லைசோசைம்

லைசோசைம் (lysozyme) பாக்டீரிய செல் சுவரை உடைக்கக் கூடிய ஒரு நொதியாகும். இது மியூரமிடேஸ் அல்லது என்-அசிட்டைல் மியூரமைட் கிளைக்கன் ஹைட்ரலேஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நொதி வகைப்பாட்டு எண் : (EC 3.2.1.17 )

லைசோசைம் கண்ணீர், மனித எச்சில், தாய்ப்பால், கோழை ஆகியவற்றில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் நீயூட்ரோஃபில்களின் சைட்டோப்பிளாசக் குருணைகளிலும் இது உள்ளது. முட்டை வெள்ளைக்கருவில் பெருமளவில் லைசோசைம் உள்ளது.

மனிதனில் லைசோசைம் lyz ஜீன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

செயல்கள்

இந்த நொதி கிராம் சாயமேற்கும் பாக்டீரியங்களின் செல்சுவரில் காணப்படும் புரதச்சர்க்கரைகளை உடைக்கின்றது. இப்புரதச்சர்க்கரையில் காணப்படும் N-அசிட்டைல் மியூராமிக் அமிலத்தை N-அசிட்டைல் குளுக்கோசமைன் உடன் பிணைத்திருக்கும் கிளைக்கோசைடிக் பிணைப்பை நீராற் பகுப்பதன் மூலம் இந்த உடைப்பை இவை செய்கின்றன.

லைசோசைம் நமது உடலின் பிறவி நோய்எதிர்ப்புத் திறனில் ஒரு பகுதியாகும். பிறந்த குழந்தையில் காணப்படும் நுரையீரல் - காற்றுக்குழாய் வளர்ச்சிப் பிறழ்வு நோயில் லைசோசைம் அளவு குறைவாக உள்ளது அறியப்பட்டுள்ளது. தாய்ப்பால் நோய்க்கிருமிகள் அற்றது. எனினும் அதில் நோய்க்கிருமிகளை அழிக்கும் லைசோசைம் அடங்கி உள்ளது. தாய்ப்பால் தரப்படாத குழந்தைகளில் புட்டிப்பால் கொடுக்கப்படுவதால் பல நோய்க்கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம்.

வரலாறு

கோழி முட்டை வெள்ளைக்கருவின் நோய்க்கிருமி எதிர்ப்புத்திறன் 1909 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. 1922 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ஃபிளம்மிங் தான் லைசோசைம் எனும் பதத்தை உருவாக்கினார்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.