வேலுத்தம்பி தளவாய்

வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765–1809) திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மகராஜா பலராம வர்மா குலசேகரப் பெருமாள் மன்னராக வீற்றிருந்த காலத்தில் தளவாய் மற்றும் படை தளபதியாக இருந்தவர். வேலுத்தம்பி என அறியப்பட்ட இவர் நாஞ்சில் நாட்டு களரி வீரன் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

வேலாயுதன் செண்பகராமன் தம்பி (வேலுத்தம்பி) 1765-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம்) கல்குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட இரணியல் தேசத்து தலக்குளம் வலிய வீட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்சு மயிற்றி பிள்ளை, திருமதி.வள்ளியம்மை பிள்ளை தங்கச்சி.

திருவிதாங்கூர் மாமன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் "செண்பகராமன்" பட்டம் பெற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வேலுதம்பி. இவரது குடும்ப பெயர் "இடப்பிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசனான இறையாண்ட தலக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்" என்பதாகும். தலக்குளத்து வேலுத்தம்பி என பரவலாக அறியப்பட்டார். இவருடைய சகோதரன் பத்மநாபன் தம்பி ஆவார். வேலுத்தம்பி நாயர் சமூகத்தை சேர்ந்தவர். மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர். இது தவிர தமிழ், உருது, இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். யாருக்கும் அஞ்சாத வீரம், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யும் தைரியம், இளம்வயதிலேயே களரி கலை திறமை கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத தலக்குளம் மண்ணின் வீரனாக காணப்பட்டார்.

அரசு காரியக்கார் (தாசில்தார்)

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவிதாங்கூரில் மாமன்னன் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலம் முடிந்து மன்னர் தர்ம ராஜா கார்த்திகை திருநாள் ராமவர்மா ஆட்சி புரிந்து வந்தார். இவரது ஆட்சி காலம் திருவிதாங்கூரின் பொற்காலம் என போற்றப்படுகிறது. ஒருமுறை மன்னரின் ராமேஸ்வர பயணத்தில் அவருடைய உடைமைகள் களவு செய்யப்பட்டது. அரசவை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாட்டின் தெற்கு பகுதியில் ஒரு திறமையான வீரன் இருப்பதை அமைச்சர்கள் அறிந்தனர். அந்த வீரன் மன்னரை சந்திக்க அரசு ஆணை வந்தது.

பின்னர், களவு பொருட்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு இருபது வயது களரி வீரனாக இருந்த தலக்குளத்து வேலுதம்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. தன்னுடைய நாஞ்சில் நாட்டு படையுடன் புறப்பட்ட வேலுதம்பி, மூன்று நாட்களில் களவு போன பொருட்களுடன் மன்னர் முன் வந்து நின்றார். வேலுதம்பியின் வீரத்தை கண்ட மன்னர் தர்ம ராஜா, வேலுதம்பியை மாவேலிக்கர எனும் இடத்தில் வரி வசூலிக்கும் அரசு காரியக்காராய் (தாசில்தார்) நியமித்தார்.

முளகு மடிசீல காரியக்கார் (நிதி அமைச்சர்)

திருவிதாங்கூரின் மன்னராக மகாராஜா அவிட்டம் திருநாள் பலராம வர்மா குலசேகரப் பெருமாள் ஆட்சி புரிந்த போது, நாடு அமைதியின்மை மற்றும் பல்வேறு உள் மற்றும் வெளி அரசியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. பதினாறு வயது சிறுவனாக இருந்த மன்னர் பலராம வர்மா, தளவாய் ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரி என்பவரின் செல்வாக்கின் கீழ் இருந்தார். சர்வாதிகார ஆட்சி புரிந்த சங்கரன் நம்பூதிரி நாணயமற்றவர், இதற்கு முன் இருந்த சிறந்த நிர்வாகியான தளவாய் ராஜா கேசவதாசன் மரணத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர். நம்பூதிரியும் அவரது ஆதரவு அமைச்சர்களான தக்கலை சங்கரநாரயணன் செட்டி மற்றும் மாத்தூதரகன் ஆகியோர் அரசுக்கு ஏதிராக செயல்பட்டனர். அதிக வரி வசூலித்து மக்களை கொடுமைப்படுத்தினர். ஆங்கில அரசுக்கு முழு ஆதரவாக செயல்பட்டனர். இவர்களது ஊழல்களால் திருவிதாங்கூரில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு கருவூலம் காலியானது.

