அவள் விகடன்
அவள் விகடன், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் மொழியில் மாதமிருமுறை வெளியாகும் பெண்களுக்கான இதழ். விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும் இதழ். பெண்களுக்குத் தேவையான பயனுள்ள அனைத்து தகவல்களும் இந்த இதழில் கிடைக்கும்.
எஸ். அறிவழகன் | |
வகை | பெண்களுக்கான சஞ்சிகை |
---|---|
இடைவெளி | இருவாரத்திற்கு ஒரு முறை |
வெளியீட்டாளர் | எஸ். அறிவழகன் |
முதல் வெளியீடு | அக்டோபர் 1998 |
நிறுவனம் | வாசன் பதிப்பகம் |
நாடு | இந்தியா |
அமைவிடம் | சென்னை |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | www.vikatan.com |
இதழில் இருப்பவை
வாழ்வின் கடைக்கோடி நிலையிலிருந்து முன்னேறி சிகரம்தொட்ட பெண்களின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்; முற்றிலும் இளமைப் பருவத்திற்கே உரித்தான மகிழ்வு - கேலி கொண்டாட்டங்களுடன் பதின்ம வயதுப் பெண்களுக்காக இன்றைய அலங்காரப் பாங்கு குறித்த செய்திகளை இற்றைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்தையும் தருவதற்காகவே ஒதுக்கப்பட்ட அவள் 16; பேரனுபவத் தொடர்கள்; கருத்துக் கணிப்புகள்; பெண்களின் அந்தரங்கப் பிரச்னைகள், குழந்தை வளர்ப்பு மற்றும் இல்லறம் குறித்த மருத்துவ விழிப்பு உணர்வுக் கட்டுரைகள்; வீடுகளை, ஆடைகளை அலங்கரிக்கும் சின்னச்சின்ன ஆக்க எண்ணங்கள் எப்படி சிலரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது என விளக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணிகளின் பேட்டிகள்; வீட்டு உபயோகப்பொருட்களை எளிய முறையில் கையாளும் வித்தைகளைக் கற்றுத்தரும் பகுதிகள்; அழகுக்குறிப்புகள்; பிரபல ஜோதிடர் கணித்துச் சொல்லும் துல்லியமான ராசி பலன்கள்; தங்கள் எண்ணங்களையும் வண்ணங்களையும் அச்சில் பார்க்க வசதியாக வாசகிகளுக்கென்றே ஒதுக்கப்பட்ட தனித்துவப் பக்கங்கள்; வாசகிகளின் பிரச்னைகளுக்கு வாசகிகளே தீர்வு சொல்லும் என் கையேடு - சிநேகிதிக்கு போன்ற பக்கங்கள்; அறுசுவையில் அசத்தும் சமையல் கலை நிபுணர்களில் சிறப்பு சமையல் குறிப்புகள்; சாதித்த பெண்கள், மற்றவர்களிடம் பேசும் வழிகாட்டும் ஒலி; பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாசகிகள் வரைந்து அனுப்பும் விதவிதமான ரகம் ரகமான கோலங்கள்; கைவினைப்பொருட்களை வீட்டிலேயே செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கங்கள்; சின்னத்திரை உலகை படம்பிடிக்கும் "ரிமோட் ரீட்டா"; குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்ல சினிமாக்களை விவரிக்கும் பக்கங்கள்; உட்புற வீட்டினை அலங்கரிக்கும் ஒப்பனைகள்; ஆன்மிகம், மனநல ஆலோசனை; பருவகாலத்திற்கு ஏற்றாற்போல தரப்படும் 30 வகை சமையல் குறிப்புகள் அடங்கிய 32 பக்க இலவச இணைப்பு என அவள் விகடன் வெளியாகிறது.
வரலாறு
தமிழ்க் குடும்பங்களின் தலைமகள் என்கிற அடையாளத்துடன் வெளிவரும் அவள் விகடனின் முதல் இதழ், 1998-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. செவ்வாய்விட்டு செவ்வாய் என மாதம் இரண்டு இதழ்கள் வெளியாகின்றன. சற்றேறக்குறைய இப்புத்தகத்தின் பாதி பக்கங்கள், நேரடியாகவோ மறைமுகமாகவோ வாசகிகளின் பங்களிப்பில் வெளியாகிறது. பெண்களுக்குத் தேவையான தொழில் பயிற்சிகளை நேரடியாக அளிப்பதற்கான மேடை போடுவது; பெண்களின் திறமைகளை வெளிக் கொணர்வதற்காக மேடைகள் அமைத்துக் கொடுப்பது; உள்ளூர் சினிமாவில் ஆரம்பித்து உலக சினிமா வரை அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகள் இடம்பெறுவது; அட்டைப்படங்களில் நவநாகரீகப் பெண்களின் படங்களும் பளபளப்பது என பெண்களுக்கான பெரும்பாலான மக்கள் விரும்பும் நாளிதழாக வெளியாகிறது அவள் விகடன்.
