நவமி
நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஒன்பதாவது திதி நவமி ஆகும். நவ எனும் வடமொழிச் சொல் ஒன்பது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஒன்பதாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் ஒன்பதாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் ஒன்பதாம் நாளுமாக இரண்டு முறை நவமித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் நவமியைச் சுக்கில பட்ச நவமி என்றும், பூரணையை அடுத்த நவமியைக் கிருட்ண பட்ச நவமி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்
சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] நவமித் திதி ஒன்பதாவது திதியும் 24 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 96 பாகையில் இருந்து 108 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச நவமித் திதியும், 276 பாகையிலிருந்து 288 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச நவமியும் ஆகும்.
இந்து சமயச் சிறப்பு நாட்கள்
பொதுவாக அட்டமி, நவமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது. [2]
இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன. நவமித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:
- இராமபிரான் நவமித் திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் இராம நவமி என்ற பெயரில் சித்திரை மாத வளர்பிறை நவமியில் கொண்டாடப்படுகிறது.[3]
- மகாநவமி - புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கும் நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி மகாநவமி என்று குறிப்பிடுகின்றனர்.[4]
ஆதாரம்
- Sharma, P.D., 2004. பக். 22.
- எம்.எஸ். சுப்பிரமணியம் (01-07-2010). "அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?". நக்கீரன். பார்த்த நாள் June 04, 2012.
- Balasundara Rao, S., 2002. பக். 61, 62.
- worldkovil.com பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2014.
உசாத்துணைகள்
- இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
- திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
- Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
- Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.
வெளி இணைப்புகள்
- Tithi - Hindu Tithi Calendar - Astorica.com (ஆங்கில மொழியில்)
- Cāndra māsa - mantrashastra.com (ஆங்கில மொழியில்)