தளவாய் சங்கரன் நம்பூதிரி திருவிதாங்கூர் அரசின் கஜானாவை நிரப்புவதற்காக, அனைத்து தாசில்தாரர்களையும் அழைத்து மூன்றாயிரம் ரூபாய் அரசுக்கு நிதி கட்டுமாறு கட்டளையிட்டார். ஆனால், மாவேலிக்கர தாசில்தாரான வேலுதம்பி மறுத்தார். நான் நாஞ்சில் நாடு சென்று நிதி திரட்டி கொண்டு வருகிறேன் என்று மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு மாவேலிக்கரையில் இருந்து தலக்குளம் வந்து சேர்ந்தார். தளவாய் சங்கரன் நம்பூதிரி மற்றும் அவரது இணை அமைச்சர்கள் சேர்ந்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினார். நிதி கட்டாமல் கால தாமதம் செய்த வேலுதம்பியை கைது செய்ய அரசு ஆணை பிறப்பித்தார் தளவாய் சங்கரன் நம்பூதிரி. கோபம் கொண்ட வேலுதம்பி தலக்குளம், இரணியல் மற்றும் தக்கலையில் இருந்து ஆயுதம் தாங்கிய ஒரு பெரும் படையை திரட்டி திருவனந்தபுரம் கோட்டையை முற்றுகையிட்டு மன்னருக்கு எதிராக கலகம் செய்தார். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என்றும், கொடுங்கோல் ஆட்சி புரியும் சங்கரன் நம்பூதிரியை தளவாய் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஊழல் அமைச்சர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மன்னருக்கு கோரிக்கை விடுத்தார்.

வேலுதம்பியின் எதிர்ப்பை கண்ட மன்னர் உண்மை அறிந்து சங்கரன் நம்பூதிரியை தளவாய் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். ஊழல் அமைச்சர்களான சங்கரநாரயணன் செட்டி மற்றும் மாத்தூதரகன் ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி கொடுக்கப்பட்டு, காதுகள் அறுக்கப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். தளவாய் சங்கரன் நம்பூதிரி நாடு கடத்தப்பட்டார். அதன் பிறகு, மன்னர் பலராம வர்மா திருவிதாங்கூர் அரசின் புதிய தளவாய் ஆக ஐயப்பன் செண்பகராமன் பிள்ளை என்பவரை  நியமித்தார். வேலுதம்பியை முளகு மடிசீல காரியக்காராய் (நிதி அமைச்சர்) நியமனம் செய்தார்.

தளவாய் (தலைமை அமைச்சர்)

1802-ம் ஆண்டு மன்னர் பலராம வர்மா, வீரத்திலும் திறமையிலும் சிறந்து விளங்கிய நாஞ்சில் நாட்டு தலக்குளத்து வேலாயுதன் செண்பகராமன் தம்பி என்ற வேலுத்தம்பியை திருவிதாங்கூர் அரசின் உயந்த பதவியான தளவாய் பதவியில் நியமனம் செய்தார். வேலுதம்பி திருவிதாங்கூரின் தளவாய் பதவியை ஏற்ற பின்னர் நாட்டின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஆங்கில அரசுடன் ஒத்துழைத்து போவது என்று முடிவு செய்தார். மக்களுக்கு நியாயமான வரியை விதித்தார். ஆங்கில அரசுக்கு முறையான கப்ப தொகையும் செலுத்தி வந்தார். ஆருவாமொழி கோட்டை, பத்மனாபபுரம் கோட்டை, உதயகிரி கோட்டை மற்றும் இரணியல் கோட்டைகளை பலப்படுத்தினார். கிராமங்களில் ஆயுத பயிற்சி மையங்களை நிறுவினார். பல ஆலயங்களை சீரமைத்தார். திருவிதாங்கூரில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியாக பதவி வகித்தவர் கர்னல் மெக்காலே என்பவர் ஆவார். இவர் வேலுத்தம்பியுடன் சிறந்த நட்பை கொண்டிருந்தார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடம் வேலுத்தம்பி செல்வாக்கு பெற்றிருந்தார்.

