அலுமினியம்-இலித்தியம் கலப்புலோகம்
அலுமீனியம்-லித்தியம் என்பது, பல அலுமீனிய, லித்தியக் கலப்புலோகங்களைக் குறிக்க்கும் பெயராகும். பெரும்பாலும் இவற்றுடன் செப்பு, சிர்கோனியம் ஆகிய உலோகங்களும் கலப்பது உண்டு. லித்தியம் தனிம உலோகங்களிலேயே மிகவும் குறைந்த அடர்த்தியைக் கொண்டது ஆதலால், இக் கலப்புலோகங்கள் அலுமீனியத்தைவிட அடர்த்தி குறைந்தவையாக உள்ளன. வணிக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் 2.45% வரையான லித்தியத்தைக் கொண்டிருக்கும்.[1]
கலப்புலோகத்தில் இருக்கும் லித்தியம் இரு வகைகளில் கட்டமைப்பு நிறையைக் குறைக்கப் பயன்படுகிறது.
- லித்தியம் அணு, அலுமினியம் அணுவிலும் நிறை குறைந்தது. ஒவ்வொரு லித்தியம் அணுவும் ஒரு அலுமினியம் அணுவைப் பளிங்குக் கட்டமைப்பில் இருந்து இடம் பெயர்க்கிறது. நிறை அடிப்படையில் சேர்க்கப்படும் ஒவ்வொரு 1% லித்தியமும் கலப்புலோகத்தின் அடர்த்தியை 3% குறைக்கிறது. இவ்விளைவு, லித்தியம் அலுமீனியத்தில் கரையும் கரைதிறன் எல்லை வரை ஏற்படும்.[1]
- லித்தியம் அணு அலுமீனியம் அணுவிலும் பெரியது. பளிங்கினுள் பெரிய அணுவொன்றைச் சேர்ப்பது கட்டமைப்பை ஒரு இறுக்கநிலைக்கு உள்ளாக்குகிறது. இது கட்டமைப்பில் குலைவு ஏற்படாமல் தடுக்கிறது. இதன் விளைவாகக் கலப்புலோகம் வலுவானதாக இருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட தேவைக்கு, குறைவான உலோகமே போதுமானதாக அமையும்.
நிறை குறைவானவையாக இருப்பதனால், அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் முக்கியமாக விண்வெளித் தொழில் துறைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை தற்போது சில ஜெட் வானூர்திகளின் சட்டகங்களில் பயன்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு நிலைப்படி, அமெரிக்க விண்வெளி ஓடங்களின் வெளித் தாங்கி முக்கியமாக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகத்தினாலேயே உருவாக்கப்படுகின்றது.
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ஜோசி, அமித். "The new generation Aluminium Lithium Alloys" (PDF). இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை. Metal Web News. பார்த்த நாள் 2008-03-03.