1964 தனுஷ்கோடி புயல்

1964 தனுஷ்கோடி புயல் (1964 Dhanushkodi cyclone) இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் 1964 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை தாக்கியது. 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[1][2][3] இராமேசுவரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால் அழிந்து போனது.

1964 தனுஷ்கோடி புயல்
Super cyclonic storm (இ.வா.து. அளவு)
திசம்பர் 21 இல் புயல்
தொடக்கம்திசம்பர் 18, 1964
மறைவுதிசம்பர் 26, 1964
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 240 கிமீ/ம (150 mph)
வன்காற்று: 280 கிமீ/ம (175 mph)
தாழ் அமுக்கம்≤ 970 hPa (பார்); 28.64 inHg
இறப்புகள்குறைந்தது 1,800
சேதம்$150 மில்லியன் (1964 US$)
பாதிப்புப் பகுதிகள்இலங்கை, இந்தியா
கடல் கொண்டது போக மிச்சமிருக்கும் தனுஷ்கோடி தேவாலயத்தின் சுவர்கள்

அழிவுகள்

இந்தியா

தனுஷ்கோடி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட மீனவ நகரம். மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர். இந்த அலை 40 முதல் 50 அடி உயரத்துக்கு எழும்பி வந்தது.

அதிகாலை 3 மணி அளவில் ஆழிப் பேரலை தனுஷ்கோடிக்குள் புகுந்து, நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடி மக்களில் முன்னூறுக்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்தனர்.[4] இந்திய பெருநிலத்துக்கும் இராமேசுவரம் தீவிற்கும் இடைப்பட்ட பாம்பன் தொடருந்து தடம்கொண்ட பாலம் பேரலையில் உடைந்தது. மேலும் 23 நள்ளிரவுக்கு 5 நிமிடம் முன் பாம்பன் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி உள்ளூர் பயணி (passenger) வகை தொடரி தனுஷ்கோடி தரிப்பிடத்தின் நுழைவாயிலை அடைகையில் ஒரு பேரலையால் அடித்துக் கவிழ்க்கப்பட்டு அனைத்து பயணிகளும் உயிர்மாண்டனர்.[5][6][7][8][9]

தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.

தனுஷ்கோடி நகரம் புதிப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை

புயல் 1964 டிசம்பர் 22 இல் இலங்கையின் வடக்குப் பகுதியைத் தாக்கியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறத்தாழ 5000 வீடுகளும் 700 மீன்பிடி வள்ளங்களும் அழிந்தன.[10] பல நெல் வயல்கள் பாதிப்புக்குள்ளாயின.[10] மன்னாரிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.[10] திருக்கோணமலைத் துறைமுகமும் சேதமடைந்தது.[10] இவ்வழிவுகளினால் 200 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. 350 மீனவர்கள் கடலில் காணாமல் போயினர்.[10]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.