சமூக அக்கறை
பெண்களின் தேவைகளையும், பிரச்னைகளையும் பேசிக்கொண்டிருந்தால் போதாது என்பதை உணர்ந்திருக்கும் அவள்விகடன், செயல்பாட்டிலும் களமிறங்கி, சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. பெண்கள், தங்கள் பணிச்சுமைகளை மறந்து மலர்ந்திருக்க ஜாலிடே உள்ளிட்ட நிகழ்ச்சிகள்; மனநலம் சார்ந்த விஷயங்களில் தெளிவுபெறுவதற்காக மனநல மருத்துவரின் உரையாடல் நிகழ்ச்சிகள்; தங்களின் திறமையைக் கொண்டு முன்னேறுவதற்காக தொழில் சார்ந்த பயிற்சிகள்; கல்லூரிப் பெண்களின் கலக்கல் திறமைகளை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சிகள்; சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை-எளியோருக்கான உதவிகள் என்று அவள் விகடனின் சமூக அக்கறை பட்டியல் நீள்கிறது.
வாசகர் பங்குபெறும் நிகழ்ச்சிகள்
ஜாலிடே
வாசகிகள், அவள் விகடன் மூலமாக மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது.. நேரடியாக ஒருவருக்கொருவர் சந்திக்க வைக்க வேண்டும் என்ற புதிய நோக்கத்துடன் பல நிகழ்ச்சிகளையும் நடத்தி வெற்றி பெற்றுள்ளது அவள்விகடன்.அந்த வகையில் வீட்டுக்கவலைகளை எல்லாம் மறந்து, உற்சாகத்தில் மிதக்க வேண்டும் என்பதற்காகவே... ‘ஜாலி டே’ எனும் புத்தம் புதிய திருவிழாவை 1999-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது அவள் விகடன். கூட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த கிளி, கதவு திறக்கப்பட்டதும் உற்சாகம் பொங்க சிறகடித்தது போல, அந்நாட்களில் இந்தத் திருவிழாவுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு வந்து குவியும் வாசகிகளின் ஆர்வம்... அதிசயிக்கத் தக்கதே! இந்த நிகழ்வு, தமிழ் மீடியா உலகில் புதுப் பாதையை திறந்து வைத்தது என்றே சொல்ல வேண்டும். இன்று வரையிலும், ஜாலி டே எனும் இந்த இரண்டு நாள் நிகழ்வு, வாசகிகளின் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.[1] [2]
மகளிர் திருவிழா
சென்னைத் தீவுத்திடலில் நடக்கும் பிராமாண்ட வர்த்தக-தொழில் பொருட்காட்சியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு, ’தினமும் ஒரு தொழில்' என்கிற விகிதத்தில் வாசகிகளுக்கு பல்வேறு தொழில் குறித்த பயிற்சிகளை வழங்கி, பிரமிக்க வைத்தது அவள் விகடன். [3] [4]
வழிகாட்டல்
நீங்களும் தொழில் அதிபர்தான் என்கிற தலைப்பில், பெண்களுக்கான புதுப்புது தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழகம் முழுக்க, ஏன் அந்தமான் தீவுகளில்கூட சிறப்பு நிகழ்ச்சிகளை வாசகிகளுக்காக நடத்தியிருக்கிறது அவள் விகடன். ஃபேஷன் ஜுவல்லரி, பாக்குமட்டைத் தட்டுப் பயிற்சி, பேப்பர் கப் பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சி என்று பலவிதமான பயிற்சிகள் இதன் மூலமாக வழங்கப்படுகின்றன. அவள்விகடன் மூலம் குறிப்பிட்ட சில தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு வழிகாட்டி அவர்களை ஊக்கப்படுத்தி தொழில் ஆரம்பிக்கவும் உதவி செய்து அவர்களை வெற்றிபெற வைக்கிறது அவள் விகடன். இதன் மூலம் பல வாசகிகள தாங்களே தொழிலை கற்றுக் கொண்டு தொழிலதிபராகியுள்ளனர்.[5]
வீட்டுத்தோட்டம்
இன்றைய சூழலில், நாம் உண்ணும் உணவில் ரசாயனங்களின் தாக்குதல் அதிகமாகிவிட்டது. குறிப்பாக, காய்கறி விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் தாக்கம், அதை உண்ணும் மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை. இதிலிருந்து தப்பிக்க, இயற்கை முறை காய்கறி உற்பத்தியை ஒவ்வொருவரும் வீட்டிலேயே செய்ய முடியும் என்பதைக் கற்றுத்தருவதற்காக தமிழகம் முழுக்க வீட்டுத் தோட்டம் பற்றிய பயிற்சிகளைக் கொடுத்து வருகிறது அவள் விகடன்.[6]
செல்நெட்
கல்லூரி மாணவிகளின் கலக்கலான திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில், கேம்பஸ் திருவிழா தமிழகம் முழுக்க பல்வேறு கல்லூரிகளில் நிகழ்த்தப்பட்டது. கால மாற்றத்துக்கு ஏற்ப, இன்றைய டிஜிட்டல் உலகத்தின் மாணவ-மாணவிகளை ஈர்க்கும் வகையில், ’செல்நெட்’ என்கிற தலைப்பில் நடத்தப்படும் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மாணவ-மாணவிகளுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைப்பதாக இருக்கிறது.[7]
இவை தவிர, கோலப்போட்டி, சமையல் போட்டி, வீட்டுத்தோட்டம் அமைப்பது என்று பல தளங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அவள் விகடன்.
