அண்ணாமலையார் கோயில் அமைப்பு

திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலின் அமைப்பினைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. இக்கோயில் சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகும்.

கோயில் அமைப்பு

24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள்., கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.[1]

வடிவமைப்பு

கோபுரங்கள்

அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.

  • திருமஞ்சன கோபுரம்

திருவண்ணாமலையின் தெற்கு திசையில் உள்ள கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது 157 அடி உயரம் உடையதாகவும். இக்கோபுரத்தின் வழியாகவே உற்சர்வர்கள், மூலவர்கள் சந்நிதிக்கு அபிசேகத்திற்கென திருமஞ்சன நீர் எடுத்து வருவதால் இக்கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.

  • அம்மணியம்மாள் கோபுரம்

திருவண்ணாமலையின் வடக்கு திசையில் உள்ள கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரம் 171 அடி உடையதாகும். இக்கோபுரம் கட்டி முடிக்கப் படாமல் இருந்த பொழுது அம்மணியம்மாள் எனும் பெண் சித்தர், பக்தர்களின் உதவியோடு பொருளீட்டி இக்கோபுரத்தினை கட்டினார். அதனால் அவ்வம்மையின் நினைவாக அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.

  • பேய் கோபுரம்

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் உள்ள கோபுரம் பேய் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரம் 160 அடி உடையதாகும். இக்கோபுரம் பே கோபுரம் என்றும் சுட்டப்படுகிறது. தொடக்கத்தில் மேற்கு கோபுரம் என அழைக்கப்பெற்ற இக்கோபுரம், மேற் கோபுரம் என்ற அழைக்கப்பட்டு பின்னர் பே கோபுரம், பேய் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

  • ராஜ கோபுரம்
அண்ணாமலையார் கோயில் கிழக்கு கோபுரம்

திருவண்ணாமலையின் கிழக்கு கோபுரம் இராஜ கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

இராஜ கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். இதனால் தமிழகத்தின் இரண்டாவது உயர்ந்த கோபுரம் என்ற பெருமை பெற்றுள்ளது. இக்கோபுரம் 11 நிலைகளைக் கொண்டதாகும். இதன் அடிப்பகுதி 135 அடி நீளமும், 98 அடி அகலமும் உடையதாக இருக்கிறது.

  • கிளி கோபுரம்

மூன்றாவது பிரகாரத்தில் கிளி கோபுரம் அமைந்துள்ளது. இது 81 அடி உயரமுடையதாகவும். அருணகிரி நாதர், கிளியாக உருவெடுத்து தேவலோகத்திலிருந்து பாரிஜாத மலர்களை கொண்டு வர சென்ற போது, அவருடைய உடலை எரித்துவிட்டார்கள். அதனால் கிளியாக அமர்ந்து இக்கோபுரத்தில் பாடல் பாடினார். அதனால் இக்கோபுரம் கிளி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரத்தின் சிற்பங்கள் இடையே கிளியொன்று அமர்ந்திருப்பது போன்ற சிற்பத்தினைக் காண முடியும்.

  • வல்லாள மகாராஜா கோபுரம்

ஐந்தாவது பிரகாரத்தில் வல்லாள மகாராஜாவால் கட்டப்பெற்ற கோபுரம் அமைந்துள்ளது. இது அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதனைக் கட்டிய பெருமையால் ஆனவம் கொண்டிருந்ததால், சிவபெருமான் இக்கோவில் கோபுரம் வழியாக உள்ளே நுழைய மறுத்ததாகவும், அதனால் மனம் வருந்திய மன்னன் தன் தவறினை உணர்ந்த பிறகு, சிவபெருமான் இக்கோபுரம் வழியாக வந்ததாகவும் தொன்மொன்று உரைக்கிறது.

இவையன்றி தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.

இதனால் திருவிழாவின் பத்தாம் நாளில் இக்கோபுரம் வழியாக உற்வசவர் உள்நுழைகிறார்.

