வெப்ப வேதியியல்
வெப்ப இயக்கவியல், இயற்பியல் வேதியியல் ஆகிய துறைகளில், வெப்ப வேதியியல் அல்லது வெப்பவிரசாயனவியல் (Thermochemistry) என்பது, வேதியியல் வினைகளின்போது உருவாகும் அல்லது உறிஞ்சப்படும் வெப்பம் பற்றிய ஆய்வுத் துறை ஆகும். வெப்பவேதியியல், கலத்தல், நிலை மாற்றம், வேதியியல் வினை போன்ற மாற்றங்களில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றங்கள் பற்றிக் கவனத்தில் கொள்கிறது. இது, இவற்றுடன் தொடர்புடைய வெப்பக் கொள்ளளவு, எரிதல் வெப்பம், உருவாதல் வெப்பம் போன்றவற்றின் அளவுகளைக் கணக்கிடுவதையும் உள்ளடக்குகிறது. வெப்பவேதியியலில் இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன.
- லவோசியே மற்றும் லாப்பிளாஸ் விதி (1782): ஒரு மாற்றத்தோடு தொடர்புடைய வெப்பப் பரிமாற்றம், எதிர்த்திசையில் நிகழக்கூடிய அதே மாற்றத்தோடு தொடர்பான வெப்பப் பரிமாற்றத்துக்குச் சமமாகவும் எதிராகவும் இருக்கும்.
- ஹெஸ்ஸின் விதி (1840): மாற்றம் ஒன்று, ஒரு படியிலோ அல்லது பல படிகளிலோ நடைபெற்றாலும், தொடர்புடைய வெப்பப் பரிமாற்றம் சமமாகவே இருக்கும்.

உலகின் முதலாவது பனிக்கட்டிக்-கலோரிமானி. இது 1782–83 மாரி காலத்தில் அன்டனி லவோசியே மற்றும் பியரே-சைமன் லாப்பிளாஸ் என்பவர்களால், பல்வேறு மாற்றங்களின்போது உருவாகும் வெப்பத்தைத் தீர்மானிப்பதில் பயன்படுத்தப்பட்டது. கணிப்பு முறை, ஜோசேப் பிளாக் என்பவரால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மறை வெப்பம் என்னும் கருத்துருவின் அடிப்படையில் அமைந்தது. இந்த ஆய்வுகளே வெப்ப இயக்கவியலின் அடிப்படையாக அமைந்தன.
இவ்விரு விதிகளும், முதலாவது வெப்ப இயக்கவியல் விதிக்கு (1850) முற்பட்டவை. எனினும், முதலிரண்டும், முதலாவது வெப்ப இயக்கவியல் விதியின் நேரடி விளைவே எனக் காட்ட முடியும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.