ஹக்பாட் மடாலயம்
ஹக்பாட் மடாலயம் (Haghpat Monastery) அல்லது ஹக்பாடவாங்க் (Haghpatavank, அருமேனிய மொழியில் "Հաղպատավանք") ஆர்மீனியாவின் ஹக்பாட்டில் உள்ள நடுக்கால ஆர்மீனிய மடாலயம் ஆகும்.[1]
ஹக்பாட் மடாலயம் Հաղպատավանք | |
---|---|
![]() ஹக்பாட் மடாலயத்திலுள்ள சூரப் ஷான் தேவாலயம் | |
![]() ![]() Shown within Armenia | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஹக்பாட், லோரி மாநிலம்,![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 41.093889°N 44.711944°E |
சமயம் | ஆர்மீனியன் திருத்தூதர் தேவாலயம் |
கட்டிடக்கலை தகவல்கள் | |
கட்டிடக்கலைப் பாணி | ஆர்மீனியக் கட்டிடப் பாணி |
அடித்தளமிட்டது | 10வது நூற்றாண்டு |
Official name: ஹக்பாட், சனாகின் மடாலயங்கள் | |
வகை: | பண்பாடு |
வரையறைகள்: | ii, iv |
கொடுக்கப்பட்ட நாள்: | 1996 (20வது அமர்வு) |
மேற்கோள் எண். | 777 |
வலயம்: | மேற்கு ஆசியா |
இந்த மடாலயம் 976இல் பாக்ரதித் மன்னர் மூன்றாம் அசோட்டின் மனைவியும் அரசியுமான கோஸ்ரோவானுஷ் கட்டியிருக்கலாம் என வரலாற்றாளர்கள் நம்புகின்றனர்.[2] அருகிலேயே உள்ள சனாகின் மடாலயமும் இதே காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.[3]
ஹக்பாட் மடாலயம் வடக்கு ஆர்மீனியாவின் லோரி மாநிலத்திலுள்ள தேபெட் ஆற்றை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது மலையின் உச்சியில் இல்லாது பாதி உயரத்தில் பிறர் கண்களுக்கு தெரியாதவாறு பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. மடாலயங்களுக்கே உரித்தான எளிமையுடன் கட்டிடப் பாணி அமைந்துள்ளது. மலை நடுவேயுள்ளதோர் முகில்கள் சூழ்ந்த பசுமையான நீட்சியில் கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் மறுகரையில் உள்ள சிகரம் 2,500 மீட்டர்கள் உயரமானது. வடக்கு ஆர்மீனிய மடாலயங்கள், நாட்டின் பிற வறண்ட பகுதிகளில் உள்ளனவற்றைப் போலன்றி, தன்னந்தனியாக இருப்பதில்லை. இவை சிற்றூர்களின் சூழலில் கட்டப்பட்டுள்ளன; ஹக்பாட் மடாலயத்தைச் சுற்றிலும் இத்தகைய குடியிருப்புகள் உள்ளன.[4]
இந்த வளாகத்திலுள்ள மிகப் பெரும் தேவாலயமான சூரப் நிஷான் மறைமாவட்டப் பேராலயம் 976இல் துவங்கப்பட்டிருக்கலாம்; இரண்டாம் சம்பத் அரசரால் 991இல் கட்டி முடிக்கப்பட்டது. பத்தாம் நூற்றாண்டு ஆர்மீனியக் கட்டிடக்கலையின் சான்றாக விளங்கும் இம்மடாலயத்தின் நடு குவிமாடம் நான்கு பெரும் பக்கவாட்டுச் சுவர் தூண்களால் தாங்கப்படுகின்றது. வெளிச்சுவர்களில் முக்கோண மாடங்கள் அமைந்துள்ளன. அரைவட்ட முகப்பில் சுதை ஓவியமாக இயேசு கிறித்து தீட்டப்பட்டுள்ளார். இதன் புரவலர் ஆர்மீனிய இளவரசர் குதுலுகாகாவின் ஓவியம் தேவாலய குறுக்குக் கைப்பகுதியின் தெற்கு புறத்தில் உள்ளது. தேவாலயத்தை நிறுவிய அரசரின் புதல்வர்களான சம்பத்தும் குரிக்கேயும் அரசி கோசுரோவானுசுடன் கிழக்கு முகட்டில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர். பதினொன்றாம், பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சிறு புனரமைப்புகளைத் தவிர வேறு எந்த மாற்றமும் அடையவில்லை.
