லர்கானா

லர்கானா (ஆங்கிலம்: Larkana; உருது : لاڑکانہ ; சிந்தி : لاڙڪاڻو) என்பது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்திற்கு தெற்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நகரின் பாய்கிறது.[1] உலகின் பிற நகரங்கள் அல்லது பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான புனித ஆலம்களின் காரணமாக இது புனித ஆலம் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது சிந்து சமவெளி நாகரிக தளமான மொகஞ்ச-தாரோவின் தாயகமாகும்.[2] இந்நகரம் பாகிஸ்தானின் 15 வது பெரிய நகரமாகும் .

இந்த நகரம் லர்கானா மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது. முன்னர் 'சந்த்கா' என்று அழைக்கப்பட்டது. லர்கானா நகரம் கர் கால்வாயின் தென் கரையில், ஷிகார்பூர் நகருக்கு தெற்கே சுமார் 40 மைல் (64 கி.மீ) தொலைவிலும், மெஹருக்கு வடகிழக்கில் 36 மைல் (58 கி.மீ) தொலைவிலும் அமைந்துள்ளது.[3] 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கட் தொகை 490,508 ஆகும்.

புவியியல்

லர்கானா அட்சரேகை 24 56 '00' மற்றும் தீர்க்கரேகை 67 11 '00' என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[4] இது வடமேற்கு சிந்தில் லர்கானா கோட்டத்தில் அமைந்துள்ளது.

காலநிலை

லர்கானா கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமான பாலைவன காலநிலையைக் (BWh) கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் அதிகப்பட்ச வெப்பநிலை 53 °C ஐ எட்டும். குளிர்காலத்தில் வெப்பநிலை −2. C ஆகவும் குறைவதால் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த வெப்பமான காலநிலையினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கோடைகால வெப்பத்தினால் ஓரிரு பேர் உயிரிழந்தனர்.[5] வெப்பமான காலநிலையின் போது நகரத்தில் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.[6] மேலும் சிலர் மயக்கமடைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மே முதல் செப்டம்பர் வரை வெப்பமான நாட்கள் தொடர்கின்றன. அதன்பிறகு பருவமழை பெய்யும். சில நேரங்களில் அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.[7]

போக்குவரத்து

லர்கானா ரயில் நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இது லர்கானாவை சிந்து மற்றும் பாகிஸ்தானின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. லர்கானாவிலிருந்து மாகாண தலைநகர் கராச்சிக்கு விவசாய பொருட்களை கொண்டு செல்லவ பாகிஸ்தான் ரயில்வே உதவுகிறது. டோக்ரியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், லர்கானா நகரின் தெற்கே 28 கி.மீ தூரத்திலும் உள்ள மொகன்-சா-தாரோ அருகே மொகன்சதாரோ விமான நிலையம் அமைந்துள்ளது.

கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் குவெட்டா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களுடன் லர்கானா பேருந்துகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கள்

சிந்து விளையாட்டுகளின் பிறப்பிடமாக லர்கனா காணப்படுகின்றது. இங்கு 2009 ஆம் ஆண்டில் 12 வது சிந்து விளையாட்டுகள் நடைப்பெற்றது. இதில் கால்பந்து, சீருடற்பயிற்சி, வளைகோற் பந்தாட்டம், ஜூடோ, கராத்தே, சுவர்ப்பந்து, மேசை வரிப்பந்து, வரிப்பந்து, கைப்பந்து, பளுதூக்குதல் மற்றும் வுஷு போன்ற விளையாட்டுகளும் அடங்கும். பாரம்பரிய விளையாட்டுகளான கோடி கோடி, மலகாரா, மற்றும் வஞ்சவட்டி போன்ற விளையாட்டுக்களும் நடைப்பெறும்.[8] லர்கானா நகரம் லர்கானா புல்ஸ் என்ற துடுப்பந்தாட்ட கழகத்தின் தாயகமாகும்.[9] லர்கானா வரிபந்து சங்கம் நகரின் வரிப்பந்து திடலில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிறுவர்களைப் பயிற்றுவிக்கிறது.[10]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.