அம்ரிதா சேர்கில்

அம்ரிதா சேர்கில் (Amrita Sher-Gil, 30, சனவரி 1913–5, திசம்பர் 1941) என்பவர் இந்தியாவின் பெண் ஓவியர். இந்தியாவின் பிரிடா காலோ எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.[2]

அம்ரிதா சேர்கில்
பிறப்புசனவரி 30, 1913(1913-01-30) [1]
புடாபெஸ்ட், கங்கேரி இராச்சியம்
இறப்பு5 திசம்பர் 1941(1941-12-05) (அகவை 28)
லாகூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பாக்கித்தான்)
தேசியம்இந்தியர்
கல்விGrande Chaumiere
இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (1930–34)
அறியப்படுவதுஓவியர்

இளமைக்காலம்

பஞ்சாப் சீக்கியத் தந்தைக்கும் அங்கேரி நாட்டின் யூத மதத்தைச் சேர்ந்த தாயாருக்கும் அம்ரிதா சேர்கில் புடாபெசுடு நகரில் பிறந்தார்.[3] 1921 முதல் சிம்லா நகரில் வாழ்ந்து வந்தார். இளம் அகவையிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1923 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிலாரன்சு நகரில் கலை மையம் ஒன்றில் மாணவியாகச் சேர்ந்தார்.

ஓவியக் கலைப்பயணம்

ஓவியக்கலையில் மேலும் பயிற்சி பெற 1929 இல் பாரீசு நகருக்குப் போனார். அங்கு கவின் கலையில் இளங்கலைப் பட்டமும் பெற்று மேலை நாட்டு ஓவிய வகைகளையும் கற்றுக்கொண்டார். இளம்பெண்கள் என்ற பெயரில் அம்ரிதா சேர்கில் வரைந்த ஓவியம் மேலை நாட்டுப் பாணியில் அமைந்திருந்தது. 1934 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் இந்தியாவின் தொன்மைக் கலைகளிலும் இசுலாமிய ஓவியங்களிலும் ஆர்வம் காட்டினார்.

இந்திய கிராமத்துக் காட்சி

1937 இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மணப் பெண்ணின் அறை, பிரம்மச்சாரிகள், தென்னிந்திய கிராமிய வாழ்க்கை என்ற ஓவியப் படைப்புகள் புகழ் பெற்றன. அஜந்தா குகை ஓவியங்களும், இந்திய மக்களின் எளிய வாழ்க்கை நிலைகளும், பெண்களின் நலிந்த வாழ்வும் அம்ரிதாவின் ஓவியங்களில் பதிவாகின.

1938 இல் கொரக்பூரில் வாழ்ந்தபோது இரவிந்திரனாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவியங்களைக் கண்டார். அதன் விளைவாக வங்காளத்தில் நிகழ்ந்த கலைப்புரட்சியில் தாமும் இணைந்து கொண்டார். காந்தியக் கொள்கைகளிலும் அம்ரிதா நாட்டம் கொண்டார். 1941இல் லாகூரில் வாழ்ந்து வந்த அம்ரிதா ஒரு ஓவியக் கூடத்தை அமைத்தார். அங்கு ஓவியக் கண்காட்சியை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த நிலையில் 6 டிசம்பர் 1941 இல் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார்[4].

மேற்கோள்கள்

  1. Great Minds, The Tribune, 12 March 2000.
  2. Amrita Sher-Gill at. Mapsofindia.com.
  3. "Budapest Diary". Outlook. 20 September 2010. http://www.outlookindia.com/article.aspx?267032. பார்த்த நாள்: 5 February 2013.
  4. Amrita Shergill at. Indiaprofile.com (6 December 1941).

வெளியிணைப்புகள்

வாழ்க்கை

ஓவியங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.