வாழும் தொல்லுயிர் எச்சம்

வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் (living fossil) எனக் குறிப்பிடுவர். பொதுவாக இவற்றுக்கு நெருக்கமான உறவு கொண்ட வாழும் இனங்கள் இருப்பதில்லை. அழிந்துபோன ஒரு இனத்துக்கும் வாழும் ஒரு இனத்துக்கும் இடையேயான ஒற்றுமை பெரும்பாலும் தோற்ற நிலையாகவே இருக்கும். இது அறிவியல் அடிப்படையில் அமையாத, ஆனால் ஊடகங்களில் மட்டும் பயன்படுகின்ற ஒரு சொல்.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாகக் கருதப்பட்ட சீலகாந்த் என்ற மீனினத்தின் வாழும் தொல்லுயிர் எச்சம் 1938 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வினங்கள் பெரும் இன அழிவு நிகழ்வுகளிலிருந்து தப்பிப் பிழைத்திருப்பதுடன், பொதுவாக குறைவான வகைப்பாடுசார் பல்வகைமைகளைத் தக்கவைத்திருப்பனவாகவும் உள்ளன. மரபியல் தடைகளைத் தாண்டிப் பல இனங்களாகப் பெருகியிருக்கக்கூடிய இனங்களை "வாழும் தொல்லுயிர் எச்சங்கள்" எனக் குறிப்பிட முடியாது.

மேலோட்டம்

தொல்லுயிர் எச்சமும் வாழும் கிங்கோவும்
170 மில்லியன் ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் எச்ச கிங்கோ இலைகள்
வாழும் கிங்கோ பிலோபா தாவரம்

"வாழும் தொல்லுயிர் எச்சம்" என்பதற்கும் "லாசரசு உயிரினவகை" (Lazarus taxon) என்பதற்கும் இடையே சில வேளைகளில் நுட்பமான வேறுபாட்டைக் காண்பது உண்டு. "லாசரசு உயிரினவகை" என்பது சடுதியாகத் தொல்லுயிர் எச்சப் பதிவுகளாகவோ, இயற்கையில் வாழும் இனங்களாகவோ மீண்டும் தோன்றும் உயிரினவகையைக் குறிக்கும். அதேவேளை, "வாழும் தொல்லுயிர் எச்சம்" அதன் நீண்ட இருப்புக் காலத்தில் மாற்றம் அடையாததாகக் காணும் இனத்தைக் குறிக்கிறது. ஒரு இனப்பிரிவின் முற்றாகப் பதிலீடு செய்யப்படும் முன்னரான அதன் சராசரி வாழ்வுக்காலம் இனத் தொகுதிகள் இடையே பெருமளவுக்கு வேறுபட்டுக் காணப்படுகிறது. சராசரியாக இது ஏறத்தாழ 2 - 3 மில்லியன் ஆண்டுகள். ஆகவே, அழிந்துபோய்விட்டதாகக் கருதப்படும் ஒரு இனம் இப்போது வாழும் இனமாகக் காணப்பட்டால் அதை "வாழும் தொல்லுயிர் எச்சம்" என்றில்லாமல் "லாசரசு உயிரினவகை" என்று கூறலாம். சீலகாந்த் (coelacanth) என்னும் வரிசை தொல்லுயிர் எச்சப் பதிவுகளில் இருந்து 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டது. ஆனால், இந்த வரிசையைச் சேர்ந்த வாழும் இனம் ஒன்று 1938ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திரும்பத் தோன்றும் இனங்கள் வெற்றிடத்தில் இருந்து தோன்ற முடியாதாகையால், எல்லா "லாசரசு உயிரினவகை"களையும் "வாழும் தொல்லுயிர் எச்சங்கள்" எனக் கொள்ளமுடியும்.

குறிப்புகள்

    இவற்றையும் பார்க்கவும்

    வெளி இணைப்புக்கள்



    உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.