சமூக சேவை
ஒவ்வோர் ஆண்டும், பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் நல்லமதிப்பெண்கள் பெற்றிருந்தும், மேற்படிப்பைத் தொடர முடியாத நிலையிலிருக்கும் ஏழை, எளிய குடும்பத்து மாணவிகள் பற்றிய செய்தியை வெளிப்படுத்தி, அவர்களுக்கு பல இடங்களிலிருந்தும் போதுமான உதவிகள் கிடைப்பதற்கு ஒரு கருவியாக இருக்கிறது அவள் விகடன்.[8]
அவள்விகடன் குறித்து பிரபலங்களின் பார்வை
தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்
’ஆண்களும், பெண்களும் சமம்னு நினைக்கிறவ நான். ‘அவள் விகடன்’னு ஒரு பெண்கள் பத்திரிகை வெளிவந்தப்போ, ‘பெண்களுக்குனு கட்டம் கட்டி ஒதுக்குகிற ஒரு இதழ் தேவைதானா?’னு யோசிச்சிருக்கேன். ஆனா, அதைப் படிச்சப்போ, இது பெண்களுக்கான அவசியத் தேவைனு தெரிஞ்சுக்கிட்டேன். ‘பெண்கள் பத்திரிகைனா சமையலும், கோலமும்தான்’னு நினைச்ச எல்லாரோட எண்ணத்தையும் பொய்யாக்கிடுச்சு அவள் விகடன். ‘அவள்’ தந்த அங்கீகாரத்தின் மூலமே தன் திறமையைத் தானே முதல் முறை உணர்ந்த பெண்கள் பலர்!’’[9]
இந்துமதி எழுத்தாளர்.
‘ஒரு முறை பாரீஸ் போயிருந்தப்போ, அங்கே நிறைய கல்லூரிப் பெண்கள் புதிது புதிதா ஃபேஷன் ஜுவல்லரிகளுக்கான பொருட்களை வாங்கிக்கிட்டிருந்தாங்க. விசாரிச்சப்போ, ‘நாங்களே செய்து விற்கிறோம்!’னு சொன்னாங்க. ‘யார் கற்றுக்கொடுத்தா?’னு கேட்டா, ‘அவள் விகடன்!’னு சொன்னாங்க. இப்படி ஏதாவது ஒரு சுயதொழிலைக் கற்றுக்கொடுத்து, பெண்களோட பொருளாதாரப் பிடிமானத்துக்கு ‘அவள்’ தொடர்ந்து அளித்து வரும் அக்கறை, உண்மையானது.’’
'பத்மஸ்ரீ’ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,தலைவி, உழவனின் நில உரிமை இயக்கம் (LAFTI)
இந்த 88 வயதிலும், என் கரம் சேரும் புத்தகங்களில் ‘அவள் விகட’னும் இருக்கும். விரும்பிப் படிப்பேன் என்று என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். மறக்க முடியாத ஒரு விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. மதுரையில் இருக்கும் ஒரு பெண். அவளின் நலன் கருதி பெயரை தவிர்க்கிறேன். கணவரின் தொடர் கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி இருந்தவள். ஒருவித புதுத்தெம்பு வந்து விழ, தன் கணவரால் தனக்கு நேர்ந்த இடையூறுகளை எல்லாம் சேர்த்து, புனைப்பெயரை வைத்துக்கொண்டு, அவ்வப்போது அவள் விகடனில் எழுதி வருவாள். அப்போது எல்லாம் அதை படித்துவிட்டு என் கருத்தையும் கேட்பாள். நானும், அதை விமர்சிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு... தனித்துவமாக செயல்பட தொடங்கியவள், இன்று ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறாள். அந்த ‘தன்முயற்சி’ இப்போதும் எனக்கு ஆச்சர்யத்தைத் தரும். பதினைந்தாயிரம் பேர் கொண்ட ஒரு பட்டாளத்தையே கட்டுக்கோப்பாக நகர்த்திய அனுபவம் எனக்கு உண்டு. என்னைச் சுற்றி இருக்கும் பெண்களிடம்... சொல்வேன், ‘வீ ஆர் நாட் ஆன் எம்ப்டி பாக்ஸ்!(We are not an empty box) என்று. அதில் ஒரு சிறு ஒளி ஏற்றி வைத்தால் போதும். அந்த ஒளியை அவள் விகடனும், தன் பங்குக்கு இங்கே பெண்கள் மத்தியில் நிறையவே ஏற்றி வைக்கிறது!’’