வேலுதம்பி தளவாயின் ஆட்சி நேர்மையாகவும் அதேநேரம் மிகவும் கடுமையாகவும், கடினமாகவும் இருந்தது. குற்றம் புரிபவர்களுக்கு கொடுமையான தண்டனைகளை வழங்கினார். அரசுக்கு எதிராக செயல்படுபவரின் வலது கையின் விரல்கள் துண்டிக்கப்பட்டது. களவு மற்றும் குற்ற செயல்கள் செய்பவரின் காது மற்றும் மூக்கு அறுக்கப்பட்டது. மக்களை துன்புறுத்தினாலோ, பெண்களை மானபங்க படுத்தினாலோ பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி மற்றும் உயிரோடு மரத்தில் ஆணி அறைந்து தலை துண்டிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டது

ஒருமுறை தன்னுடைய தலக்குளம் வலிய வீட்டின் வரியை குறைத்த காரணத்தினால் அரசு ஊழியரின் வலது கையின் விரல்களை வெட்டினார். அதற்கு காரணமாக இருந்த தனது தாயையும் தண்டித்தார் என்பது வரலாறு. தலக்குளத்து வேலுதம்பி தளவாய் என்ற பெயரை கேட்டாலே திருவிதாங்கூர் சமஸ்தானமே நடுங்கியது. வேலுதம்பி தளவாயின் இந்த கடுமையான ஆட்சியை கண்டு சில ஆங்கில அதிகாரிகளே மிரண்டனர். வேலுதம்பியின் ஆட்சி திருவிதாங்கூர் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. நாட்டில் களவும், குற்ற செயல்களும் குறைந்தன. மக்கள் தைரியமாக வெளியில் நடமாட தொடங்கினர். பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருந்தனர். ஆனால் வேலுதம்பியின் நேர்மையான மற்றும் கடுமையான ஆட்சியை மற்ற அமைச்சர்களான குஞ்சு நீலம் பிள்ளை, உம்மிணி தம்பி ஆகியோர் எதிர்த்தனர். வேலுதம்பியை கவிழ்க்க ஆங்கில அரசுடன் கைகோர்த்து சதி திட்டம் தீட்டினர்.

ஆங்கில அரசின் துணைப்படை ஒப்பந்தம்

திருவிதாங்கூரில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியான கர்னல் மெக்காலே, வேலுதம்பியின் ஆதரவை பயன்படுத்தி கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி கொண்டு வந்த துணைப்படை திட்டத்தின் கீழ் ஒரு புதிய உடன்படிக்கையை தாக்கல் செய்தார். அதன்படி திருவிதாங்கூரில் இருக்கும் நாயர் படைகளை கலைக்க வேண்டும் என்றும், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி படைகள் மன்னருக்கும், நாட்டிற்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றும், மொத்த பராமரிப்பு செலவுகளுக்காக வருடத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் கப்ப தொகை கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அறிவித்தார். இதற்கு வேலுதம்பி ஆதரவு அளித்தார். ஆங்கில அரசு நேமம் எனும் இடம் வரை தங்களுடைய படையை அமைத்த பிறகு தான் இந்த உடன்படிக்கையை தாக்கல் செய்தது, வேறு வழியின்றி மன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

நாயர் படை கலைப்பு உத்தரவை எதிர்த்து நாயர் படையை சேர்ந்த போர் வீரர்கள் வேலுத்தம்பிக்கு எதிராக கலவரம் செய்தனர். இதற்கு மக்கள் ஆதரவும் இருந்தது, கலவரம் வெடித்தது. நாயர் படைகள், வேலுத்தம்பியை உடனடியாக பதவிமாற்றம் செய்ய வேண்டும் எனவும் ஆங்கில கம்பெனியுடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மன்னருக்கு கோரிக்கை விடுத்தனர். வேலுத்தம்பி கர்னல் மெக்காலேவிடம் உதவி நாடினார். இதை சாதகமாக பயன்படுத்திய கர்னல் மெக்காலே ஆங்கில கம்பெனி படைகளை அனுப்பி கலவரத்தை அடக்கினார். கலவரத்திற்கு காரணமான தளபதிகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். நாயர் படைகள் கலைக்கப்பட்டு ஆங்கில கம்பெனி படைகள் திருவிதாங்கூரில் முகாமிட்டது.

திருவிதாங்கூர் அந்த நேரத்தில் அனைத்து உள் அரசியல் பிரச்சினைகள் காரணமாக கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. திருவிதாங்கூரில் ஏற்பட்ட நிதி நெருக்கடி குறித்து முழுமையாக அறிந்திருந்தும் கர்னல் மெக்காலே உடன்படிக்கை படி அதிக கப்பம் கட்ட வேலுத்தம்பிக்கு அழுத்தம் கொடுத்தார். மன்னர் பாலராம வர்மா, கர்னல் மெக்காலேவை பணி இடமாற்றம் செய்ய மதராஸ் மகாணத்தின் ஆங்கில அரசின் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதினார். இதனால் கோபம் கொண்ட மெக்காலே உடனடியாக கப்பம் கட்டுமாறு வேலுத்தம்பிக்கு கட்டளையிட்டார். அதிகமான கப்ப தொகை வேலுத்தம்பிக்கு அதிருப்தியை உண்டாக்கியது.

