வளிமங்களின் இயக்கக் கோட்பாடு

வளிமங்களின் இயக்கக் கோட்பாடு (Kinetic theory of gases) என்பது வளிமங்களின் அணுக்களும் மூலக்கூறுகளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன எனக் கூறுகிறது. வளிமங்களுக்கு தனியான கன அளவு இல்லை. அது கிடைக்கும் இடத்தினை முழுமையாக நிரப்புகின்றது. பாயில் விதி, சார்லசு விதி போன்ற விதிகள் வளிமத்தின் கன அளவு, அவைகளின் அழுத்தம் மற்றும் தனிவெப்ப நிலை இவைகளுக்குண்டான தொடர்பினைக் காட்டுகின்றன. வளிமத்தின் இயக்க நிலைக் கோட்பாட்டின் முக்கிய கருது கோள்களாவன:

  • எந்த பொருளும் அதன் வளிம நிலையில் மிகப் பல அணுக்கள் அல்லது மூலக் கூறுகளால் ஆனது.
  • ஒரு குறிப்பிட்ட வளிமத்தின் அணுக்கள் எல்லா வகையிலும் ஒரேமாதிரி இருக்கும்.வேறுஒரு வளிம அணுக்களிலிருந்து மாறுபட்டு இருக்கும்.
  • இவ்வணுக்கள் ஓயாது பல வேகங்களுடன் பல திசைகளில் இயங்கிக் கொண்டுள்ளன.இந்நிகழ்வின்போது அவைகள் ஒன்றோடொன்றும் கொள்கலனின் சுவரிலும் மோதுகின்றன.
  • கொள்கலனின் சுவர்களில் மோதுவதால் கலத்துள் எடுத்துக் கொண்ட வளிமத்திற்கு அழுத்தம் உண்டாகிறது.
  • அந்த அணுக்கள் உன்னத மீட்சித் திறன் கொண்டிருப்பதால் மோதல் காரணமாக ஆற்றலை இழப்பதில்லை, ஆனால் மாறாத சராசரித் திசை வேகம் கொண்டதாக இருக்கும்.
  • அணுக்கள் மிகச்சிறியதாக இருப்பதால், கலனின் கொள்ளளவை விட மிகவும் சிறியது. அணுவின் பருமனளவை எடுத்துக் கொள்வதில்லை.
  • பொதுவாக அணுக்களிடையே அதிக இடைவெளி உள்ளதால் அவைகளுக்கிடையே ஈர்ப்பு விசையோ விலக்கு விசையோ இல்லை.
  • சம வெப்பநிலையில் அணுக்களின் இயக்க ஆற்றல் மாறுவதில்லை. வெப்பநிலை மாறும் போது ஆற்றல் மாறுகிறது.

இவையே வளிமங்களின் இயக்க கோட்பாட்டின் சில முக்கிய கருது கோட்களாகும்.

உசாத்துணை

  • உயிரி இயற்பியல்-1, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.