பாரதி பாஸ்கர்
‘மேடைகளில் பேசினாலும், எழுத்தில் அனுபவமில்லை எனக்கு. சுகி.சிவம் சார், ‘நீங்கள் ஏன் எழுதக் கூடாது?’னு கேட்டதோட, ‘அவள் விகடன்’ல நட்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ‘நீ நதிபோல ஓடிக்கொண்டிரு...’ தொடரின் மூலமா, ‘அவள்’ என்னை எழுத்தாளர் ஆக்கியது. ஒவ்வொரு அத்தியாயமும் வெளிவந்து, அதுக்கான பாராட்டுகள் குவிஞ்சப்போ, நிச்சயமா என் தன்னம்பிக்கை இன்னும் உயர்ந்ததை உணர்ந்தேன். என்னைப் பற்றிய தரிசனத்தை, எனக்கே தந்தது ‘அவள்’தான்.’’[10]
சின்னப்பிள்ளை (களஞ்சியம் அமைப்பு நிறுவனர்)
‘எங்க ஊரைத் தவிர வெளியுலகமே தெரியாம இருந்த என்னை, எல்லாருக்கும் முதலில் தெரிய வச்சது அவள் விகடன்தான். அதுல இருந்து நான் இந்தப் புத்தகத்தை விடாம ‘கேட்டுட்டு’ வர்றேன். விசயம் என்னன்னா... எனக்கு படிக்கத் தெரியாது... படிக்கத் தெரிஞ்சவுகள வாசிக்கச் சொல்லிக் கேட்பேன். என்னோட பேரன், பேத்திங்கதான் ஒவ்வொரு தடவையும் எனக்கு அவள் விகடனை வாசிச்சுக் காட்டுவாக. ஊர், உலகத்துல என்னவெல்லாம் நடக்குதுனு எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்தான்’’
வீணா குமாரவேல், (அழகுக்கலை நிபுணர்)
2000-2001 காலகட்டம். நாங்க புதிதா பார்லர் தொடங்கியிருந்த காலம். எங்க பியூட்டி பார்லருக்கு வந்த ஒரு பெண், தான் கையில் கொண்டு வைத்திருந்த ஒரு மேகஸினை பார்லர்லயே மறந்துட்டுப் போயிட்டாங்க. அந்த டேபிளில் பல ஆங்கிலப் பத்திரிகைகள் பரவிக் கிடந்தாலும், அன்று பார்லருக்கு வந்த பலரும் அந்த மேகஸினையே எடுத்துப் புரட்டுவதும், படிப்பதுமா இருந்தாங்க. என்ன புத்தகம் அதுனு ஆவலோட எடுத்துப் பார்த்தேன். முதல் பார்வையிலயே பெண்களை ஈர்க்கும் நிறைய விஷயங்கள் கண்ணில் பட்டது. அந்த மேகஸின்... ‘அவள்’. அன்றில் இருந்து நானும் அவள் விகடன் வாசகி. என் பொண்ணு தமயந்தி, ‘அவள் 16’ பகுதிக்கு, பரம ரசிகை. இணைப்பிதழாக வரும் 30 வகை ரெசிபி எதையும் மிஸ் பண்ணாம வீட்டில் செய்து அசத்துவாங்க எங்கம்மா. மூன்று தலைமுறைக்கும் பிரியமானவள், ‘அவள்’!’’ [11]
நளினி, (நடிகை)
‘’அவள் விகடன்... எனக்கு தாய், மகள், தோழி, அட்வைஸர், குரு... எல்லாமே. எங்க வீட்டு லைப்ரரியில ‘அவள் விகடன்’ பைண்டிங் ஃபைல்ஸ் நிறைய இருக்கு. என் மகளுக்கு சீதனமா கொடுக்க சேர்த்து வெச்சுருக்கேன்.’’[12]
External links
- ஜாலி டே,எங்கள் ஹோலி டே...!
- மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!
- பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
- உன் வீட்டுத் தோட்டத்தில்... காய் எல்லாம் போட்டுப் பார்!
- வரத்தை சாபமாக்கிக் கொள்ளாதீர்!
- குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!
- 'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!
- 'அவளு’ம் நானும்...பேசுகிறார்கள் பிரபலங்கள்..!
- 'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!