நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர்

நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம்
Location of Museum in Karnataka
நிறுவப்பட்டது1968
அமைவிடம்ஜெயலட்சுமி விலாஸ் மான்ஷன், மைசூர்
வகைநாட்டுப்புறவியல் கலை
சேகரிப்பு அளவு6500
இயக்குநர்டாக்டர் ஏ.சி.லலிதா
நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள  ஓர் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் கர்நாடக மாநில முழுவதிலுமிருந்து பெறப்பட்ட நாட்டுப்புற கலை மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாறு

கர்நாடகா மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்களின் தொகுப்புகளைக் கொண்டு இந்த நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 1968 இல் நிறுவப்பட்டதாகும். மைசூர் பல்கலைக்கழகத்தின் மனசகங்கோத்ரி வளாகத்தில் உள்ள ஜெயலட்சுமி விலாஸ் மான்ஷனில் இது இயங்கிவருகிறது. அதனுடைய ஆரம்ப காலம் முதலாக மைசூர் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியமான பங்களிப்பினைச் செய்து வருகிறது. மேலும் இந்த அருங்காட்சியகம் பி.ஆர்.திப்பேஸ்வாமி, ஜவரேகவுடா மற்றும் ஜீஷாம் பரமாஷிவையா போன்ற அறிஞர்களின் சீரிய முயற்சியினால் தற்போதைய நிலைக்கு உயர்ந்து வந்துள்ளது. அருங்காட்சியகத்தின் சேகரிப்பை அதிகரிக்கும் நோக்கத்தினைக் கொண்டு, பி.ஆர்.திப்பேஸ்வாமி கர்நாடகா மாநிலம் முழுவதிலும் இருந்து பல கலைப்பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வந்து இங்கு சேர்த்துள்ளார்.ஒரு நாட்டுப்புற அருங்காட்சியகம் என்ற நிலையில் காட்சிப்பொருள்களை காட்சிப்படுத்துவது மட்டுமன்றி இசை, நடனம் மற்றும் நாடகத்தின் முக்கியமான கூறுகளையும் முன்வைத்து காட்சிப்படுத்துகிறது.

அருங்காட்சியகம் அமைந்துள்ள அரண்மனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான 300 ஏக்கர் நிலம் 1956-1960இல், முதன்முதலாக ஞானபீடவிருது பெற்ற குவெம்பு என்ற எழுத்தாளரால் கையகப்படுத்தப்பட்டது. அவர் அப்போது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தார். இந்த அரிய தகவல் அருங்காட்சியகத்தில் உள்ள குவெம்பு அறையில் அவருடைய புகைப்படம் மற்றும் அவருடைய வாழ்க்கைக் குறிப்போடு காணப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 6,500க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோப்பா மாவட்டம் பனவசி, ராஜகட்டாவில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தின் தரைதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருமண அரங்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த அரண்மனையின் பகுதியில் தற்போது எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் தொடர்பான பொருள்கள் காட்சியில் உள்ளன. அவற்றுள் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், எழுதிய பேனாக்கள், அணிந்திருந்த கடிகாரங்கள், எழுதிய நாட்குறிப்பேடுகள், பயன்படுத்திய குடைகள், மற்றும் அவர்களுடைய எழுத்தின் மூலப்பிரதிகள் அடங்கும். கொடகினா கௌரம்மா என்ற கவிஞருக்குச் சொந்தமான பொருள்கள் இங்கு உள்ள்ன. அவற்றுள் ஒன்று மகாத்மா காந்தியால் பயன்படுத்தப்பட்ட, அவர் கவிஞரைச் சந்தித்தபோது தந்த மைசூர் சாண்டல் சோப்பும் அடங்கும்.[1]

காட்சிப்பொருள்கள்

இந்த அருங்காட்சியகத்தில் 6,500 க்கும் மேற்பட்ட தனித்துவத் தன்மை கொண்ட நாட்டுப்புறக் கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இவ்வகையான காட்சிப் பொருள்களை அவ்வப்போது முறையாக நாட்டுப்புற கலை வடிவங்களின் தன்மையை அடியொற்றி வடிவமைத்து வருகிறது. காட்சிக்கூடங்களில் நாட்டுப்புறவியல்பெரிய பொம்மைகள், நாட்டுப்புற வாழ்க்கை, இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக்கலை போன்ற பலவகையான பிரிவுகள் காணப்படுகின்றன.

