வே. ஆனைமுத்து

வே. ஆனைமுத்து (பிறப்பு: ஜூன் 21, 1925) பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வருபவர்.

வே. ஆனைமுத்து

பிறப்பு மற்றும் குடும்பம்

பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 இல் வே.ஆனைமுத்து பிறந்தார்.

1940 இல் வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியரின் வழிகாட்டுதலில் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றார். 1944 இல் வேலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு சுயமரியாதை கொள்கைகளை ஏற்று, இன்று வரை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதோடு, தனது எழுத்தின் மூலமும், பல்வேறு பணிகளின் மூலமும் தொடர்ந்து வளர்த்து வருகிறார்.

திருமணம்

22.08.1954 அன்று கடலூர் வண்ணரப்பாளையம் ஆ. சுப்ரமணிய நாயகர் - தையல்நாயகி இணையரின் மகள் சுசீலாவை மணந்தார்.

மக்கள் எழுவர்: தமிழ்ச்செல்வி, பன்னீர்ச்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் ஆவர்.

பணி

  • 1948 : அண்ணாமலைப்பல்கலையில் இடைநிலைக்கல்வி. திராவிடநாடு, பல்லவநாடு, அணில், குமரன் ஆகிய இதழ்களில் கட்டுரையும் பாடல்களும் எழுதினார்.
  • 1949 : தந்தைப்பெரியாரின் கொள்கைப்பரப்பும் பணி
  • 1950 : கடலூர் திருக்குறளார் வீ.முனிசாமியை ஆசிரியராகக் கொண்டு, ந.கணபதியுடன் இணைந்து "குறள் மலர்" எனும் கிழமை இதழ் திருச்சியில் 1950இல் தோன்றக் காரனமாய் இருந்ததோடு, அவ்விதழின் துணை ஆசிரியராகவும், பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார்.
  • 1952 முதல் தந்தைப்பெரியாருடன் இணைந்து தீவிர இயக்கப் பணிகள்
  • 1957 : திருச்சியில், "குறள் முரசு" எனும் கிழமை இதழை தனது சொந்தப் பொறுப்பில் தொடங்கினார். இவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் பெரியாரால் போற்றப்பட்டு, குடியர்சு இதழிலும் வெளியிடப்பட்டது.
  • 1957 : அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு, 18 திங்கள் கடுங்காவல் தண்டனை.
  • 1960 - 73 : தமிழநாடு தனிப்பயிற்சிக் கல்லுரி திருச்சியில் தொடக்கம். பாவேந்தர் அச்சகம் நிறுவினார். மாநிலமெங்கும் இயக்கப் பயிற்சி வகுப்புக்கள் 1970 இல் சிந்தனையாளர்கள் கழகம் தொடக்கம்
  • 1974 : திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் "பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள்" தொகுத்தளித்தார். சிந்தனையாளர் திங்கள் இதழ் தொடக்கம்
  • 1975 : திராவிடர் கழகத்திலிருந்து நீக்கம்
  • 1976 : சேலம் அ.சித்தையன், சீர்காழி மா.முத்துச்சாமி, ஆ.செ.தங்கவேலு, ந.கணபதி, தக்கோலம், கா.ந.ஜலநாதன் ஆகியோருடன் இணைந்து "பெரியார் சம உரிமைக் கழகம்"
  • 1978 : மைய அரசுக் கல்வியிலும், வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி குடியசு தலைவர் என். சஞ்சீவரெட்டியிடம் நேரில் கோரிக்கை உ.பி. மாநிலம் முசாபர் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்தல், இதன் வழி முதன் முறையாக பிகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • 1979 : தில்லியில் பெரியார் நூற்றாண்டு விழா, இந்தியத் துணைத் தலைமையமைச்சர் பாபு ஜகஜீவன்ராம் தொடங்கி வைத்தார். இவரால் தொகுக்கப்பட்ட "தந்தைப் பெரியாரின் இடஒதுக்கீடு" கருத்துக்களின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பில் இந்தியத் தலைமையமைச்சர் மொரார்ஜி தேசாயுடன் சந்திப்பு. இடஒதுக்கிடு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளைப் பீகார், கேரளா, கர்நாடகா, உ.பி., இராசசுதான், அசாம், மே.வங்கம் முதலிய மாநிலங்களில் நடத்தினார். தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு 31 சதவீத விழுக்காட்டிலிருந்து 60 சதவீதமாக உயர்த்தக்கோரி முதல்வர் எம்.சி.ஆரிடம் கோரிக்கை, இதன் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • 1980 : சிந்தனையாளனில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பல நூல்களாக வெளிவந்தன. கன்சிராம் நடத்திய "பாம்செஃப்" (BAMCEF) கூட்டங்களில் தலைமை ஏற்கவும் சிறப்புரையாற்றவும் அழைக்கப்பட்டார். 1982 : இவரின் பல போராட்டங்களைத் தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, அதைத் தொடர்ந்து மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
  • 1988 : பெரியார் சமஉரிமைக் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமக்கட்சி என பெயர் மாற்றம்.
  • 1991 : தில்லியில் பெரியார் பிறந்தநாள் விழாக்கள், வடமாநிலங்களில் பெரியார் கொள்கை பரப்புரைகள்
  • 1994 : ஈழத்தலைவர் ச.அ.டேவிட் ஒத்தாசையில் "பெரியார் ஈரா" என்ற ஆங்கிலத் திங்கள் இதழ் தொடக்கம்
  • 1996 : திருக்குறள் மாநாடு, பெரியார் பற்றிய சொற்பொழிவு மற்றும் ஆய்வுக்காக மலேசியப்பயணம். வட இந்தியாவின் 30 மாவட்டங்களில் இடஒதுக்கீடு பரப்புரைகள்
  • 2005 : மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பயணம்

நடத்திவரும் இதழ்கள்

சிந்தனையாளன் - மாதம் ஒருமுறை வரும் இதழ் PERIYAR ERA - MONTHLY MAGAZINE

இவரது படைப்புகள்

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள் - தொகுப்பாசிரியர்

  1. சிந்தனையாளர்களுக்குச் சீரிய விருந்து
  2. தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்
  3. பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?
  4. விகிதாசார இடஒதுக்கீடு செய்! (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
  5. பெரியாரியல் - இரண்டு தொகுதிகள்
  6. தத்துவ விவேசினி (தொகுப்பு)

இன்னும் பல நூல்கள்....

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி நூலை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தகவலுக்கு

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.