ஆங்கில அரசு கேட்ட எட்டு லட்ச ரூபாய் கப்ப தொகை கட்டாமல் இருந்தால் ஆங்கில அரசுடன் பகை ஏற்படகூடும் என்று எண்ணிய மன்னர், வேலுதம்பியிடம் கப்ப தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டார். நாட்டு மக்களிடம் அதிகமான வரி வசூலித்து, அதை ஆங்கில அரசுக்கு கப்பமாக கட்ட வேலுதம்பி கடுமையாக மறுத்தார். ஆனால், மன்னரின் உத்தரவிற்கு கட்டுபட்டு ஆங்கில அரசிடம் அதிக கப்பம் கட்ட மூன்று மாதம் அவகாசம் கேட்டார். பல மாதங்கள் ஆகியும் கப்பம் கட்டாமல் கால தாமதம் செய்தார். மன்னர், கப்பம் கட்ட காலதாமதம் செய்யும் வேலுத்தம்பியை, மெக்காலே உதவியுடன் பதவிநீக்கம் செய்ய உள்ள தகவலை மன்னரின் மனைவியான அருமனை அம்மா மூலமாக வேலுத்தம்பி அறிந்தார்.

வேலுதம்பி ஆங்கில கம்பெனி நிர்வாகத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். ஆரம்பத்தில் தன்னுடன் ஒத்துழைத்த போன ஆங்கில அதிகாரி கர்னல் மெக்காலே நாட்டை கைப்பற்ற நடத்திய சூழ்ச்சியை புரிந்து கொண்டார். அதிகமான கப்ப தொகை மற்றும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் ஆங்கில அரசு அதிகாரி மெக்காலே மீது கடுமையான கோபம் கொண்டார். நாட்டையும், மக்களையும் காப்பாற்ற ஆங்கில அரசை எதிர்ப்பதே ஒரே வழி என்று முடிவு செய்தார். வேலுத்தம்பி தனக்கு எதிராக இருப்பதை அறிந்த கர்னல் மெக்காலே திருவனந்தபுரம் வந்து மன்னரை சந்தித்து உடனே கப்பம் கட்டுமாறு கூறினார். இல்லையென்றால் திருவிதாங்கூர் மீது போர் புரிந்து நாட்டை கைப்பற்றுவோம் என்று மிரட்டினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்படும் உங்கள் தளவாய் சிறை செல்ல நேரிடும் என்று கூறினார். ஆனால் வேலுதம்பி தளவாய், இனி மேல் ஒரு ரூபாய் கூட கப்பம் கட்ட முடியாது என்று மறுத்தார். நாட்டிற்கு எதிராக செயல்படும் ஆங்கில அரசை வேரோடு வெட்டி எடுத்து அரபிக் கடலில் வீசுவேன் என்று கூறினார்.

சுதந்திரப் போரில்

திருவாங்கூர் அரசின் திவானாக இருந்த இவர், கொச்சியில் அமைச்சராக இருந்த பலியாத்தச்சன் ஆதரவுடன் கொல்லத்தை அடுத்த குந்தாராவில் (திருவனந்தபுரத்திற்கும் ஆல்வாயிக்கும் இடையில் உள்ள ஊர்) தமது முகாமை அமைத்து, ஆல்வாயில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று அவர்களது ஆக்ரமிப்புகளை அகற்றினார்.

குண்டறை விளம்பரம்

பீரங்கி பலம் வாய்ந்த ஆங்கில அரசை எதிர்க்க நாட்டு மக்களின் ஆதரவை பெற எண்ணிய தளவாய் வேலுதம்பி 1809-ம் ஆண்டு ஐனவரி மாதம் 11-ம் தேதி கொல்லம் அருகே குண்டறை எனும் இடத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்கள் முன் ஒரு வீர உரையை நிகழ்த்தினார். இதில் ஆங்கில அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். நம் நாட்டிற்கு வந்த வெள்ளையர்கள் நாட்டை ஆள முயற்சிப்பதும், நம்மை அடிமையாக்கி அதிக வரி வசூலித்து சித்ரவதை செய்வதையும் தடுக்க ஆங்கில அரசுக்கு எதிராக போர் செய்ய வருமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

