வேள்விக்குடி செப்பேடுகள்

வேள்விக்குடி செப்பேடுகள் பாண்டியர் தொடர்பான செப்பேடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இச்செப்பேடுகளில் களப்பிரர் தொடர்பான தகவல்களும் காணப்படுகிறது.

சிறப்பு

சங்ககாலத்தில் தானம் வழங்கிய நிலத்தைக் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்குப் பிறகு சான்று காட்டிப் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் பெருவழுதியின் பெயர் குறிப்பிடப்பெற்றுள்ளதும், சங்க காலப் பாண்டியர்க்குப் பின் தமிழகத்தைக் களப்பிரர் ஆட்சி செய்தனர் என்பதற்கான அரிய சான்றாக அமைவதும் இச்செப்பேட்டின் சிறப்பாகும். இச்செப்பேடு இல்லையெனில் சங்க காலத்திற்குப் பிறகு ஆட்சி செய்த ஆறுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களின் சிறப்புகளும் விவரங்களும் அறியப்படாமலேயே போயிருக்கக்கூடும்.

பெயர்காரணம்

இச்செப்பேடு தானம் வழங்கப்பட்ட இடத்தின் பெயரால் (வேள்விக்குடி) இவ்விதம் அழைக்கப்பட்டுள்ளது. வேள்விக்குடியின் சரியான இருப்பிடம் எது என்பது ஐயப்பாடுடையதாக இருப்பினும், கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் மற்ற இடங்களையும் செய்திகளையும் கொண்டு இப்பகுதி மதுரை மாவட்டத்தில் இருப்பதாக ஊகிக்கப்பட்டுள்ளது.

செப்பேடுகளின் அமைப்பு

இச்செப்பேடு 10 ஏடுகளைக்கொண்டது. முதலாவது மற்றும் பத்தாவது ஏடுகளில் உட்புறமும், மற்ற எட்டு ஏடுகளில் இரு புறமும் ஆக மொத்தம் 18 பக்கங்களில் 155 வரிகள் உள்ளன. காலத்தால் பழமையான பாண்டியர்களின் செப்பேடுகளுள் இவை இரண்டாவதாக உள்ளன.[1] தொன்றுதொட்டு பாண்டியர்களின் ஆட்சியில் இருந்துவந்த அந்த நாட்டை இடையிலே களப்பிரர்கள் கவர்ந்து கொண்டார்கள். அவர்களைக் கடுங்கோன் என்ற பாண்டியன் வென்று மீண்டும் பாண்டிய அரசை நிலைநிறுத்திய பிறகு ஆட்சிப் புரிந்த 7ஆவது மன்னனின் காலத்தில் இச்செப்பேடு வழங்கப்பட்டுள்ளது.[2][3][4][5] இந்த அரசனுக்கு முன் நாட்டை ஆண்ட 6 மன்னர்களைப்பற்றிய விவரங்கள் முதன்முதலாகவும், விரிவாகவும் இந்த செப்பேட்டில் தெரியவருகின்றன. முதல் ஏழு ஏடுகள் ஒவ்வொன்றின் பின்புறத்து இடது பக்கத்து விளிம்பிலும், வரிசையாக 1 முதல் 7 வரை எண்கள் முறையே இடப்பட்டுள்ளன. அடுத்துவரும் மூன்று ஏடுகளில் எண் எதுவுமில்லை.

மொழி மற்றும் எழுத்து நடை

தென்னாட்டில் கிடைத்துள்ள பழைய காலத்தைச் சார்ந்த மற்றச் செப்பேடுகளைப் போலவே இந்தச் செப்பேட்டிலும் தமிழ், சங்கதம் ஆகிய 2 பகுதிகள் உள்ளன. சங்கதப்பகுதி கிரந்த எழுத்திலும், தமிழ்ப்பகுதி வட்டெழுத்திலும் உள்ளன. தமிழ்ப்பகுதியில் விரவிவரும் சங்கதச் சொற்கள் பெரும்பாலும் கிரந்த எழுத்திலேயே காணப்படுகின்றன.[6] சங்கதக் கூட்டெழுத்துக்களை எழுதும்பொழுது மேலேயுள்ள மெய்யெழுத்துக்கு ஏட்டிலே புள்ளியிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இது தமிழ் முறையைப் பின்பற்றியது எனலாம். சுலோகங்களின் முடிவிலே ஒவ்வொரு இடத்திலும் பிள்ளையார் சுழி போன்ற உருவம் காட்டப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதியில் மெய்யெழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளியிடப்பட்டுள்ளன. அன்றியும் எகர ஒகரக்குறிகள் தனி உயிரெழுத்திலும் உயிர் மெய் எழுத்திலும் புள்ளியிடப்பட்டுள்ளன. சங்கதம், தமிழ் ஆகிய 2 பகுதிகளும் செய்யுள் நடையில் அமைந்துள்ளன என்பது, பிரசஸ்தி “பாடின" என்ற சொற்றொடர் மூலம் (வரி 139) தெரியவருகிறது.

