எரிக் செகல்

எரிக் உல்ஃப் செகல் (Erich Wolf Segal)(சூன் 16, 1937  சனவரி 17, 2010) ஓர் அமெரிக்க எழுத்தாளரும்,திரைக்கதை ஆசிரியரும், கல்வியாளரும் ஆவார்.

எரிக் செகல்
பிறப்புஎரிக் உல்ஃப் செகல்
சூன் 16, 1937(1937-06-16)
புரூக்லின், நியூயார்க், அமெரிக்கா
இறப்புசனவரி 17, 2010(2010-01-17) (அகவை 72)
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர், திரைக்கதாசிரியர், கல்வியாளர்
பணியகம்உல்ஃப்சன் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்ட்

இளமை வாழ்வு

ஓர் யூத குரு (rabbi)வின் மகனாகப் பிறந்த செகல், நியூ யார்க்கில் உள்ள புரூக்லினில் இருந்த மிட்வுட் உயர்நிலைப் பள்ளியில் படித்து வேனிற்கால படிப்பிற்காக சுவிட்சர்லாந்து சென்றார்.ஹார்வர்ட் கல்லூரியில் 1958ஆம் ஆண்டு கவிதை மற்றும் இலத்தீன் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1959ஆம் ஆண்டு இலக்கிய ஒப்பிடுதலில் முதுகலைப்பட்டமும் 1965ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1]

ஆசிரியப் பணிவாழ்வு

செகல் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்,யேல் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் கிரேக்கம் மற்றும் இலத்தீன் இலக்கிய பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட் உல்ஃப்சன் (Oxford Wolfson) கல்லூரியில் கூடுதல் பேராசிரியராகவும் பின்னர் கௌரவ பேராசிரியராகவும் இருந்து வந்தார்.

எழுத்துpபணி வாழ்வு

எல்லோ சப்மரைன்

1967ஆம் ஆண்டு, லீ மினோஃப் எழுதிய கதையிலிருந்து, பீட்டில்களுக்காக 1968 வெளியான எல்லோ சப்மரைன் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்.

லவ் ஸ்டோரி

1960களின் இறுதியில் செகல் பிற திரைக்கதைகளை ஒருங்கிணைத்து வந்தார். ஓர் ஹார்வர்ட் மாணவனுக்கும் ராட்கிளிஃப் மாணவிக்கும் ஏற்படுவதாக ஓர் புனைவை திரைக்கதையாக வடித்திருந்தார். ஆயினும் எந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆர்வம் காட்டாத நிலையில், அவரது இலக்கிய முகவர் லூயி வாலஸ் பரிந்துரையை ஏற்று ஒர் புதின வடிவில் மாற்றினார். அதுவே பல சாதனைகளைப் படைத்த லவ்ஸ்டோரி (காதல் கதை) புதினமாகும். நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனைப் புத்தகமாக முதல் இடத்தைப் பிடித்த அந்நாவல் 1970களில் அமெரிக்காவின் கூடுதலாக விற்பனையான புனைவு இலக்கியமாகத் திகழ்ந்தது. உலகெங்கும் 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது 1970இன் மிகுந்த வருவாய் ஈட்டியத் திரைப்படமாக விளங்கியது.

செகல் மேலும் பல புதினங்களையும் திரைக்கதைகளையும் எழுதினார். 1977ஆம் ஆண்டு லவ்ஸ்டோரியின் தொடர்ச்சியாக ஓலிவரின் கதை (ஓலிவர்ஸ் ஸ்டோரி) எழுதினார்.

தவிர இவர் பல இலக்கிய மற்றும் கல்வி நூல்களையும் எழுதி பல்கலைக்கழகங்களில் ஆசிரியப்பணியும் ஆற்றினார். பிரின்ஸ்டன், டார்ட்மவுத் மற்றும் மியூனிக் பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார். கிரேக்க மற்றும் இலத்தீன் இலக்கியங்களைக் குறித்து பரவலாக எழுதினார். ஹார்வர்ட் பல்கலையில் 1958 ஆம் ஆண்டு வகுப்பறையை அடிப்படையாகக் கொண்டு தி கிளாஸ் என்ற நாவலை எழுதினார். விற்பனையில் சாதனை படைத்த இந்த நாவல் பிரான்சு மற்றும் இத்தாலியில் இலக்கிய விருதுகள் பெற்றன.

குடும்பம்

கரென் மாரியன் ஜேம்ஸ் என்பவரை 1975ஆம் ஆண்டு மணம் புரிந்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு இரு மகள்கள், மிரண்டா மற்றும் பிரான்செசுகா, உள்ளனர். 1980ஆம் ஆண்டு பிறந்த பிரான்செசுகாவும் தந்தை வழியில் இலக்கியப் படிப்பு படித்து தற்போது த அப்சர்வர் இதழில் புனைவுகள் பத்தி எழுத்தாளராக் பணியாற்றுகிறார்.

இறப்பு

செகல் சனவரி 17, 2010 அன்று மாரடைப்பால் காலமானார்.[2] இலண்டனில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.[3]

திரைப்படங்கள்

  • எல்லோ சப்மரைன் (1968)
  • தி கேம்ஸ் (1970)
  • ஆர்.பி.எம்.]] (1970)
  • லவ் ஸ்டோரி (1970)
  • ஜென்னிஃபர் ஆன் மை மைண்ட் (1971)
  • ஓலிவர்ஸ் ஸ்டோரி (1978)
  • எ சேஞ்ச் ஆஃப் சீசன்ஸ் (1980)
  • மேன்,வுமன் அன்ட் சைல்ட் (1983)

ஆக்கங்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.