அமீர் ஐதர் கான்
அமீர் ஐதர் கான் (Dada Amir Haider Khan, தாதா அமீர் ஹைதர் கான், 1900 - 1989) பிரித்தானிய இந்தியாவின் முதல் தலைமுறை பொதுவுடைமைத் தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலை இயக்கப் புரட்சியாளர்.[1][2]
வாழ்க்கைச் சுருக்கம்
அமீர் ஐதர் கான் ராவல்பிண்டி மாவட்டத்திலிலுள்ள சியாகிலியான் உமர் கான் என்ற சிறு கிராமத்தில் எளிய பஞ்சாபி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அமீர் ஹைதர்கான் சிறுவயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். பின்னர் அவரது தாயார் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். அவர் தன்னுடைய மாற்றாந் தந்தையிடம் பல கொடுமைகளை அனுபவித்தார் . ஆயினும் கல்வி கற்கும் தணியாத ஆவலால் அவர்வீட்டைவிட்டு வெளியேறி பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்.பின்னர் இவர் மதராசாவில் சேர்க்கப்பட்டார்.1914 ஆம் ஆண்டில் மும்பையில் பிரித்தானிய வணிகக் கப்பல் படையில் சேர்ந்தார். அங்கிருந்து அவர் 1918 இல் அமெரிக்க வாணிபக் கப்பல் படையில் இணைந்தார். இக்காலகட்டத்தில் அவர் யோசேப்பு முல்க்கேன் எனும் ஐரிய தேசியவாதியை சந்திக்க நேர்ந்தது. அவர் மூலம் பிரித்தானியருக்கு எதிரான அரசியல் கருத்துக்களை அறிந்து கொண்டார்.
சர்வதேச கம்யூனிஸ்டு அகிலத்தின் பிரதிநிதியாக உருசியாவில் சில காலம் செயல்பட்ட பின் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய ஐதர் கானுக்கு தென்னிந்தியாவில் கட்சியை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. மீரட் சதி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால் தமிழகத்திலும் தலைமறைவாகத்தான் இவர் வாழ வேண்டியிருந்தது. சங்கர் எனும் புனை பெயரை வைத்துக்கொண்டு தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் சாதிய அமைப்பை தெரியாமலும், எவரொருவர் உதவியின்றியும் சென்னை(மெட்ராஸ்) வந்து கம்யூனிஸ்டு கட்சியை கட்டும் பொறுப்பை ஏற்றார். அவ்வாறு தனித்து இருந்த போதும், இந்த முகம் தெரியாத ஊரில், மாத்யூஸ் என்ற ரயில்வேத் தொழிலாளியிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார் கான்.
வாழ்க்கை வரலாறு
ஆமீர் ஹைதர்கானின் வாழ்க்கை வரலாற்றை அவரிடம் நேரிடையாகக் கேட்டுப் பெற்ற டாக்டர் அயூப் மிர்சா என்பவர் உருது மொழியில் எழுதிய வாழ் புனைகதையின் சுருக்கப் பட்ட ஆங்கிலப் பெயர்ப்பின் தமிழாக்கம் - "அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட்" என்கிற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.[3]