இ. மு. வி. நாகநாதன்
மரு. இ. மு. வி. நாகநாதன் (E. M. V. Naganathan, சனவரி 31, 1906 - ஆகத்து 16, 1971) இலங்கையின் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவர் 1960 முதல் 1970 வரை இலங்கை நாடாளுமன்றத்தில் நல்லூர் தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.
இலங்கை முருகேசு விஜயரத்தினம் நாகநாதன் Elangai Murugesu Vijayaretnam Naganathan மருத்துவர், நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
![]() | |
நல்லூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1960–1970 | |
பின்வந்தவர் | சி. அருளம்பலம், அஇதகா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 31, 1906 |
இறப்பு | ஆகத்து 16, 1971 65) | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரத்தினவதி |
வாழ்க்கைக் குறிப்பு
ஜெபரத்தினம் ஜெ. ஹென்ஸ்மன், பொன்னம்மா (வண. ஆர். ஏ. வேதவனத்தின் மகள்) ஆகியோருக்கு நாகநாதன் பிறந்தார். தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றியவர்.
அரசியலில்
நாகநாதன் கொழும்பில் மருத்துவராகப் பணியாற்றினார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர் 1947 ஆம் ஆண்டில் அக்கட்சியின் செயலாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் மேலவை உறுப்பினராகத் தெரிவானார். எனினும், அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் முக்கிய உறுப்பினரானார். அக்கட்சியின் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார். 1952, மற்றும் 1956 தேர்தல்களில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். மார்ச் 1960 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து சூலை 1960, 1965 தேர்தல்களிலும் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1966 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானார். நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் கொள்கைக்காக வீராவேசத்துடன் ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் பேசும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அன்று நல்ல உடற்கட்டுடன், வலுவான தோற்றத்தைக் கொண்டிருந்த நாகநாதனை தமிழ் மக்கள் "இரும்பு மனிதன்" என்று அன்புடன் அழைத்தார்கள். 1970 தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட சி. அருளம்பலத்திடம் 508 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
ஜோன் வேர்ட் பொன்னையா சேனாதிராஜா என்பவரின் மகள் ரத்தினவதி (இறப்பு: டிசம்பர் 11, 2006[1]) என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் பிள்ளைகள். இவரது மூத்த மகள் மேரி லட்சுமி நாகநாதன் இலங்கையின் தூதுவராகப் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். இரண்டாவது மகள் ஆன் நிர்மலா தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசனை மணம் புரிந்தார்.