இங்கு மேலும் பல கட்டமைப்புகளும் உள்ளன. சிறிய குவிமாடத்துடன் 1005இல் கட்டப்பட்ட கிரெகொரியின் தேவாலயம் இங்குள்ளது; இதன் பக்கங்களில் சிறு பிரார்த்தனைச் சாலைகளும் கட்டப்பட்டன. இவற்றில் பெரியதாக உள்ளது 13ஆவது நூற்றாண்டின் துவக்கத்திலும் அமாசாசுப் இல்லம்" எனப்படும் சிறியது 1257இலும் கட்டப்பட்டது. 1245இல் மூன்று தளங்களுடன் கூடிய தற்சார்ந்த மணிக்கூண்டுக் கட்டப்பட்டது. 13ஆம் நூற்றாண்டு சேர்க்கைகளாக சூரப் அசுவாட்சட்சின் வழிபாட்டுத் தலமும் சுவடிகள் காப்பகமும், மடாலயத்திற்கு வெளியே உணவுக்கூடமும் கட்டப்பட்டன.[5]
மேலும் 11ஆவது - 13ஆவது நூற்றாண்டுக்கால பல சிலுவைக் கற்கள் மடாலய வளாகத்தில் உள்ளன. இவற்றில் 1273இலிருந்துள்ள "அமெனாப்ர்கிச்" (எல்லோரையும்-இரட்சிப்பவர்) சிலுவை மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும்.[5]
இந்த மடாலயம் பலமுறை சேதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1130இல், நிலநடுக்கம் ஒன்றினால் ஹக்பாட் மடாலயத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன; இவற்றை சீரமைக்க அடுத்த ஐம்பதாண்டுகள் ஆயிற்று. தவிரவும் பல படையெடுப்புகளுக்கு உள்ளாயிற்று; 1988இல் மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது. இருப்பினும் பெரும்பாலான வளாகம் அப்படியே உள்ளது.[4][5]
தற்காலத்தில் இது மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.
காட்சிக்கூடம்
- ஹக்பாட் மடாலயத்திலுள்ள மணிமண்டபம்
- சூரப் நிஷான் தேவாலயமும் மணிமண்டபமும்
- வளாகத்தின் ஒரு கட்டிடத்திற்கான நுழைவாயில்
- ஹக்பாட்-சனாகின் பகுதியின் சாலை நிலப்படம்
- ஹக்பாட் மடாலயத்தின் மேற்கூரை, ஆர்மீனியா
- ஹக்பாட், உள்ளிருந்து பார்க்கையில்
- ஹக்பாட் மடாலய குறுக்கு கற்கள் அல்லது காச்கர்கள்
- ஹக்பாட் எழுதுகூடம். ஆபத்துக் காலங்களில் சுவடிகளை மறைக்க தரையில் குழிகள் பதிக்கப்பட்டுள்ளன.
மேற்சான்றுகள்
- UNESCO, "Monasteries of Haghpat and Sanahin"
- Haghbat, p534-535, in "Armenian Art", Donabedian, Patrick; Thierry, Jean-Michel. New York: 1989, Harry N. Abrams, Inc. ISBN 978-0810906259.
- Armenica.org, "The Architectural Complex of Haghpat Monastery"
- "The monastery of Haghpat" by Elisabeth Baudourian, UNESCO Courier, May 1998
- Sourb Nshan, Sourb Astvatsatsin, Sourb Grigor