வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்று வட இந்தியாவில் உள்ள காற்றை குளிர்ச்சியடைய வைக்கிறது. அதனால் வட இந்தியாவில் உள்ள காற்றின் அடர்த்தி அதிகமாகிறது. அதே சமயத்தில் இந்தியப்பெருங்கடல் பகுதி காற்று சூடாக உள்ளதால் அவை அடர்த்தி குறைவாக உள்ளன. இதனால் வட இந்தியாவில் இருந்து காற்று தெற்கு நோக்கி வீசத்தொடங்குகின்றன. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசுவதால் இக்காற்றை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று என்கிறோம்.

அவ்வாறு வீசும் போது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை கொணரும் இக்காற்று தக்காண பீடபூமிக்கு மழையை கொண்டுவருகிறது. இந்தக்காற்றினால் கரையோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமை, தமிழகத்தின் கரையோரம், பாண்டிச்சேரி மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன.

தென்மேற்கு பருவக் காற்றினால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழக கரையோரப் பகுதிகள் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் 60% மழையை பெறுகின்றன.[1]. தமிழகத்தின் உள் பகுதிகள் 40% - 50% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன[1]. தென்மேற்கு பருவக் காற்றினால் மழையைப்பெறும் கர்நாடகம், கேரளா, இலட்சத்தீவுகள் போன்றவை 20% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன[1].

வடகிழக்குப் பருவமழை ஏற்படக் காரணம்

இது “குளிர்காலப் பருவப்பெயர்ச்சி” எனவும் அழைக்கப்படுகிறது. புவியின் வட அரைக்கோளக் குளிர்காலப் பருவத்தில் கதிரவனின் கதிர்கள் தென் அரைக்கோளத்தின் மேல் வீழ்கின்றன. தென் அரைக்கோளப் பகுதியில் வளி சூடாகி மேலெழும்புகிறது; அப்பகுதியில் தாழ்வழுத்தம் ஏற்படுகிறது. அதை நிரப்ப வட அரைக்கோள வளி “குளிர் கிளம்பல்” (cold surge) நிகழ்த்துகிறது. இக் குளிர் கிளம்பிய காற்று பெயரும் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி, இலங்கை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் மழையாகப் பொழிகின்றது.[2]

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது.[3]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமும் மழையளவும்

[4]

(இராச)மன்னார்குடியில் வடகிழக்கு பருவமழை மேகத்திரள்
வருடம்தொடக்க தேதிபெய்த மழையின் அளவு (mm)சராசரி மழையளவு (mm)வேறுபாடு (%)
199019 அக்டோபர்468483- 3
199120 அக்டோபர்488477+ 2
19922 நவம்பர்514470+ 9
199321 அக்டோபர்784479479
199418 அக்டோபர்534418+ 12
199523 அக்டோபர்260479- 46
199611 அக்டோபர்592477+ 24
199713 அக்டோபர்810478+ 70
199828 அக்டோபர்619478+ 30
199921 அக்டோபர்517483+ 7
20002 நவம்பர்346483-28
200116 அக்டோபர்382483-21
200225 அக்டோபர்395483-14
200319 அக்டோபர்435469-7
200418 அக்டோபர்435432+ 1
200512 அக்டோபர்773432+ 79
200619 அக்டோபர்497432+ 15

2014 ஆம் ஆண்டு

அக்டோபர் 18 அன்று தமிழ்நாடு, கேரளா, தென் ஆந்திரா, கருநாடகாவில் தொடங்கியது.[5]

2015 ஆம் ஆண்டு

அக்டோபர் 28 அன்று தொடங்கியது[6]

2016 ஆம் ஆண்டு

அக்டோபர் 30 அன்று தொடங்கியது.

மேற்கோள்கள்

  1. http://www.imdchennai.gov.in/northeast_monsoon.htm
  2. library.thinkquest.org
  3. india meteorological department
  4. imd chennai
  5. Northeast monsoon brings good rainfall to south India
  6. City can expect monsoon magic from today
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.