வல்லோனியா

வல்லோனியா (Wallonia, French: Wallonie [walɔni], German: Wallonie(n), டச்சு: Wallonië [ʋaːˈloːnijə] (listen)) பெல்ஜிய மண்டலங்களில் ஒன்று. நாட்டின் தென்பகுதியில் இருப்பதால் வல்லோனியாவில் முதன்மையாக பிரெஞ்சு-பேசுவோர் மிகுந்துள்ளனர். பெல்ஜியத்தில் பிரெஞ்சு பேசுவோரில் 55% பேர் இங்குதான் வசிக்கின்றனர். தவிரவும் நாட்டின் மூன்றில் ஒருபங்கு மக்கள்தொகை இங்குள்ளனர். பிளாண்டர்சுக்கு மாறாக வல்லூன் மண்டலம் பெல்ஜியத்தின் பிரான்சிய சமூகத்துடன் இணைக்கப்படவில்லை. கிழக்கிலுள்ள செருமானியம் பேசும் சிறுபான்மையினர் பெல்ஜியத்தின் செருமானிய சமூகத்தின் அங்கமாகும். பெல்ஜியத்தின் மொழிவாரி சமூகங்கள் (பிளம்மிய,பிரான்சிய,இடாய்ச்சு மூன்று சமூகங்கள்) பண்பாட்டு மற்றும் கல்விக்கான முழு அதிகாரம் பெற்றவை. இவற்றிற்கு தனியான அரசும் சட்டமன்றமும் உள்ளன.

வல்லூன் மண்டலம்
Région wallonne
Wallonische Region
பெல்ஜிய மண்டலம்

கொடி

சின்னம்
பண்: "லெ சான்ட் டெசு வல்லோன்சு"
நாடுபெல்ஜியம்
தலைநகரம்நமூர்
அரசு
  செயற்பாடுவல்லூன் அரசு
  அரசாளும் கட்சிகள் (2014–2019)சீர்திருத்த இயக்கம் (MR), cdH
  தலைவர்-அமைச்சர்வில்லி போர்சுசு (MR)
  சட்டமன்றம்வல்லோனியப் பாராளுமன்றம்
  அவைத்தலைவர்ஆந்த்ரே அன்டோய்ன் (cdH)
பரப்பளவு
  மொத்தம்16,844
மக்கள்தொகை (1 சனவரி 2015[1])
  மொத்தம்35,85,214
  அடர்த்தி210
இனங்கள்வல்லூன்கள்
Demographics
  மொழிகள்பிரெஞ்சு, செருமானியம் (தவிர மொழிவசதியுள்ள நகராட்சிகளில் இடச்சு)[2]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBE-WAL
வல்லூன் நாள்செப்டம்பரின் மூன்றாம் ஞாயிறு
இணையதளம்www.wallonie.be

தொழிற்புரட்சியின்போது தொழில்முனைப்பில் வல்லோனியா இங்கிலாந்திற்கு அடுத்த நிலையில் இருந்தது. இங்குள்ள நிலக்கரி, இரும்பு படுவுகள் இதற்கு உறுதுணையாக இருந்தன. இதனால் இந்த மண்டலம் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை செல்வச்செழிப்புடன் இருந்தது. பெல்ஜியத்தின் வளமிக்க பாதியாக விளங்கியது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கனரகத் தொழிற்சாலைகளின் முக்கியத்துவம் பெரிதும் குறைந்தது; பிளெம்மிய மண்டலம் வல்லோனியாவை விட செல்வம் மிகுந்ததாக மாறியது. வல்லோனியாவில் தற்காலத்தில் வேலையின்மை மிகுந்துள்ளது; பிளாண்டர்சை விட வல்லோனியாவின் மொ. உ .உ குறிப்பிடத்தக்களவில் குறைவாக உள்ளது. இருபகுதிகளுக்குமிடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் மொழி பிரிவினையும் பெல்ஜியத்தின் அரசியலில் முதன்மையான சிக்கலாக விளைந்துள்ளது. பிளாண்டர்சு தனிநாடு கோருமளவில் இந்த முரண்பாடு பெரிதாகியுள்ளது.

வல்லோனியாவின் தலைநகரம் நமூராக இருப்பினும் மிகப்பெரும் மக்கள்தொகை உடைய நகரமாக சார்லெராய் உள்ளது. வல்லோனியாவின் பெரும்பாலான முதன்மை நகரங்களும் மூன்றில் ஒருபங்கு மக்கள்தொகையும் சாம்ப்ரே- மெயூசு பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ளன. இந்த பள்ளத்தாக்குப் பகுதியே முன்னர் பெல்ஜியத்தின் தொழில்துறையின் மையப்பகுதியாக இருந்தது. வடக்கிலுள்ள மத்திய பெல்ஜிய சமவெளி, பிளாண்டர்சு போலவே, வேளாண்மைக்கு ஏற்றது. தென்கிழக்கிலுள்ள ஆர்டென் காடு, குன்றுப்பகுதியாகவும் மிகவும் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாகவும் விளங்குகிறது. வல்லோனியாவின் வடக்கில் பிளாண்டர்சும் நெதர்லாந்தும், தெற்கில் பிரான்சும் கிழக்கில் ஜெர்மனியும் லக்சம்பர்க்கும் எல்லைகளாக உள்ளன. 1980 முதல் வல்லோனியா பிரான்கோபோனியில் அங்கத்தினராக உள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.