அயிரை மலை (சங்க காலம்)

அயிரைமலை என்னும் சங்ககாலப் பெயர்வழக்கு அய்யனார் மலையான ஐயப்பன் மலை என மருவியுள்ளது. நேரிமலை எனவும் இது வழங்கப்பட்டது.

அயிரை என்பது மிக உயர்ந்த மலை. அதன் முகடுகளிலிருந்து அருவிகள் இழும் என்னும் ஓசை முழக்கத்துடன் கொட்டும். [1] இது சிலம்பாறு.

பாலைக் கௌதமனார் என்னும் புலவர் சேர மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் அயிரை மலை நாட்டைப் போரிட்டு வென்றதைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் குறிப்பிடும் நேருயர் நெடுவரை என்னும் தொடர் நேரிமலை என்பதும் அயிரை மலையே என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. [2] மூன்றாம் பத்தில் உள்ள இந்தப் பாடலின் பதிகம் இவன் அயிரைமலைத் வழிபட்டான் எனக் கூறுகிறது. [3] யானை-நிரை பூட்டி இரண்டு கடல்களிலிருந்தும் நீரை ஒரே பகலில் கொண்டுவரச் செய்து நீராடிய பின் அயிரைமலை தெய்வத்தை வழிபட்டான். [4]இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் புலவுச் சோறு தந்து அயிரை தெய்வத்தை வழிபட்டான். [5] அப்போது அவனது அரசியல் சுற்றம் திங்களைச் சூழ்ந்திருக்கும் விண்மீன்கள் போலக் குழுமியிருந்தது.[6] இந்தச் செய்தி சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [7] பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடும்போது அவனது முன்னோரைப் போலவே இவனும் அயிரை மலையை வழிபட்டதைக் குறிப்பிடுகிறார். [8]

அயிரை என்னும் சொல் மீனைக் குறிக்கும். [9] இது இக்காலத்தில் மகர சோதி என்பதாகக் காட்டப்படுகிறது.

அடிக்குறிப்பு

  1. இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
    முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25
    அயிரை நெடு வரை (பதிற்றுப்பது 70)

  2. ‘முனை கெட விலங்கிய நேர் உயர் யடுவரை அயிரைப் பொருநன்’ எனக் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்து 21-29
  3. அயிரை பரைஇ பதிற்றுப்பத்து - பதிகம் 3-8
  4. கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,
    இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி,
    அயிரை பரைஇ, (பதிற்றுப்பது பதிகம் 3)

  5. <poem>குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு உரு கெழு மரபின் அயிரை பரைஇ (பதிற்றுப்பது 88)
  6. பல் மீன் நாப்பண் திங்கள் போல,
    பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
    உரு கெழு மரபின் அயிரை பரவியும்,
    கடல் இகுப்ப வேல் இட்டும், (பதிற்றுப்பது 90)
  7. உரு கெழு மரபின் அயிரை மண்ணி,

    இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும் (சிலப்பதிகாரம் 28-145)

  8. உருகெழு மரபின் அயிரை பரைஇ - பதிற்றுப்பத்து 88-12, 90-19
  9. சேற்றில் வாழும் மீன் - நற்றிணை 272,
    மீன் - குறுந்தொகை 128, 178, ஐங்குறுநூறு 164, மீன் - புறநானூறு 67-6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.