இலங்கையின் தேசியக்கொடி

தற்போதுள்ள இலங்கையின் தேசியக்கொடி 1950-ல் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது.

இலங்கையின் தேசியக்கொடி

கொடியின் பகுதிகள்

இலங்கையின் தேசியக்கொடி மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு பகுதிகளைக் காணமுடியும். கொடிக் கம்பத்தின் பக்கம் இருக்கும் பகுதியில் செம்மஞ்சளும், பச்சையுமான நிலைக்குத்தான இரண்டு பட்டைகள் உள்ளன. கொடியின் பெரும்பகுதியை அடக்கியுள்ள மற்றப்பகுதி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும், நான்கு மூலைகளிலும் அரச மரத்து இலைகளையும் கொண்டுள்ளது. செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும், பச்சை நிறப் பட்டை முஸ்லீம்களையும், சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

வரலாறு

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இலங்கை விடுதலை அடையும் வேளையில் இலங்கைக்கு நாட்டு கொடிக்கான தேவை ஏற்பட்டது. அதுவரை பிரித்தானிய ஒன்றியக் கொடியே இலங்கை கொடியாக இருந்து வந்தது. விடுதலையின் போது இலங்கையின் பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கனின் சிவப்பு நிறப் பிண்ணணியில் மஞ்சள்நிற போர்வாளேந்திய சிங்கக்கொடியானது சுதந்திர இலங்கையை குறிக்கும் சிறந்த கொடியாக அமையும் என தேர்வு செய்தார். எனினும் அக் கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சில நாட்களின் பின் தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே.எல். கொத்தலாவல, டி.பி. ஜாயா, எல்.ஏ. ராஜபக்ச, எஸ். நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது. இதில் பச்சை முஸ்லிம் இனத்தையும், மஞ்சள் தமிழரையும் குறிக்கும்.[1] அத்துடன் பௌத்த மதத்தைக் குறிக்கும் வகையில் நான்கு அரசிலைகள் கொடியின் நான்கு முலைகளிலும் இணைக்கப்பட்டது. இக்கொடியே தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.