ஆயிலியம் (பஞ்சாங்கம்)

ஆயிலியம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 9 ஆவது பிரிவு ஆகும். கடகராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ஆயிலிய நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் ஆயிலிய நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" ஆயிலியம் ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், ஒன்பதாவது நட்சத்திரமாகிய ஆயிலியம் 106° 40'க்கும் 120° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஆயிலியத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன.

பெயரும் அடையாளக் குறியீடும்

ஆயிலிய விண்மீன் கூட்டம்

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி ஆயிலிய நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ஆயிலிய நட்சத்திரக் கூட்டத்தின் (δ, ε, η, ρ, and σ Hydrae) பெயரைத் தழுவியது. ஆயிலியத்தின் சமசுக்கிருதப் பெயரான ஆஷ்லெஷா (Ashlesha) என்பது "ஒன்றுடன் ஒன்று பிணைதல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு ஒன்றுடனொன்று பிணைந்த பாம்புகளின் வடிவம் ஆகும். இது முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் காணும் குண்டலினி சக்தியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சோதிடத்தில் ஆயிலியம்

இயல்புகள்

இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. ஆயிலிய நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:

கோள்புதன்
தேவதைநாகர்
தன்மைகூர்மை
சாதிவைசிய சாதி
கோத்திரம்வசிட்டர்
பால்பெண்
குணம்இராட்சத குணம்
இயற்கை மூலம்நீர்
விலங்குஆண் பூனை
பறவைசிச்சிலி
மரம்புன்னை
நாடிபிங்கலை

ஆயிலிய நட்சத்திரக்கோயில்

குறிப்புக்கள்

  1. Raman, B. V., 1992. பக். 40.

உசாத்துணைகள்

  • Raman, B. V., A Manual of Hindu Astrology, Raman Publications, Bangalore, 1992 (16th Edition).

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.