சிவனேசத்துரை சந்திரகாந்தன்

பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிறப்பு: ஓகஸ்ட் 18, 1975) இலங்கையின் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்[1] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) கட்சியின் தலைவருமாவார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிந்துச் சென்று கருணா குழுவில் முக்கிய தலைவராக செயற்பட்டார்.

சிவனேசத்துரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர்
பதவியில்
மே 16, 2008  சூன் 27, 2012
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் நஜீப் அப்துல் மஜீத்
தொகுதி மட்டக்களப்பு மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 18, 1975 (1975-08-18)
பேத்தாழை, வாழைச்சேனை
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
சமயம் இந்து
இணையம் www.cmsep.lk

2007 ஏப்ரலில் தமவிபு கட்சியில் இடம்பெற்ற உள்ளக மோதலை அடுத்து, கருணா கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிள்ளையான் கட்சித் தலைவரானார். 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை முதலமைச்சரானார்.[2]

வாழ்க்கைச் சுருக்கம்

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, பேத்தாழையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிள்ளையான் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்திலும் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (சாதாரண தர) வகுப்பு (தரம் 11) வரை கல்வி பயின்றவர்.

1990 ஏப்ரல் 4 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 15வது வயதில் "பிள்ளையான்" என்ற இயக்கப் பெயரில் போராளியாக இணைந்தார். 1997 இல் முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதல், 2001 இல் ஆனையிறவு முகாம் தாக்குதல் ஆகியவற்றில் பங்கு பற்றினார்.

2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அணியுடன் சேர்ந்து விலகி அவ்வமைப்பில் பதில் தலைவரானார். கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவ்வமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவரானார். விடுதலைப் புலிகளுக்கெதிராகத் தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்ட இவர் பின்னர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டார். 2007 இல் கருணா அணியில் இடம்பெற்ற உள்ளக மோதல்களைத் தொடர்ந்து கருணா இலண்டனுக்குத் தப்பி ஓடியதை அடுத்து அவ்வமைப்பின் தலைவரானார்.

கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் 2015 அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

  1. "CM appointment illegal - Hisbullah". BBC News. 16 May, 2008. http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/05/080516_pillayan_cm.shtml.
  2. Pillayan sworn in Chief Minister தி இந்து - May 17, 2008
  3. டி. பி. எஸ். ஜெயராஜ் (16 அக்டோபர் 2015). "TMVP Leader “Pillaiyaan” Implicated in Assassinations of TNA Parliamentarians Pararajasingham and Raviraj". பார்த்த நாள் 17 அக்டோபர் 2015.
  4. "Chief Magistrate Pilapitiya orders Pilaiyan to be detained in CID custody till Nov. 04". தி ஐலண்டு (15 அக்டோபர் 2015). பார்த்த நாள் 17 அக்டோபர் 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.