ஹெர்மான் மின்கோவ்ஸ்கி

ஹெர்மான் மின்கோவ்ஸ்கி (Hermann Minkowski, சூன் 22, 1864 – சனவரி 12, 1909) உருசியாவி்ல் பிறந்த செருமானியக் கணிதவியலாளர். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஆசிரியர்களில் ஒருவர். இவர் எண்களின் வடிவியல் என்ற முறைமையை நிறுவி மேம்படுத்தினார்; எண் கோட்பாடு, கணித இயற்பியல், மற்றும் சார்புக் கோட்பாடு கணக்குகளை தீர்க்க வடிவியல் முறைமைகளை பயன்படுத்தினார்.

ஹெர்மான் மின்கோவ்ஸ்கி
பிறப்புசூன் 22, 1864(1864-06-22)
அலெக்சோட்டா, போலந்து இராச்சியம்
இறப்புசனவரி 12, 1909(1909-01-12) (அகவை 44)
கொட்டின்ஜென், செருமானியப் பேரரசு
தேசியம்செருமானியர்
துறைகணிதவியலாளர்
பணியிடங்கள்கொட்டின்ஜென்னின் ஜார்க்-ஆகஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
கல்வி கற்ற இடங்கள்கோனிசுபெர்க்கின் அல்பெர்டினா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்லிண்டெமன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கான்ஸ்டன்டின் காரதோடோரி
லூயி கோல்ரோசு
டெனெசு கோனிக்
அறியப்படுவதுமின்கோவ்ஸ்கி வெளி
மின்கோவ்ஸ்கி வரைபடம்

மின்கோவ்ஸ்கி சார்புக் கோட்பாட்டில் பங்களித்தமைக்காக மிகவும் அறியப்படுகிறார்; அவரது முன்னாள் மாணவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சிறப்பு சார்புக் கோட்பாட்டை 1905இல் குறியீட்டுக் கணிதம் மூலம் நிரூபித்ததை மின்கோவ்ஸ்கி வடிவியல் மூலமாகவும் புரிந்து கொள்ளலாம் என நாற்பரிமாண வெளி-நேரம் கோட்பாட்டை நிறுவினார். ஐன்ஸ்டைனே முதலில் இது ஓர் கணித வித்தை என்றே எண்ணினார்; பின்னர் அவரே 1915இல் தனது பொதுச் சார்புக் கோட்பாட்டை முழுமையடையச் செய்ய வெளி-நேரத்தின் வடிவியல் நோக்கு தேவையாக இருப்பதை உணர்ந்தார்.

வாழ்வும் பணியும்

ஹெர்மான் மின்கோவ்ஸ்கி உருசிய பேரரசின் அங்கமாயிருந்த போலந்து இராச்சியத்தின் அலெக்சோட்டாசு சிற்றூரில் (தற்போதைய லித்துவேனியாவில் கவுனாசு மாவட்டத்தில்) போலந்து யூதர் குடும்பத்தில் பிறந்தார்.[1][2][3] மின்கோவ்ஸ்கி பின்னர் தமது கல்வியைத் தொடர்வதற்காக சீர்திருத்தத் திருச்சபைக்கு மதம் மாறினார்.[4][5] செருமனியில் உள்ள அல்பெர்டினா கோனிக்சுபெர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பெற்ற மின்கோவ்ஸ்கி அங்கு பெர்டினான்டு வோன் லிண்டெமன் வழிகாட்டுதலில் 1885இல் தமது முனைவர் பட்டத்தை பெற்றார். அவர் மாணவராக இருந்தபோதே 1883இல் பிரெஞ்சு அறிவியல் அகாதமியின் கணிதவியல் பரிசை வென்றார். மற்றொரு கணிதவியலாளரான, டேவிடு இல்பேர்ட்டுடன் நண்பரானார். இவரது உடன்பிறப்பான, ஆஸ்கர் மின்கோவஸ்கியும் (1858–1931), ஓர் நன்கு அறியப்பட்ட மருத்துவரும் ஆய்வாளரும் ஆவார்.

மின்கோவ்ஸ்கி பான், கோட்டின்ஜென், கோனிக்சுபெர்க் மற்றும் சூரிக்கு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். சூரிக்கில் உள்ள கூட்டாட்சி பாலிடெக்னிக்கில் (இன்றைய நாள் சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்), ஐன்ஸ்டைனின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.

மின்கோவ்ஸ்கி இருபடி வடிவங்களின் கணிதத்தை ஆராய்ந்து வந்தார். இந்த ஆய்வினால் சில வடிவியல் பண்புகளை n பரிமாண வெளியில் கவனத்தில் கொள்ள வேண்டி வந்தது. 1896இல் எண் கோட்பாட்டு சிக்கல்களை வடிவியல் முறைமைகளைக் கொண்டு தீர்வு காணும் எண்களின் வடிவியல் என்ற தமது கோட்பாட்டை வெளியிட்டார்.

1902இல் கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையில் சேர்ந்தார். தாம் முதலில் கோனிக்சுபெரெர்க்கில் சந்தித்திருந்த டேவிடு இல்பேர்ட்டுடன் இங்கு இணைந்து பணியாற்றினார். இங்கு கான்ஸ்டன்டின் காரதோடோரி அவரது மாணாக்கர்களில் ஒருவராக இருந்தார்.

மின்கோவ்ஸ்கி 1909இல் சனவரி 12 அன்று கோட்டின்ஜென்னில் குடல்வாலழற்சியால் திடீரென்று இறந்தார்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "Hermann Minkowski", MacTutor History of Mathematics archive, University of St Andrews.
  • Hermann Minkowski at the Mathematics Genealogy Project
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.