விநாயகர் (பக்தித் தொடர்)

விநாயகர் என்பது சன் தொலைக்காட்சியில்[2] திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 07.00 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 22, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான பக்தித்தொடர் ஆகும். இது சோனி டிவியில் ஒளிபரப்பாகும் விக்னஹர்தா கணேஷ் என்ற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும்.

விநாயகர்
வகை பக்தித் தொடர்
நாடு இந்தியா
மொழி தமிழ் (குரல்மாற்றம்)
பருவங்கள் 1
இயல்கள் 432 ( தமிழ்)
தயாரிப்பு
தயாரிப்பு அபிமன்யு சிங்
நிகழ்விடங்கள் மும்பை
ஓட்டம்  21 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
கான்டிலோ என்டர்டெயின்மென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
பட வடிவம் 576i (SDTV) 1080i (HDTV)
முதல் ஒளிபரப்பு 9 அக்டோபர் 2017 (2017-10-09)[1]
இறுதி ஒளிபரப்பு 16 மார்ச்சு 2019 (2019-03-16)

இத்தொடர் இந்துக்கடவுள் விநாயகரை மையமாகக் கொண்ட தொடர் ஆகும். இது விநாயகர் பற்றி நாம் அறியாத பல கதைகளைக் கூறுகிறது.

கதைச்சுருக்கம்

பார்வதி தேவி தமக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவருக்கு சிவபெருமான் ஆசி வழங்கினார். அவர் அறிவுறுத்தல்படி பார்வதி தம் சகோதரர் திருமாலை நோக்கி பல காலங்கள் புண்ணிய விரதம் என்னும் கடுந்தவம் மேற்கொண்டார். இறுதியாக திருமால் தோன்றி அவர் விருப்பப்படி அவருக்கு மும்மூர்த்திகளின் அம்சத்துடன் ஒரு பிள்ளை பிறக்கும் என வரமருளினார்.

கஜாசுரன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து அவரைத் தன் வயிற்றினுள் அடக்கி வைக்கும் வரத்தைப் பெற்றான். பிறகு அவன் தேவர்களை சிறை பிடித்தான். திருமகள் வழங்கிய சந்தனத்தின் மூலம் பார்வதி ஒரு சிறுவனின் சிலையை உருவாக்கினார். திருமாலின் தாமரை மலர் பட்டவுடன் அவன் உயிர்பெற்றான். இதனால் பார்வதி மகிழ்ச்சி அடைந்தார். தேவியர்கள் அனைவரும் வந்து அச்சிறுவனை வாழ்த்தினர். அவனைக் காண சனீசுவரன் ஆவல் கொண்டார். அவரது தீய பார்வை சிறுவன் மீது படுகிறது. இதையறிந்த பார்வதி தேவி கோபம் கொண்டு துர்க்கையாக மாறி சூலாயுதத்தால் சனீசுவரனின் காலைத் தாக்கினார். பிறகு அவர் தம் மகனின் முகத்தைக் கண்டு சாந்தமடைந்தார்.

நந்திதேவர் திருமாலின் அருளுடன் கஜாசுரனைத் தாக்கினார். இதன்மூலம் விடுதலையான சிவபெருமான் கஜாசுரனை வதம் செய்தார். பிறகு அவர் தாம் பலகாலமாகப் பிரிந்திருந்த பார்வதியைக் காணச் சென்றார். இதையறிந்த பார்வதி ஆவலுடன் சிவபெருமான் வருகைக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகணங்கள் யாரும் இல்லாததால் பார்வதி தம் மகனுக்கு சக்திகள் வழங்கி அவனைக் காவலுக்கு நிறுத்தினார். அவரிடம் தாம் ஒருவரையும் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று அச்சிறுவன் வாக்களித்தான்.

பார்வதியின் மகன் சிவபெருமானை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பிறகு பூதகணங்கள், தேவர்கள், எமதர்மன் என பலரும் பார்வதியின் மகனிடம் போரிட்டு தோற்றனர். இறுதியில் திருமால் மற்றும் பிரம்மர் இருவரும் அச்சிறுவனிடம் சமாதானம் பேசினர். ஆனால் அவன் பிடிவாதமாக இருந்தான். இதனால் கோபமடைந்த சிவபெருமான் தம் திரிசூலத்தைக் கொண்டு அச்சிறுவனின் தலையைக் கொய்தார். பிறகு அச்சிறுவன் பார்வதியின் புதல்வன் என்று அறிந்ததும் தேவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு வந்த பார்வதி தம் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். பிறகு கோபம் கொண்ட பார்வதி தமது அம்சங்களான தச மகா வித்யாக்களை அழைத்தார். அவர்கள் தேவர்களை அழித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் சிவபெருமான் தாம் பார்விதியின் பிள்ளையை உயிர்ப்பிப்பதாக வாக்களிக்கிறார். இதையடுத்து பார்வதி சாந்தமானார். பிறகு அங்க வந்த காசிப முனிவர் தாம் சிவனுக்கு அளித்த சாபத்தைப் பற்றிக் கூறுகிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமான் தம்மிடம் வரம் பெற்ற அரக்கர்களைக் காப்பதற்காக சூரிய தேவன் மீது திரிசூலத்தை எய்தார். இதனால் கோபமடைந்த அவரது தந்தை காசிப முனிவர் சிவபெருமானின் மகனும் ஒரு நாள் இவ்வாறு திரிசூலத்தால் கொல்லப்படுவான் என்று சாபம் விடுத்தார். அச்சாபத்தின் விளைவே நடந்த நிகழ்வுகள் என்பது தெரிய வருகிறது.

பிறகு சிவபெருமான் வடக்கில் தலை வைத்து படுத்திருக்கும் சிசுவின் தலையைக் கொண்டு வருமாறு தேவர்களிடம் கூறுகிறார். அவர்கள் ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்தனர். அஸ்வினி குமாரர்கள் அந்தத் தலையை விநாயகருக்குப் பொருத்தினர். பிறகு சிவபெருமான் அவருக்கு உயிர் தந்தார்.

கதாபாத்திரங்கள்

  • உசைர் பசர்- விநாயகர்
  • அகங்க்ஷா பூரி- பார்வதி
  • மல்கன் சிங்- சிவன்
  • ராகுல் ஷர்மா- விஷ்ணு
  • ப்ரீத்திகா சவுகான்- சரஸ்வதி
  • மீர் அலி- இந்திரன்
  • ஆனந்த் கோராடியா- நாரதர்
  • பஸந்த் பட்- கார்த்திகேயன்

குறிப்புகள்

  • இந்தியாவின் வடமாநிலங்களில் கார்த்திகேயன்(முருகன்) விநாயகருக்கு முன்பு பிறந்தவராகக் கருதப்படுகிறார். ஆகவே இத்தொடரிலும் அவ்வாறே கதைக்களம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.