மண்டபங்கள்

  1. ஆயிரம் கால் மண்டபம்
  2. தீப தரிசன மண்டபம்
  3. 16 கால் மண்டபம்
  4. திருக்கல்யாண மண்டபம்
  5. புரவி மண்டபம்
  6. மணி மண்டபம்
  7. கொலு மண்டபம்
  8. மஹாசங்கராந்தி மண்டபம்
  9. அமுத மண்டபம்
  10. அவணி ஆளப்பிறந்தான் மண்டபம்
  11. ஏழாம் திருநாள் மண்டபம்
  12. சக்திவிலாச சபா மண்டபம் - திருக்கோயிலில் பிரம்ம தீர்த்தக் குளத்திற்கு எதிரில் தவத்திரு ஞானியர் சுவாமிகள் நிறுவிய சக்திவிலாச சபா மண்டபம் உள்ளது. இங்கு சமய சம்மந்தமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தீபதரிசன மண்டபம்

கிளிக்கோபுரம் அருகே தீபதரிசன மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தினை 1202ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி அம்மையார் அமைந்தார். இந்த மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளிய பின்பு தீபம் ஏற்றப்படுகிறது.

சந்நிதிகள்

மூலவர்

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை.

அம்மன்

இக்கோவிலின் மூன்றாவதுப் பிரகாரத்தில் உண்ணாமலை அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. விநாயகன், முருகன் என குழந்தைகளுக்குத் தாய் என்றாலும் இரு குழந்தைகளும் உண்ணாத முலையைக் கொண்டவள் என்று பொருள் படும்படி இவ்வாறு அழைக்கப்படுகிறார்.

அர்த்தநாரீஸ்வரர்

மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

பெருமாள்

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம், பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள ‘வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

விநாயகர்

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்தி

மாட்டுப்பொங்கலன்று பலகார மாலைகளுடன் காட்சி தரும் நந்தி

மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முருகன்

இத்தளத்தில் மூன்று இடங்களில் முருகப்பெருமானுக்கு இளையனார் என்ற பெயரோடு சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. அவையாவன,.

  • கம்பத்திளையனார் - (கம்பம் - தூண், இளையனார்-முருகன்) சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்’ என பெயர் பெற்றார்.
  • கோபுரத்திளையனார் - அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர்
  • பிச்சை இளையனார் - பிச்சை இளையனார் சந்நிதி கிளிகோபுரம் அருகே அமைந்துள்ளது.

பைரவர்

இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பிரம்மலிங்கம்

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

ரமணர் - பாதாளலிங்கம்

பகவான் ரமணருக்கு மதுரையில் சித்தப்பா வீட்டில் மரணம் பற்றிய எண்ணம் உண்டாகி அதனை தொடர்ந்து தன்னை உணர்ந்து முழுமையான ஆன்ம விழிப்புணர்வு கிட்டிய ஒன்றரை மாதத்துக்கு பிறகு திருவண்ணாமலைக்கு கிளம்பி வந்து சிறிது காலம் இக்கோயிலில் தங்கியிருந்தார். கோமணத்துடன் தன்னை மறந்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த அவரை சின்ன பையன்கள் விளையாட்டாக கல்லால் அடித்து தொந்தரவு செய்ததால் பாதாள லிங்கத்துக்குள் சென்றார். அங்கேயே சிறிது நாள்கள் தன்னை மறந்து தியானத்தில் இருந்தார். ஆயிரம் கால் மண்டபத்தின் அருகே பாதாள லிங்கம் இருக்கிறது.

அருணகிரியார்

அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரைத் தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணிந்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தான். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். ‘கிளி கோபுரம்’ என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை ‘அருணகிரி யோகேசர்’ என்கிறார்கள்.

தீர்த்தங்கள்

  • சிவகங்கை தீர்த்தம்
  • பிரம்ம தீர்த்தம்

ஆதாரங்கள்

  1. http://temple.dinamalar.com/New.php?id=22
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.