செப்பேடுகளில் உள்ள செய்திகள்

சங்கதம், தமிழ் ஆகிய 2 பகுதிகளும் கொண்ட பெரும்பாலான செப்பேடுகளில் இரு பகுதிகளுமே தான விவரங்களைக்கொண்டிருக்கும். ஒன்றில் காணப்படாத விவரங்களை மற்றொன்றிலிருந்து அறிந்து கொள்ள இயலும். ஆனால் இச்செப்பேட்டில் அந்த முறை பின்பற்றபடவில்லை.[7]

சங்கதப்பகுதி

1 முதல் 30 வரிகள் முடிய உள்ளது சங்கத பகுதியாகும். இது கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் இப்பகுதி தொடங்குகிறது. பாண்டிய வம்சத்தின் பழம்பெருமையையும், தானம் வழங்கிய அரசனுடைய முன்னோர்களில் மூவர் பெயரை மட்டும் கூறுவதோடு நின்றுவிடுகிறது. யாருக்காக, எதற்காக இச்செப்பேடு வழங்கப்பட்டதென்ற விவரம் சங்கதப் பகுதியில் காணப்படவில்லை. சிவபெருமானுக்கு வணக்கம் கூறும் முதல் சுலோகத்துடன் ஆரம்பிக்கிறது. பின்பு பாண்டிய வம்சத்தின் புகழைக்கூறுகிறது. பாண்டியர்கள் பூமியின் பாரத்தைத் தாங்குவதால் ஆதிசேஷனுக்கு ஓய்வு ஏற்படுகிறது என்று ஒரு சுலோகமும், அகத்திய முனிவரைப் புரோகிதராகக்கொண்டது என்பதை மற்றொரு சுலோகமும், பிரளயக்காலத்திலும் பாண்டிய வம்சம் அழிவதில்லை; சென்ற கல்பத்தின் கடைசியிலே இருந்த அரசன் இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சந்திராக்குப் புதன் என்ற மகனாகப் பிறந்தான் என்றும் அவனுக்குப் புரூரவஸ் பிறந்தானென்றும் மற்றொரு சுலோகம் கூறுகிறது. ஸர்வக்கிருது யாஜியான வரோதய பட்டன் இந்தப் பிரசஸ்தியை எழுதினான். என்ற விவரத்துடன் இப்பகுதி முடிவுறுகின்றது.[7]

சங்கதப் பகுதியில் குறிக்கப்படும் அரசர்கள்

  1. மாறவர்மன்
  2. ரணதீரன்
  3. ராஜசிம்மன் (மாறவர்மன்) (பல்லவ மல்லனைத் தோற்கடித்து மழவர் மகளை மணந்தவன்)
  4. ஜடிலப்பராந்தகன் (இச்செப்பேடு வழங்கியவர்)

தமிழ்ப்பகுதி

இச்செப்பேட்டின் தமிழ்ப்பகுதி மற்ற செப்பேடுகளைப்போல் ஆரம்பத்தில் மங்கலச் சொல் ஏதும் இல்லாமல் "கொல் யானை" என்றே ஆரம்பிக்கிறது. கடவுள் வணக்கமோ பாண்டிய வம்சத்தின் புகழோ ஏதும் தனியாகத் தமிழில் குறிக்கப்படவில்லை. தானம் வழங்கப்பெற்ற கிராமத்தின் பழைய வரலாற்றுடனே செப்பேட்டுப்பகுதி ஆரம்பிக்கிறது. வேள்விக்குடி என்ற ஊர் சங்க காலத்தில் (பொ.ஆ.மு.300) கொற்கைக் கிழான் நற்கொற்றன் என்ற அந்தணர்க்குப் பல்யாக முதுகுடுமி பெருவழுதி என்ற பாண்டிய மன்னால் வழங்கப்பட்டுள்ளது. நடுவிலே நாட்டின் ஆட்சி களப்பிரரிடம் மாறியிருந்தது. அந்நாளிலே தானக்கிராமத்தை அந்த வேற்று அரசாங்கம் கைப்பற்றிவிட்டது. மீண்டும் பாண்டிய வம்சத்தின் அரசு நிறுவப்பட்ட பிறகும் நெடுங்காலம் கழித்தும் (கிட்டத்தட்ட 500 ஆண்டுகள்) அந்த ஊர் முதலில் தானம் பெற்றவனுடைய வம்சத்தாருக்குக் கிடைக்கவில்லை. பாண்டியர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டு 6 அரசர்களின் காலம் முடிந்து 7ஆம் அரசனான பராந்தக நெடுஞ்சடையனுடைய ஆட்சியிலேயே முன்னர் தானம் பெற்ற அந்தணரின் வாரிசு அச்செய்திகளை அரசரிடம் கூறுகின்றார். மீண்டும் அவ்வூர் பராந்தக நெடுஞ்சடையனின் காலத்தில் (பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டில்) சான்றுகளைக் காட்டியப் பிறகு அந்தணரின் வாரிசுக்கு கொடையாக வழங்கப்படுகிறது. இதுவே இதன் செய்திச் சுருக்கமாகும்.[7]

