அபி ஒளிவிலகல்மானி

அபி ஒளிவிலகல்மானி (Abbe refractometer) என்பது ஒளிவிலகல் எண்ணை மிகத் துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவியாகும்.

வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பட்டகத்துடன் கூடிய அபி ஒளிவிலகல்மானி

விளக்கம்

செர்மனி நாட்டைச் சேர்ந்த எனெசுட் அபி (1840–1905) என்ற இயற்பியலாளரால் 19 ஆம் நூற்றாண்டில் இக்கருவி உருவாக்கப்பட்டது. இது வெப்பநிலைமானியுடன் கூடிய ஒளிவிலகல்மானியாகும், தண்ணீருடன் கூடிய வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. நிறப்பிரிகையால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கும் அமைப்பும் உள்ளது. இது திரவங்களின் ஒளிவிலகல் எண் காணப் பயன்படுகிறது.

அபி ஒளிவிலகல்மானியில், வெளிச்சம் தரும் பட்டகத்திற்கும், ஒளிவிலகல் உண்டாக்கும் பட்டகத்திற்கும் இடையே ஒளிவிலகல் எண் காணப்பட வேண்டிய திரவ மாதிரி வைக்கப்படுகிறது. ஒளிவிலகலை உண்டாக்கும் பட்டகத்தின் ஒளி விலகல் எண் 1.75 ஆக இருக்கும். இது கண்ணாடியால் ஆனது. ஆனால் பயன்படுத்தப்படும் திரவத்தின் ஒளி விலகல் எண், இதை விடக் குறைவாக இருக்க வேண்டும். ஒரு ஒளிமூலமானது, வெளிச்சம் தரும் பட்டகத்தை நோக்கி அமைக்கப்படுகிறது. இப் பட்டகத்தின் அடிப்பகுதி பட்டை தீட்டபடாமலிருக்கும். இதனால் ஒளியானது எல்லாப் பாதைகளிலும் செல்ல இயலும். ஒளிவிலகலை உண்டாக்கும் பட்டகத்தின் பின்புறம் உணரி (detector) இணைக்கப்பட்டிருக்கும்.

அபி கண்டுபிடித்து ஒரு நூற்றாண்டு ஆனாலும், இந்தக் கருவியின் பயன்பாடும், துல்லியமும் உயர்ந்துள்ளது. கண்ணாடி, நெகிழி மற்றும் பலபடி போன்ற திடப் பொருட்களின் ஒளி விலகல் எண்ணையும் காண உதவுகிறது. நவீன அபி ஒளிவிலகல்மானிகள் எண்ணிம அளவீடுகளைக் கொண்டுள்ளது.

திரவத்தின் வெப்பநிலையை சீராக்க, தண்ணீரைச் சுற்ற வைக்கும் அமைப்பு உள்ளது. குறிப்பிட்ட அலைநீளத்தைப் பிரித்தெடுக்க, உகந்த வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த அலைநீளம் கொண்ட அகச் சிவப்பு கதிர்களைக் காணவும் இக்கருவிகள் பயன்படுகிறது. அனைத்து அலைநீளங்களையும் பயன்படுத்தும் அபி ஒளிவிலகல்மானி அபி எண்களைக் கண்டறிய உதவுகிறது.

தண்ணீருக்குப் பதில் இன்றைய நிலையில் திட நிலைக் (solid-state) கருவிகளைக் கொண்டு, ஒளிவிலகல்மானியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.