அரசஞ்சண்முகனார்

அரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அரசப்பிள்ளை. தாயார் பெயர் பார்வதியம்மையார். இவர் சைவவேளாளர் குலத்தில் பிறந்தவர். இவர் இளமையிலே ஆர்வத்தோடு கல்வி கற்றுப் பெரும் புலமை பெற்றுவிட்டார். தம் காலத்தில் பலர் போற்ற வாழ்ந்த பெரும் புலவராக விளங்கினார். ஆங்கிலம் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என காரணத்தைக் காட்டி ஆங்கிலப் பாடத்துக்கு பாடநேரத்தைக் கூட்டியும் தமிழ்ப் பாட நேரத்தைக் குறைத்தும் தலைமை ஆசிரியர் ஆணைக் கொண்டுவந்தபோது அதனை எதிர்த்துப் பள்ளியிலிருந்து வெளியேறினார். மதுரை சேதுபதிப் பள்ளியில் பாரதியார் தமிழாசிரியராக வேலையில் சேருவதற்காக தாம் விடுப்புப் போட்டு அவர் இடத்தில் பாரதியார் பணிசெய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

பிறப்பு, படிப்பு, பணி

இவருடைய இயற்பெயர் சண்முகம்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிறந்தார். அவருடைய தந்தை அரசப்பப் பிள்ளை தாய் பார்வதி அம்மாள். அழகர்சாமித் தேசிகரிடம் தொடக்கக் கல்வியும் சிவப்பிரகாச அடிகளிடம் தமிழ்க் கல்வியும் பயின்றார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார்.

இயற்றிய நூல்கள்

  • சிதம்பர விநாயக மாலை
  • மாலை மாற்று மாலை
  • ஏக பாத நூற்றந்தாதி
  • இன்னிசை இருநூறு
  • மதுரை மீனாட்சி அம்மன் சந்தத் திருவடிமாலை
  • திருவடிப் பத்து
  • நவமணிக் காரிகை நிகண்டு
  • வள்ளுவர் நேரிசை
  • இசை நுணுக்கச் சிற்றுரை
  • தொல்காப்பியப் பாயிர விருத்தி
  • திருக்குறள் ஆராய்ச்சி
  • திருக்குறட் சண்முக விருத்தி
  • நுண் பொருட் கோவை

இவர் இயற்றிய உரை ஆராய்ச்சி நூல்கள் தொல்காப்பியப்பாயிர விருத்தி, திருக்குறள் உரை விளக்கம் ஆகியன செந்தமிழ் இதழ்களில் இடம் பெற்று வெளிவந்தன. தொல்காப்பியப்பாயிர விருத்தி, சண்முக விருத்தி என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இந் நூலை இலக்கணப் புலமை பெற விரும்புவோர் விரும்பிப் பயில்கின்றனர். இந்நூல் ஓர் இலக்கண ஆராய்ச்சிக் களஞ்சியம் ஆகும்.

திறன்

இவர் கலந்துகொண்ட புலமைப் போர்கள் பல. அவற்றுள் ‘உம்மை’யைப் பற்றி நிகழ்த்திய ஆராய்ச்சியும், மறுப்பும் குறிப்பிடத் தக்கவை. ‘உம்மை’ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வென்ற சண்முகனார் முடிவில், “இதுகாறும் உம்மை நிலை அறியாதிருந்த நீவீர் இனியேனும் உம்மை நிலை அறிவீராக” என்று இரு பொருள்பட எழுதினார்.

எனினும், இவரோடு யாழ்ப்பாண தமிழறிஞர் சி. கணேசையர் நடத்திய விவாதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும், அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவினார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.