இயல்புரிமை
இயல்புரிமை (natural right) என்பது உலகம்தழுவிய உரிமைகள் தொடர்பான ஒரு கருத்துருவாகும். இந்த உரிமை, சட்டங்களிலோ நம்பிக்கைகளிலோ தங்கியிராமல் உயிரினங்களுக்கு இயல்பாகவே அமைந்தது எனப்படுகின்றது. இயல்புரிமைக் கோட்பாட்டில் இருந்து பெறப்பட்ட இயற்கை விதிக் கோட்பாட்டின் உள்ளடக்கம் இயற்கையாக முடிவாக்கப்படுவதால் இது உலகம் முழுதும் பொருந்துகிறது. ஐரோப்பாவில் அறிவொளிக் (Enlightenment) காலத்தில், இயற்கை விதி, அரசர்களின் தெய்வீக உரிமைகளுக்கு எதிராக இருந்ததுடன், இதுவே செந்நெறிக்காலக் குடியரசிய அடிப்படையில், சமூக ஒப்பந்தம், நேர்ச் சட்டம், அரசு என்பவற்றை நிறுவுவதை நியாயப்படுத்தும் ஒரு வாதமாகவும் விளங்கியது. மாறாக, இயல்பு உரிமைக் கருத்துரு, இத்தகைய அமைப்புக்கள் இருப்பதை எதிர்த்து வாதிடுவதற்கும் அராசகவாதிகளால் பயன்படுத்தப்பட்டது.
இயல்புரிமை என்பது அதனை அரசுகளோ அல்லது சமுதாயமோ நடைமுறைப்படுத்தா விட்டாலும் அது இயல்பாகவே இருப்பதாகக் கருதப்படும். ஆனால், சட்டம்சார்ந்த உரிமை என்பது மக்களின் நன்மைக்காக அரசினாலோ, சமுதாயத்தினாலோ உருவாக்கப்படுகிறது. எது இயல்புரிமை எது சட்ட உரிமை என்பது மெய்யியலிலும், அரசியலிலும் ஒரு முக்கியமான கேள்வியாகும். இக் கருத்துருவை விமர்சிப்பவர்கள், மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுமே சட்ட உரிமைகள்தான் என்கிறார்கள். கருத்துருவை ஆதரிப்பவர்களோ அமெரிக்க விடுதலைப் பிரகடனம், உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பன இயல்புரிமையை ஏற்றுக்கொள்வதனால் ஏற்படும் பயனை விளக்குகின்றன என்கின்றனர்.
மனித உரிமை என்பதன் எண்ணக்கரு இயல்புரிமையில் இருந்து பெறப்பட்டதாகும். சிலர் இவ்விரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்கின்றனர். வேறு சிலரோ இயல்புரிமையுடன் தொடர்புபடுத்தப்படும் சில அம்சங்களை விலக்கிவைப்பதற்காக இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருள்களைக் குறிக்கவேண்டும் என்கின்றனர். இயல்புரிமை என்பது, அரசு அல்லது வேறு பன்னாட்டு அமைப்புக்களின் அதிகாரத்தினால் இல்லாமலாக்க முடியாத தனியொருவருடைய உரிமை எனக் கருதப்படுகிறது. மனிதன் அல்லாத ஏனைய விலங்குகளுக்கும் இயல்புரிமை உண்டு என்னும் எண்ணம், 20 ஆம் நூற்றாண்டில், மெய்யியலாளர்கள், சட்ட அறிஞர்கள் போன்றோரிடையே பிரபலமானது.