ஃபிளாக்சு நடவடிக்கை

ஃபிளாக்சு நடவடிக்கை (ஃபிளாக்ஸ் நடவடிக்கை, Operation Flax) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு வான்படை நடவடிக்கை. துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில், துனிசியாவில் எஞ்சியிருந்த அச்சுப் படைகளுக்கு ஐரோப்பாவுடனான வான்வழிப் போக்குவரத்தை நேச நாட்டு வான்படைகள் துண்டித்தன.

ஃபிளாக்சு நடவடிக்கை
துனிசியப் போர்த்தொடரின் பகுதி

ஜெர்மானிய யங்கர்ஸ்-52 ரக போக்குவரத்து வானூர்திகள். ஃபிளாக்சில் இப்படைப்பிரிவுகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன
நாள் ஏப்ரல் 5-27, 1943
இடம் தூனிஸ் மற்றும் பான் முனை, துனிசியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 நாட்சி ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஆர்த்தர் டெட்டர்
கார்ல் ஸ்பாட்ஸ்
ஜிம்மி டூலிட்டில்
ஆர்த்தர் கோனிங்காம்
மார்டின் ஹார்லிங்ஹவுசன்
ரினோ கோர்சோ ஃபூகியேர்
படைப் பிரிவுகள்
நடுநிலக்கடல் வான் கட்டுப்பாட்டகம் 2வது வான்படைக் கோர்
இழப்புகள்
35 வானூர்திகள் 432 வானூர்திகள்

மார்ச் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகள் துனிசியாவின் வடமேற்கு முனையில் சுற்றி வளைக்கப்பட்டன. இறுதிகட்ட தரைப்படைத் தாக்குதலுக்கு முன் அவற்றைப் பலவீனப்படுத்த கடல்வெளியிலும் வான்வெளியிலும் நேச நாட்டுப் படைகள் முயன்றன. அச்சுப் படைகள் நடுநிலக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கவும், அவற்றுக்குத் தேவையான தளவாடங்களும், துணைப்படைகளும் கடல்வழியாக அனுப்பப்படுவதைத் தவிர்க்கவும், ஏப்ரல் மாதம் ஃபிளாக்சு நடவடிக்கையை நேச நாட்டுப் படைகள் மேற்கொண்டன. வடக்கு ஆப்பிரிக்கா-ஐரோப்பாவிடையே பயணிக்கும் அச்சுக் கப்பல்கள் அனைத்தையும் மூழ்கடிக்கவும், வடக்கு ஆப்பிரிக்காவை ஐரோப்பாவிலிருந்து துண்டிக்கவும் மே 8ம் தேதி ரெட்ரிபியூசன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஃபிளாக்சு நடவடிக்கையில் அமெரிக்க வான்படையும், பிரித்தானிய வேந்திய வான்படையும் ஜெர்மானிய வான்படையான லுஃப்டவாஃபேவுடன் துனிசிய மற்றும் நடுநிலக்கடல் மேலான வான்பகுதியில் மோதின. லுஃப்ட்வாஃபேவின் யங்கர்ஸ்-52 வகை போக்குவரத்து வானூர்திகள் சிக்கிக் கொண்டிருக்கும் தரைப்படைகளுக்கு சிசிலி மற்றும் இத்தாலியிலிருந்து தளவாடங்களைக் வான்வழியாக வழங்க முயன்றன. அவற்றைத் தடுக்க இரவு பகலாக நேச நாட்டு வானூர்திகள் முயற்சி செய்தன. ஏப்ரல் 5 முதல் தொடங்கிய ஃபிளாக்சு நடவடிக்கை ஏப்ரல் 26 வரை நீடித்தது. இதன் முதல் கட்டத்தில் அமெரிக்க வான்படை ஈடுபட்டது. முதலில் சிசிலி நீரிணையில் சரக்குக் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்தன. பின்னர் தெற்கு இத்தாலியிலும் சிசிலியிலும் அமைந்திருந்த அச்சு வானூர்தி ஓடுதளங்கள் மீது குண்டு வீசின. தொடர்ந்து நடந்த வான்மோதல்களில் லுஃப்ட்வாஃபேவின் சண்டை வானூர்திப் பிரிவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கப்பட்டன. ஏப்ரல் 12ம் தேதி ஃபிளாக்சின் இரண்டாம் கட்டம் தொடங்கியது. பிரித்தானிய வேந்திய வான்படை அமெரிக்க வான்படைக்கு பதிலாக தாக்குதல்களை மேற்கொண்டது. நேச நாட்டுத் தாக்குதல்களால் அச்சு போக்குவரத்து வானூர்தி படைப்பிரிவுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் துனிசியாவிலுள்ள அச்சு தரைப்படைகளுக்கு தளவாட மற்றும் எரிபொருள் வழங்கல் தடைபட்டது. மே 4ம் தேதிக்குப் பின்னர் துனிசியாவுக்கு அச்சு வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் நின்றுபோனது.

ரெட்ரிபியூசன் மற்றும் ஃபிளாக்சு நடவடிக்கைகளின் வெற்றியால் துனிசியாவில் அச்சுப் படைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுவிட்டன. மே 6ம் தேதி நேச நாட்டுத் தரைப்படைகளின் இறுதிகட்ட தாக்குதலான வல்கன் நடவடிக்கை தொடங்கியது. ஒரு வார சண்டைக்குப்பின்னர் அச்சுப்படைகள் சரணடைந்தன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.