தேனி - அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில்

வீரப்ப அய்யனார் கோயில் தமிழ்நாடு, தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அல்லிநகரத்திற்கு மேற்கே மலையடிவாரத்தில் மலையிலிருந்து வரும் வாய்க்கால் எனும் சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயில் சிறப்பான முறையில் கட்டப்பட்டிருந்தாலும் சுவாமியின் கருவறைக்கு மேல் மேற்கூரை அமைக்கப்படவில்லை. சுயம்பு தோற்றமாக உள்ள சுவாமி ஐயனார் சிவ அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். பொதுவாக சுயம்புத் தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே சிறப்பு என்பதால் இங்கு சுவாமி கருவறையின் மேல்பகுதி கூரையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

வீரப்ப அய்யனார் கோயில் வளாகத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிலை

சித்திரைத் திருவிழா

தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியிலுள்ள வீரப்ப ஐயனார் மலைக்கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வீரப்ப அய்யனார் சுவாமி முதல் நாள் தேனி - அல்லிநகரம் நகர்ப் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். சித்திரை முதல் நாள் காலை 9 மணியளவில் தேனி -அல்லிநகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வீரப்ப அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் காவடிகளுடன் ஊர்வலமாக நகர் பகுதியில் இருந்து மலைக் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். பகல் 2 மணியளவில் மலைக் கோவில் வளாகத்தைச் சென்றடைகிறது. இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, இளநீர் காவடி, பால்குடம் போன்ற நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

வீரப்ப அய்யனாருக்கு உகந்த மலர் மல்லிகை என்பதால் பக்தர்கள் மல்லிகை மலரிலான மாலைகளை சுவாமிக்குப் பூசைப் பொருட்களுடன் கொண்டு சென்று வணங்குகின்றனர். வீரப்ப அய்யனாருக்குப் பிடித்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் என்பதால் கோயில் வளாகத்தில் பல இடங்களில் சர்க்கரைப் பொங்கல் வைத்தும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆடு உள்ளிட்ட பலிகள் இங்கு ஏற்றுக் கொள்வதில்லை. இருப்பினும் அருகில் உள்ள கருப்பசாமி கோயிலுக்குச் செய்வதாக இவ்வளாகத்தில் ஆடு, கோழி போன்றவை பலியிடப்பட்டு அசைவ உணவு உண்ணும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுயம்பு வடிவ வளர்ச்சி

சுயம்பு வடிவிலான வீரப்ப அய்யனார் வளர்ச்சி அடைந்து வருவதாக இங்குள்ள கோயில் பூசாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுவாமிக்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளைத் தற்போது இலகுவாக போட முடியவில்லை என்பதைக் கொண்டு சுயம்பு வடிவத்தின் வளர்ச்சியை அறியலாம் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

நம்பிக்கைகள்

கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. தங்கள் மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பதும் இங்கு வரும் பக்தர்கள் சிலரின் நம்பிக்கை.

உசாத்துணை

தமிழகத்தில் உள்ள பிற அய்யனார் ஆலயங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.