நாட்டுப்புறவியல் பிரிவு பல மதிப்புமிக்க தொகுப்புகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

  • இங்கு யக்ஷகனாவின் ஆடையலங்காரப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது யக்ஷகனாவின் வடக்கு மற்றும் தெற்கு வடிவங்களான தென்கா திட்டு மற்றும் படுகு திட்டு ஆகிய இரண்டிற்கும் உரிய பொருள்கள் அங்கு காணப்படுகின்றன.
  • வடக்கு கர்நாடகாவின் குகலா பல்லி கிராமத்தைச் சேர்ந்த ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க அனுமன் கிரீடம்.
  • கேரளாவைச் சேர்ந்த கதகளியின் உடைகள் .
  • ஆந்திராவைச் சேர்ந்த நாட்டுப்புற நாடக கலைஞர்களின் உடைகள்.
  • கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொணரப்பட்ட முகமூடிகள், பொம்மலாட்டத்திற்கான பொம்மைகள், தோல் பொம்மைகள், உள்ளிட்ட பலவகையானவை உள்ளன. அவை பிராந்திய மற்றும் வரலாற்று தாக்கங்களை உணர்த்தும் வகையில் உள்ளன.
  • சோலிகா சமூகத்தை குறிக்கும் பொருள்கள்.
  • சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரதுர்காவில் உள்ள டோடேரி கிராமத்தில் மை தயாரித்தல் தொடர்பான குறிப்புகள்
  • ஞானபீட விருது பெற்ற, குவெம்பு என்பவர் பயன்படுத்திய வேலைப்பாடமைந்த, மரத்தாலான ஒரு அலங்கார மர பலிபீடம்
  • பலவகையான தாள மற்றும் காற்று நாட்டுப்புற இசைக்கருவிகள் இங்குள்ளன. ஜோகிகள் பயன்படுத்திய கின்னாரி, தத்வா பாட பாடகர்கள் பயன்படுத்திய சௌத்லைக் மற்றும் தம்பூரி, நீலகராவில் காணப்பட்ட இசைக்கருவிகள் இங்குள்ளன. மேலும் பிரபனா டொல்லு, கொன்டலிகாவின் சாம்பளா, கலக்கி கௌடாவின் கம்மேம், சாண்டே, டிம்மி டாமடி, கோரவர்களின் டமருகம் மற்றும் நகரி போன்ற இசைக்கருவிகளும் உள்ளன. மூன்று அடி நீண்ட புல்லாங்குழல், கொம்பு, ககலே மற்றும் புங்கியும் உள்ளன. .
  • தெய்வங்கள், மன்னர்கள், ராணிகள், தெய்வங்கள், மற்றும் வீரர்களைக் குறிக்கின்ற கலைப்பொருள்களின் தொகுப்பு
  • நாட்டுப்புற தெய்வங்களின் மரபான தலைக்கிரீடங்கள், மத சம்பந்தமான பொருள்கள், கிராமத் தெய்வங்களான சோமா மற்றும் பூதா தொடர்பானவையும் இங்கு உள்ளன.

சோமா, தலேபூதா, கலிபூதா, மாரி, கடிமாரி போன்ற, நடனத்தின்போது பயன்படுத்தப்படுகின்ற பெரிய பொம்மைகள் இங்குள்ளன.

நாட்டுப்புற வாழ்க்கை பிரிவில் விவசாயிகள், பொற்கொல்லர்கள், படகோட்டிகள், மீனவர்கள், குயவர்கள், மற்றும் பிற கைவினைக் கலைஞர்கள் பயன்படுத்தும் கருவிகள் உள்ளன. விளக்குகள், ஆயுதங்கள், விவசாய உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள், அளக்கும் பாத்திரங்கள், நெசவுக் கருவிகள், பானைகள், மணிகள், கூடைகள், நாட்டுப்புற விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஆடை போன்ற வீட்டுப் பொருட்களும், நாட்டுப்புற விளையாட்டு தொடர்பான பொருள்களும் இங்கு உள்ளன.

குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்கள்

  • பி.ஆர்.திப்பேசாமி

மேலும் காண்க

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.