ஒலி முழக்கம்
ஒலி முழக்கம் (Sonic Boom) என்பது, வளியில் ஏற்படும் அதிர்வலை ஒன்றின் செவிப்புலனாகக்கூடிய கூறாகும். இச்சொல்லானது பொதுவாக மீயொலி விமானங்கள், விண்வெளி ஓடங்கள் போன்றனவற்றின் பறப்பின் காரணமாக ஏற்படும் வளி அதிர்ச்சியை குறிக்கவே பயன்படுகிறது. இந்த ஒலி முழக்கமானது மிகப்பெருமளவிலான ஒலி வலுவினை உற்பத்தி செய்கிறது. இதன் போது ஏற்படும் முழக்கம் குண்டு வெடிப்பினை போன்று மிகப்பெரும் ஓசையுடையதாய் இருக்கும். சாதாரணமாக இவ்வதிர்வலைகள் சதுர மீட்டருக்கு 167 மெகா வாட்டுக்களாகவும், 200 டெசிபலை அண்மித்ததாகவும் இருக்கும்.


விமானம் ஒலித்தடையினை அண்மித்து இருக்கும் போது இயல்புக்கு மாறான முகிற் கூட்டம் ஒன்று உருவாகலாம். அதிர்வலை ஒன்று உருவாகுவதன் காரணமாக வளி அமுக்கம் திடீரென குறைவடையலாம். இவ்வாறு வளியமுக்கம் குறைவடையும் போது அது திடீர் வெப்பநிலை வீழ்ச்சியை அச்சூழலில் உருவாக்குகிறது. ஈரப்பதனான காலநிலைகளிலில் இச்சூழலிலுள்ள நீராவி இவ்வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக திடீரென ஒடுங்கி இம் முகிலினை உருவாக்குகிறது.
ஒரு பொருள் வளியில் அசையும் போது அது தன் முன்னாலும் பின்னாலும் அமுக்க அலைகளை தோற்றுவிக்கிறது. இவ்வலைத் தோற்றமானது படகொன்று நீரில் செல்லும்போது தோன்றும் அலைவடிவத்தை ஒத்திருக்கும். இவ்வலைகள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. பறக்கும் பொருளின் வேகம் அதிகரிக்கும்போது, இவ்வமுக்க அலைகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமுறுகின்றன. இவ்வாறு நெருக்கமுற்ற அமுக்க அலைகள் தம்மிடையே ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும்போது பரிவு உருவாகி ஒரு தனித்த அதிர்வலை ஒலியின் வேகத்தில் உருவாக்கம்பெறுகிறது. இந்த உச்ச வேகம், Mach 1 என்று அறியப்படுகிறது. இவ்வதிர்வலையின் வேகம் கடல்மட்டத்தில் ஏறத்தாழ 1225 கிலோமீட்டர்/மணி நேரம் ஆக இருக்கும்.
அதிர்வலையானது, விமானத்தின் மூக்குப்பகுதியில் ஆரம்பித்து வாற்பகுதியில் முடிவுறும். மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படுவதோடு அது வாற்பகுதியை நோக்கி செல்ல படிப்படியாக குறைவடைந்து பின் சடுதியாக இயல்பு நிலையை அடையும். இவ்விளைவு N அலை என்று சொல்லப்படுகிறது. அவ்வலையின் வடிவம் ஆங்கில எழுத்து N போல இருப்பதாலேயே இப்பெயர் ஏற்பட்டது. திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போது முழக்கம் ஏற்படுகிறது. N அலை காரணமாக இரட்டை முழக்கம் உணரப்படுகிறது. ஒன்று மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போதும், இரண்டாவது வாற்பகுதியில் திடீரென அமுக்க இயல்பு நிலைக்கு திரும்பும் போதும் ஏற்படுகிறது. இவ்விளைவே மீயொலி விமானங்களில் இருந்து எழும் இரட்டை முழக்க ஒலிக்கு காரணமாகிறது
வான்படை பயிற்சி, நகர்வுகளின்போது இவ்வமுக்க விநியோகம் வேறு வகையாக இடம்பெறுகிறது. U அலை என்று அறியப்படும் வடிவத்தில் இது ஏற்படுகிறது. பறப்பிலிருக்கும் கலம் மீயொலி வேகத்திலிருக்கும் நேரம் முழுவதும் இதன்போது முழக்கம் ஏற்பட்டவண்ணமிருக்கும். இச்சந்தர்ப்பத்தில் கலம் பறக்கும் பாதை வழியாக நிலத்திலும் அதிர்வு பரவலுறும்.