ஜடிலப்பராந்தகனின் 3ஆம் ஆட்சியாண்டில் (பொ.ஆ. 770) ஒரு நாள் முதலில் தானம் பெற்ற கொற்கைகிழான் வழி வந்தோரில் ஒருவன், மதுரை மாநகரில் கொதித்தெழுந்து கூச்சலிட்டான். அதைக்கேட்ட அரசன் அவனை அழைத்து விசாரித்தான். விவரத்தை அறிந்த மன்னன் அவன் கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுமாறு கட்டளையிட்டான். நற்சிங்கன் என்னும் அவனும் அவ்விதமே எடுத்துக்காட்ட அரசன் தன் முன்னோரால் வழங்கப்பட்டதைத் தானம் வழங்குவதாக அப்பொழுதே உத்தரவிட்டான். நற்சிங்கன் மீண்டும் தானம் பெற்று, அந்தத் தானம் முழுவதையும் தனக்கே வைத்துக்கொள்ளாமல், அதில் ஒரு பகுதியை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு, மற்றப் பாகத்தைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்தான். இத்தானத்தை நிறைவேற்றுவதற்குக் கரவந்தபுரத்து வாசியான மூவேந்த மங்கல பேரரையன் ஆன வைத்ய சிகாமணி மாறன் காரி என்பான் நியமிக்கப்பட்ட செய்தியும் காணப்படுகிறது.[8] பிரசஸ்தி பாடியவன் சேனாபதி ஏனாதி ஆன சாத்தஞ்சாத்தன். செப்பேட்டில் பொறித்தவன் சுத்தகேசரிப் பெரும்பணைக்காரன். எழுத்தனுக்கும் சில நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையும் காண்க

மூலம்

உசாத்துணை

மேற்கோள்கள்

  1. T.S. SUBRAMANIAN. "How a Pandya ruler tackled rebellion". hindu.com. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
  2. Chopra, Pran Nath; T.K. Ravindran; N. Subrahmanian (2003) [1979]. History of South India. S. Chand & Company Ltd.. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-219-0153-7. இணையக் கணினி நூலக மையம்:6357526.
  3. Rao Bahadur H. Krishna Sastri, தொகுப்பாசிரியர் (1983) [1924]. Epigraphia Indica Vol. XVII. Archaeological Survey of India. பக். 291–309.
  4. Padmaja, T. (2002). Temple of Krishna in South India: History, Art and Traditions in Tamilnadu. Abhinav Publications. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-398-4. இணையக் கணினி நூலக மையம்:52039112.
  5. Ramaswamy, Vijaya (1997). Walking Naked: Women, Society, Spirituality in South India. Indian Institute of Advanced Study. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85952-39-0. இணையக் கணினி நூலக மையம்:37442864.
  6. Pierre-Yves Manguin, A. Mani, Geoff Wade (2011). Early Interactions Between South and Southeast Asia. Institute of Southeast Asian Studies. பக். 292. https://books.google.co.in/books?id=FuCYBgAAQBAJ&pg=PA292&dq=velvikudi+copper+plates&hl=en&sa=X&ved=0ahUKEwj0wKbxt9PSAhXMpI8KHVaGAswQ6AEIGTAA#v=onepage&q=velvikudi%20copper%20plates&f=false.
  7. "Miscellaneous Inscriptions From the Tamil Country XVII.- Copper-plate grants from Sinnamanur, Tirukkalar and Tiruchchengodu & Two Pandya copper-plate grants from Sinnamanur". whatisindia.com. பார்த்த நாள் 30 சனவரி 2017.
  8. "South Indian Inscriptions, PANDYA INSCRIPTIONS, INTRODUCTION". whatisindia.com. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.