மக்கள் மனதில் இருந்த அடிமை உணர்வை தகர்த்தெறிந்த இந்த வீர உரை பிற்காலத்தில் "குண்டறை விளம்பரம்" என சரித்திர வரலாறு படைத்தது. குண்டறை விளம்பரம் நாட்டு மக்களின் ஆழ் மனதின் வீரத்தை தட்டி எழுப்பியது. அடிமை சங்கிலியை அறுத்தெறிய மக்கள் வெள்ளம் போருக்கு தயாராகியது. முறுக்கேறிய இளைஞர்கள் மற்றும் வலிமையான பெரியவர்கள் என மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் வேலுதம்பி தளவாயின் தலைமையின் கீழ் அணி திரண்டனர். படை பலம் அதிகரித்தது. ஆங்கில அரசுக்கு எதிராக பல வன்முறை செயல்கள் நடைபெற்றது. பல ஆங்கில வீரர்கள் வெட்டி கொல்லப்பட்டனர். ஆங்கில ராணுவ தளங்கள் பல சிதைக்கப்பட்டன. ஆங்கில அரசின் மேல் வேலுதம்பிக்கு இருந்த வெறித்தனத்தை ஆங்கில அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.

திருவாங்கூர் மன்னனின் அமைதி ஒப்பந்தமும் விளைவும்

வேலுத்தம்பி தளவாய் அருங்காட்சியகம்

கர்னல் லீஜர் தலைமையில் வந்த ஆங்கிலேயப் படை உதயகிரி மற்றும் பத்மநாபபுரம் கோட்டையை வெற்றி கொண்டு பாப்னாம்கோடு என்ற ஊருக்கு வந்தது. அச்சத்தில் திருவாங்கூர் மன்னன் பிரிட்டிஷ் கம்பெனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அடிபணிந்தார். இதன் விளைவாக தளவாய் வேலுத்தம்பியைக் கைது செய்ய திருவாங்கூர் மன்னரே உத்தரவிட்டார்.

இதனை அறிந்த வேலுத்தம்பி தமது சகோதரர் பாப்புத் தம்பியுடன் தப்பி மன்னாட்டியிலுள்ள கோவில் பூசாரி வீட்டில் தஞ்சமடைந்தனர்.இதற்கு மேல் போராட முடியாது ஆங்கிலேயரிடம் கைதாக நேரும் என்று உணர்ந்த வேலுத்தம்பி சகோதரரிடம் தன்னைக் கொல்ல வேண்டினார். அவர் மறுக்கவே கத்தியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். ஆங்கிலேயரால் அவரது உடல் கண்ணன் மூலா என்ற ஊரின் முச்சந்தியில் தொங்கவிடப்பட்டது.

வேலுதம்பி தளவாய் சிலை மற்றும் போர்வாள்

கேரள அரசு மாவீரன் வேலுதம்பி தளவாயின் வீரத்தை போற்றும் வகையில் கேரள அரசின் தலைமை செயலகத்தில் அவரது சிலையை நிறுவி உள்ளது. அவர் இறந்த இடமான கொல்லம் மண்ணடியில் மணிமண்டபம் கட்டி அரசு அருங்காட்சியகம் அமைத்துள்ளது மேலும் வேலுதம்பி தளவாய் நினைவாக அவர் பிறந்த இடமான குமரி மாவட்டம் தலக்குளம் முதல் இறந்த இடமான கேரளத்தின் மண்ணடி வரை கேரள அரசின் அரசு பேருந்தை இயக்கி வருகிறது. (தற்போது தலக்குளம் முதல் கோட்டையம் வரை)

ஆங்கில படை வீரர்களின் பல தலைகளை துண்டித்த மாவீரன் வேலுதம்பி தளவாய் பயன்படுத்திய வாள் 150 ஆண்டுகளுக்கு மேலாக கிளிமானூர் அரச குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு  திரு.இராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்திய ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 50 ஆண்டுகளாக புதுடில்லி ராஷ்டபதி பவன் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு கேரள அரசின் முயற்சியால் கேரளத்திற்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதை செலுத்தி திருவனந்தபுரம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு வேலுதம்பி தளவாயின் பெருமையை போற்றும் வகையில் 2010-ம் ஆண்டு அவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

உதவிநூல்

சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 80, 81

இந்திய சுதந்திரப் போராட்டம்; இலந்தை சு. இராமசாமி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.