அதிர்வலை
அதிர்வலை (Shock wave), (அதிர்வு முகப்பு (Shock front) அல்லது எளிமையாக அதிர்வு (Shock)) என்பது, ஒருவகையான பரவும் இடையூறு ஆகும். இதுவும் சாதாரண அலை போல் ஊடகங்கள் (காற்று, திரவம், அயனிமம் மற்றும் திண்மம்) வழியாக பரவுகிறது. சில வேளைகளில் ஊடகங்கள் இல்லாத இடங்களிலும், புலன் வழியாக (எ-கா: மின்காந்தப்புலன்) பரவுகிறது. அதிர்வலை திடீரென்று ஏற்பட்டு தொடர்பற்ற மாற்றத்தை ஊடகத்தில் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதிர்வின் குறுக்காக அழுத்தம், வெப்பம், அடர்த்தி ஆகியவை துரிதமாக அதிகரிக்கும். மீயொலிவேக பாய்வுகளில், விரிதலானது ஒரு விரிதல் விசிறி மூலமாக நடைபெறுகிறது. அதிர்வலையானது மற்றெந்த அலைகளையும் விட அதிவேகத்தில் ஓர் ஊடகம் வழியே பரவக்கூடியது.

சாலிடான்களைப் போலன்றி (மற்றொரு வகை நேரிலா அலை) அதிர்வலைகளின் ஆற்றல் தூரத்தைப் பொறுத்து வெகுவேகமாக குறையும். மேலும், உடனேகும் விரிதல் அலையானது இதனோடு நெருங்கிவந்து பின் கலந்துவிடுகிறது, அதில் பகுதியாக அதிர்வலை கரைந்து போகிறது. மீயொலி வேக வானூர்திகளோடு தொடர்புடைய ஒலி முழக்கம், வானூர்தியால் உருவாகும் அதிர்வலை தரவீழ்ச்சியாலும் விரிதல் அலையோடு ஒன்றுகலப்பதாலும் உருவாகும் ஒலி அலையாகும்.
அதிர்வலையானது ஓர் ஊடகத்தின் வழியே பரவும்போது, மொத்த ஆற்றல் மாறுபடுவதில்லை. ஆனால், வேலையாக மாற்றப்படக்கூடிய ஆற்றல் குறைகிறது மற்றும் சிதறம் (Entropy) அதிகரிக்கிறது. இது, எடுத்துக்காட்டாக, வானூர்திமேல் அதிகமான இழுவையை அதிர்வுகள் மூலம் ஏற்படுத்துகிறது.