வி. தர்மலிங்கம்

விஸ்வநாதர் தர்மலிங்கம் (பெப்ரவரி 5, 1918 - செப்டம்பர் 2, 1985) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர் 1985, செப்டம்பர் 2 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

வி. தர்மலிங்கம்
V. Dharmalingam

நாஉ
உடுவில் / மானிப்பாய் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1960–1983
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 5, 1918(1918-02-05)
இறப்பு 2 செப்டம்பர் 1985(1985-09-02) (அகவை 67)
தாவடி, இலங்கை
தேசியம் இலங்கைn
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
பிள்ளைகள் த. சித்தார்த்தன்
படித்த கல்வி நிறுவனங்கள் ஸ்கந்தவரோதயா கல்லூரி
யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி
இனம் இலங்கைத் தமிழர்

இளமைக் காலம்

மிகவும் செல்வமான குடும்பத்தில் 1918 பெப்ரவரி 5 ஆம் நாள் பிறந்தவர் தர்மலிங்கம். குடும்பத்தின் ஒரே பிள்ளையான இவரை உறவினர் ‘இலங்கையர்’ என்றும் ‘தர்மர்’ என்றும் அழைப்பர். இவரின் தந்தையார் விசுவநாதர் அமெரிக்கா சென்று முதுமாணிப் பட்டம் பெற்ற கல்விமான் ஆவார்[1] தருமலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) என்ற அரசியல் கட்சியின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையார் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

தர்மலிங்கம் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துப் பின்பு 1944 ஆம் ஆண்டில் உடுவில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவும், பின்பு அதன் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

1952ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட போது அதன் தலைவர் தந்தை செல்வா காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட போது, அவரை ஆதரித்து மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார்.[1]

1960 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். உடுவில் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] அப்பொழுது இவருடன் போட்டியிட்ட கல்விமான் ஹன்டி பேரின்பநாயகம், கூட்டுறவாளர் வீ. வீரசிங்கம், கம்யூனிஸ்ட் வி. பொன்னம்பலம் போன்றவர்கள் தோல்வியடைந்தனர்.

சூலை 1960, மார்ச் 1965, மே 1970 தேர்தல்களில் மீண்டும் தெரிவானார்.[4][5][6]

1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தோற்றுவித்தனர். தர்மலிங்கம் மானிப்பாய் (உடுவில்) தொகுதியில் விடுதலைக் கூட்டணி சார்பில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] ஆறாவது அரசியல் திட்டத்திலிருந்த சட்ட மூலத்திற்கு அமைய சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்ததனால் இவரின் பதவி 1983 அக்டோபர் 8 இல் பறிக்கப்பட்டது.[8]

சமூகப் பணி

இளம் வயதிலேயே இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டார். ஆபிரிக்க ஆசிய விடுதலை இயக்கத்தின் உப தலைவராகவும் இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவராகவும் மற்றும் பல இடதுசாரி இயக்கங்களிலும் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.[2]

ஆன்மீகப் பணி

தருமலிங்கம் அரசியலில் மட்டுமன்றி ஆன்மீக வழியிலும் அதிக ஈடுபாடுகொண்டவர். தெல்லிப்பழை துர்க்கா தேவத்தானத்தின் அறங்காவலராக விளங்கினார். கோப்பாயில் உள்ள ஆசிரியர் கலாசாலை அமைந்திருக்கும் காணி தர்மலிங்கத்தின் குடும்பத்தால் அன்பளிப்பு செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்துக்கு தருமலிங்கம் மண்டபம் எனப் பெயர் சூட்டப்பட்டது.[2]

படுகொலை

தர்மலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் மு. ஆலாலசுந்தரம் இருவரும் 1985, செப்டம்பர் 2 ஆம் நாள் இனந்தெரியாதோரால் மானிப்பாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். தர்மர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி கேள்வியுற்று இச்செயல் ‘கொடுமையானது’ என்றும், ‘கொடூரமானது’ என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. பெரும்பான்மை இன மக்களாலும் நேசிக்கப்பட்ட ‘தர்மர்’, ஆசி. கணேசவேல், வீரகேசரி, செப்டம்பர் 2, 2013
  2. பெரும்பான்மை இனத்தவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர் தருமர், தினகரன், செப்டம்பர் 2, 2010
  3. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka. http://www.island.lk/2008/01/18/features11.html.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.