வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில்

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார். இம்மலையின் மீது ஆண்களும், வயது (பருவம்) அடையா சிறுமிகளும், மூதாட்டிகளும் ஏறி வழிபடுகின்றனர். இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும் மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர். கையில் மூங்கில் கழிகள் உதவியுடன் ஏறுகிறார்கள். மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்.

அடிவாரக் கோயில்

மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர், அம்மன் செளந்திர நாயகி கடவுளர்கள் உள்ளனர். இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.

சிறப்பு

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களுக்கு உரிய திருத்தலங்கள் வெவ்வேறாக உள்ளன. ஆனால் வெள்ளியங்கிரி திருத்தலம் ஒன்றே பஞ்சபூதத்தலமாகவும், பஞ்சமுகக் கிரிகளைத் தன்னுள் அடக்கியதாகவும் காட்சியளிக்கிறது. இங்குப் பெருமான் பஞ்சலிங்கேஸ்வரராகவும், இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் இருக்கின்றார்கள். கிரிமலையில் உள்ள குகை ஆண்டான் குகை சிவ ரூபமான கிரியின் குகை எனப்படுகிறது. இக்குகையின் முன்புறம் பிருதிவி, அப்பு லிங்கங்களும், குகைகளும், தேயு, வாயு, ஆகாய லிங்கங்களும் உள்ளன. சிவபெருமான், உமையவளின் விருப்பதற்கிணங்க, வெள்ளியங்கிரி மூலஸ்தானத்தில் உள்ள வெள்ளியம்பலத்தில் நடனமாடி அருள் புரிந்தார் என்பர்.[1]

பயண வசதி

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.

மேலும் பார்க்க

வெள்ளியங்கிரி மலை

மேற்கோள்கள்

  1. ஆ.செல்லப்பா, உமையவள் உகந்த முக்கண்ணன் நடனம்,குமுதம் ஜோதிடம், 5.3.2004

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.