு ஆறு மாதங்களுக்குள் இது மீண்டும் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஒரே ஒரு மருந்தை மட்டும் பயன்படுத்தினால் இது அந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி (resistance) பெற்று விடுவதால் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு வகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
- "The Nobel Prize in Physiology or Medicine 2005". பார்த்த நாள் 2 August 2008.
- Brown LM (2000). "Helicobacter pylori: epidemiology and routes of transmission". Epidemiol Rev 22 (2): 283–97. doi:10.1093/oxfordjournals.epirev.a018040. பப்மெட்:11218379. http://epirev.oxfordjournals.org/content/22/2/283.full.pdf.