அகரம் அறக்கட்டளை

அகரம் அறக்கட்டளை (ஆங்கிலம்:Agaram Foundation) 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட அரசு சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்ட இந்த அமைப்பு, சமூகத் தீமைகளை நீக்குவதற்கு கல்வி மிகச் சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டு அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் நிறுவனர் பிரபல திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமார். பல்வேறு விளம்பரதாரர்கள் , ஊடகம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் இந்த அமைப்பிற்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளனர்.[1]

அகரம் அறக்கட்டளை
நிறுவனர்சூர்யா சிவகுமார்
வகைகல்வி அறக்கட்டளை
நிறுவப்பட்டது25ம் செப்டம்பர் 2006
நிலைபணியில் உள்ளது
முகவரிஎண் 25,கிருஷ்ணா தெரு, தி. நகர், சென்னை – 600 017,தமிழ் நாடு, இந்தியா
தொலைபேசி எண்+91 44 4350 6361
அலைபேசி எண்+919841891000, +919841091000
மின்னஞ்சல் முகவரிinfo@agaram.in
இணையதளம்அகரம் பவுண்டேஷன்

வரலாறு

அகரம் பவுண்டேஷன் 25 ஆம் தேதி- செப்டம்பர் மாதம் - 2006 இல் பிரபல திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமாரால் நிறுவப்பட்டது. 2010 இல் இந்த அமைப்பு வசதியற்ற மற்றும் திறன்கொண்ட +2 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளிப்பதற்காக துவக்கப்பட்டது. 2012 இல் அகரம் பவுண்டேஷன் 500 க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை நம் நாட்டின் பொறுப்பான குடிமக்களாக உருவாக்க அனைத்து அம்சங்களிலும் பயிற்சி அளிக்க தொடங்கியது.[2] ஏற்கனவே சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் 1979 இல் நிறுவிய “சிவகுமார் கல்வி அறக்கட்டளை” மூலம் மேல்நிலைத் தேர்வுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 ஆண்டுகளாக அவர் செய்து வந்த சேவையை இப்போது அவரது புதல்வர்களான சூர்யா சிவகுமார் மற்றும் கார்த்தி சிவகுமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.[3] 2014 இன் பகுப்பாய்வின் படி 31,804 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதிலிருந்து 970 மாணவர்கள் நிதி உதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் இருந்து இப்பணிக்கு ஆதரவளிக்க தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

நோக்கம்

சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை அளிப்பதே இதன் முதன்மையான நோக்கமாகும்.

குறிக்கோள்கள்:

தரமான கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு அங்கே தேவையான வசதிகள் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்த முற்படுவது. கிராமப்புற மக்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை உருவாக்குவது. தகுதியான மாணவர்களுக்கும் உதவி செய்ய விரும்புவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக திகழ்ந்து நற்பணிகள் செய்வது. பயன் அடையும் மாணவரின் வளர்ச்சியை கண்காணிப்பது. கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை அமைத்து , அவற்றை செயல்படுத்துவது; கல்வி கற்பிக்க விருப்பமுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தகுந்த பயிற்சியும் உதவியும் அளிப்பது. மாணவர்களுக்கு மென் திறன் பயிற்சியும் முழுமையான ஆளுமை வளர்ச்சியும் அளிப்பது. பின் வரும் காலங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியைப் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்குவது.[4]

நடவடிக்கைகள்

அகரம் பவுண்டேஷன் இச்சமூகத்தில் தலைநிமிரத் துடிக்கும் ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து, அவர்களுக்கு கல்வி என்னும் எதிர்காலத்தை வழங்கி நம்பிக்கையை பதிய விடுகிறது. இந்த அமைப்பு மக்களின் வாழ்கை மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கிறது. வசதியற்ற மற்றும் ஆதரவு இழந்த மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் தகுந்த உதவிகள் வழங்கி முன்னேற்ற பாதைக்கு வழிகாட்ட முற்படுகிறது.

விதை:

படிக்கும் திறனும் ஆர்வமும் கொண்டிருந்தும், கல்விக் கனியைச் சுவைக்க இயலாத ஏழை மாணவர்களுக்கும் , நிதி உதவி வழங்க தயாராக இருக்கும் கொடையாளிகளுக்கும் இடையிலான ஒரு பாலமாக திகழ்வதே "விதை"யின் நோக்கம். தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் மொத்த கல்விச் செலவை கணக்கெடுத்து தகுந்த உதவி கிடைக்குமாறு செய்வதே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொண்டர்களின் முதற்பணி. இதிலுள்ள சிறப்பம்சம் என்னவெனில் கொடை வழங்கும் புரவலருடன் தங்களிடம் உதவிபெறும் மாணவர் குறித்தப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வது.

வழிகாட்டிகள்:

தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கனவுகளையும் சிந்தனையும் மேருகேற்றும்படி இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் மாணவர்களின் பல்வேறு திறமைகளை மேம்படுத்த பயிற்சி அளித்து வருகின்றனர். தற்போது சுமார் 13 கிராமங்களில் இந்த "வழிகாட்டுதல்" நடந்து வருகிறது.

கற்றல் நிலையங்கள் :

கற்றல் நிலையங்களில் பாடத்திட்டத்தை மட்டுமில்லாமல் மென் திறன் பயிற்சி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தற்போது இவ்வாறு தமிழகத்தில் பத்து கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள்:

பிரலமான திரை நடிகர்களை கொண்டு அகரம் நடத்திய கல்வியின் முக்கியத்துவத்தை பற்றிய ஒரு விழிப்புணர்வு விளம்பரம் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் ஒளிபரப்பபட்டது.

இலங்கை தமிழர்களுக்கு உதவி

அகதிகளாக தமிழகம் வந்தடையும் இலங்கைத் தமிழ் மாணவர்கள், மேற்படிப்பை தொடர இயலாத வருத்தத்திற்குரிய நிலையை மாற்ற அகரம் பவுண்டேஷன் முற்பட்டது. அகதி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் தராத நிலையில், தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகமான முன்பணம் தேவைப் படுகிறது. இந்த நிலையில் , அதிக மதிப்பெண் பெற்ற திறன் மிகுந்த மாணவர்களை தனியார் கல்லூரிகளில் சேர தகுந்த நிதி உதவி வழங்கி அகரம் உதவி வருகிறது. இவ்வாறு பயனடைந்த மாணவர்கள் சிலர் தற்போது எஸ். ஆர்.எம் (S.R.M) போன்ற தனியார் கல்லூரிகளில் தங்கள் மேற்படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.[5]

எதிர்கால திட்டங்கள்

கிராமப்புற மாணவர்களுக்கு அரசாங்க வேலைகளுக்காக தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தல், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் கலை மற்றும் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், சமூக சேவையில் ஈடுபடும் பிற அமைப்புக்களுடன் கைகோர்த்துச் சிறந்த கல்வி வசதிகள் வழங்க முற்படுதல் போன்ற சில திட்டங்கள் எதிர்காலத்தில் அமல்படுத்தப்படும் என்று அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அடிகுறிப்பு

  1. http://www.digitalgalleryindia.com/blog/2012/08/09/free-education-support-for-children-by-agaram-foundation-india-registration-donors-volunteers/
  2. http://www.supergoodmovies.com/46846/kollywood/surya-s-agaram-foundation-for-a-brighter-future-news-details
  3. http://www.kollytalk.com/surya/suryas-agaram-foundation-to-provide-financial-help-for-under-priviliged-and-deserving-students-1601.html
  4. http://agaram.in/objectives.html
  5. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/education-the-only-hope-for-so-many-children/article504032.ece
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.